கட்டுரைகள்

பொது சிவில் சட்டமும் – முஸ்லிம் தனியார் சட்டமும்

எச். ஹாமீம் முஸ்தபா

Published

on

இந்திய முஸ்லிம்கள் குறித்தும் பின்பற்றுகின்ற சிவில் சார்ந்த முஸ்லிம் தனியார் சட்டம் குறித்து எதிர்நிலை பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
தென்னைமரப்பூக்கள் பார்ப்பதற்கு அழகானவை. அந்தப்பூக்கள் ஒரு சமூகத்தின் திருமணமேடையில் மங்கலம் சார்ந்த சடங்குபொருள்களுள் ஒன்றாக இடம்பெற்றிருக்கிறதுஇன்னொரு சமூத்தின் இறப்புச்சடங்கில் துயரத்தின் அடையாளமாக இடம் பெற்றிருக்கிறது.

தண்ணீரில் நீந்தும் மீன் வங்கத்துப் பார்ப்பனருக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட உணவாகவும் ஏனைய பார்ப்பனருக்கு விலக்கப்பட்டதாகவும் இருக்கிறது. இப்படி இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பின்பற்றப்படும் மரபுகளும், பழக்க வழக்கங்களும் நூற்றுக்கணக்கில் இருகின்றன.இவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் இந்தியாவின் சட்டஅமைப்பு.

பொதுசிவில்சட்டம் என்ற ஒன்றைக் குறித்த விவாதம் இல்லாமலேயே இந்தியச்சமூகம் இத்தனை ஆண்டுகால வாழ்க்கையை கடந்து வந்திருக் கிறது. அவரவரும் அவர்களின் நம்பிக்கைகளின் பெயரால், பாரம்பரியங் களின் பெயரால், மரபுகளின் பெயரால் பேணப்படும் நடைமுறைகள் மனித சமூகத்தை பின்னிழுக்கின்றன , அல்லது அவை காட்டாண்டித்தனமாக இருக்கின்றன என்று பொதுச்சமூகம் கருதும்போது அதனை
ஓரிடத்தில் தடுத்துநிறுத்தவும் நாகரிக சமூகம் பக்குவம் பெற்றுள்ளது.

அந்தப்பக்குவத்தின் வழியாகத்தான் இந்தியச்சமூகம் உடன்கட்டை வழக்கத்தை ஒழித்தது,குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தியது , தேவதாசிமுறையினை முற்றாக நிராகரித்தது.அனைவரும் சமமான வர்கள் என்ற அடிப்படை விழுமியத்தின் அடிப்படையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் உருவாகி நடைமுறைக்கும் வந்துவிட்டது.


பல்வேறு சமூகங்களும் தாங்கள் பின்பற்றிய வழக்கங்களை அல்லது சட்டமரபுகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி இருக்கின்றன. ஒருகாலத்தில் முஸ்லிம் சமூகத்தில் அதிகமாகப் பேசப்பட்ட ‘முத்தலாக்’ முறை இன்று கணிசமாக இல்லை என்னும் நிலைக்கு வந்துவிட்டது திருமணத்திற்கான வயதுவரம்பு குறிப்பாக பெண்களுக்கு என்பது இந்தியச்சூழலில் அனைவருக்கும் பொதுவானது என்று அரசு தெளிவு படுத்தி இருக்கிறது. இதில் அரசு தனியார் சட்டங்களையோ, சாதிகளின் பார்வைகளையோ
ஏற்றுக்கொள்ளவில்லை. சிதம்பரம் தீட்சிதர்கள் சார்ந்த பிரச்சனையில் குழந்தைத் திருமணம் என்பதும் ஒன்று என்பதை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

நூற்றுக்கணக்கில் சாதிகள், இனங்கள், பழங்குடிகள் , நிலவியல் சூழல்கள் இருக்கின்ற விரிந்துபட்ட நிலப்பரப்பு ஒன்றில் அனைவருக்கும் பொதுவான சட்டம் என்னும் பொதுப்புள்ளியை நோக்கி இப்படித்தான் பயணப்பட முடியும்.காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரும் வழக்குரைஞருமான கபில்சிபில் பொதுசிவில் சட்டம் குறித்து
எழுப்பியுள்ள கேள்விகள் முக்கியமானவை. குறிப்பாக இந்து மதத்திற்குள் காணப்படும் பிஹிதி என்னும் வழமை குறித்தும் , வடகிழக்கு மாநிலங்கள் குறித்தும் அவர் எழுப்பி இருக்கும் கேள்விகள் முக்கியமானவை .

மண்ணுக்கும் , நெருப்புக்கும், பருந்துக்கும் இறந்தவர் உடலை ஒப்படைக்கும் வழக்கங்களைக் கொண்டிருக்கிற ஒரு நிலவியல் சூழலில் மேற்குறிப்பிட்ட மூன்றிலிருந்தும் பொதுவுக்கு என்று எந்த ஒரு குறிப்பிட்ட வழக்கத்தையும் தேர்வு செய்தல் சாத்தியமில்லை. அதே வேளை பொது மயானம், இறந்தவரின் உடலைக் கொண்டுசெல்ல பொதுப்பாதையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுதல் தொடர்பாக சட்டம் இயற்றமுடியும். கறாராக நடைமுறைப்படுத்தவும் முடியும்.

இந்தியாவின் கிரிமினல் சட்டம் ஏற்கெனெவே அனைவருக்கும் பொதுவானதாக இருக்கிறது.திருட்டுக்கும், ஊழலுக்கும் , கொலைக்கும் , வன்கொடுமைக்கும் , வரதட்சணைகொடுமைக்கும் விசாரிக்கப்படும் சட்டமும் , கொடுக்கப்படும் தண்டனையும் அனைவருக்கும் பொது.

இப்போது சிவில் சட்டத்தில் இருக்கும் தனியார் சட்டக் கூறுகளை நீக்கம் செய்துவிட்டு நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான சட்ட அமைப்பைக் கொண்டுவரப்போவதாக ஒன்றிய அரசு அறிவித் துள்ளது. அதற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புகளையும் கேட்க ஆரம்பித்துள்ளது.

அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்னும் தோற்றத்தைக்
கொடுத்தாலும் முஸ்லிம்களை மட்டுமே குறிவைத்து இந்தப் பொதுசிவில் சட்டம்கொண்டுவரப்படுகிறது என்னும் உணர்வு எல்லோரிடமும் இருக்கிறது. உண்மையாகவும் இருக்கிறது. இந்தியாவில் இருக்கின்ற மற்ற எல்லா மக்களும் ஒரே சட்டத்தை பின்பற்றுவதுபோலவும் முஸ்லிம்கள் மட்டும் முஸ்லிம் தனியார் சட்டம் ஒன்றின்படி நடப்பது போலவும், அந்த சட்டவிதிகள் அநீதம் கொண்ட ஒன்றாக இருப்பதுவும் போன்றதொரு தோற்றம், இந்துத்துவத்தால் நீண்டகாலமாகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நூற்றுக்கணக்கான சட்ட முறைகள் சிவில் சட்டத்தில்
பின்பற்றப்படுகின்றன.அந்த சட்ட நடைமுறைகள் சாதி சார்ந்து, மதம் சார்ந்து , நிலவியல்சார்ந்து இருக்கின்றன. முஸ்லிம்களுக்கு என்று சிவில் சார்ந்து தனியாக சட்டம் இருப்பதுபோலவே பல்வேறு மதங்களுக்கும் , சாதி அமைப்புகளுக்கும், வடகிழக்கு மாநிலங்களை மையப்படுத்திய நிலவியலில் வாழும் மக்களுக்கும் தனித்தனியாக சிவில் சட்ட நடைமுறைகள் இருக்கின்றன. உண்மை நிலை இவ்வாறிருக்க முஸ்லிம்களை மட்டும்
குறிவைத்து ஒரு பொதுப்புத்தியை உருவாக்க இந்துத்துவம் முயற்சிக்கிறது. இதன் வழியாகஅதிகாரத்தில் தனது இருப்பினை தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்ள முயற்சிக்கிறது.


இந்துத்வத்தின் அதிகாரப்பசிக்கு முஸ்லிம் எதிர்ப்பு தொடர்ந்து இரையாக்கப் படுகிறது.மாட்டிறைச்சியின் பெயரில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் மற்றும் கொலைகள் , ஹிஜாபைமுன்வைத்து நடத்திய அரசியல், குஜராத் பில்கிஸ்பானு வழக்கில் குற்றவாளிகளைநன்நடத்தைக் கொடுத்து சிறையில் இருந்து வெளியே கொண்டுவந்தது. சிறுபான்மையினரில் உள்ள நலிந்த மாணவர்களுக்கான வழங்கப்படும் கல்வி உதவித்தொகைமீதான நெருக்கடி
என்று ஒன்றிய அரசு முஸ்லிம்களை குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் நெருக்கடிகளை வரிசைப்படுத்தலாம் .

மதம் கடந்த நிலையில் காஷ்மீரிகளுக்குரியதாக இருந்த காஷ்மீருக்குரிய சிறப்பு அந்தஸ்தை ‘முஸ்லிம் வளையத்திற்குள்’ கொண்டு வந்து அதனை ரத்து செய்தது, குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டுவந்து அதில் முஸ்லிம்களை குறிவைத்து செயல்பட்டது என்று ஒன்றிய அரசின் ஒவ்வொரு அசைவிலும் முஸ்லிம் எதிர்ப்பும் வெறுப்பும்,ஒழிப்பும்வெளிப்படையாக இருப்பதைக்காண முடியும் .

முஸ்லிம்கள் மீதான இந்த வெறுப்பையும், எதிர்ப்பையும் பொதுப்புத்திக்குள் கொண்டு செல்ல ஊடகங்கள் , இணையம், திரைப்படம் உள்ளிட்ட அனைத்து கலைவடிவங்களும் பயன்படுத்தப்படுகின்றன. காஷ்மீர் ஃபைல்ஸ், கேரள ஸ்டோரி என்றெல்லாம் முஸ்லிம்களை அவதூறு செய்து குற்றப்படுத்தும் திரைப்படங்கள் வெளிவருகின்றன. பாபரி மசூதியை இடித்து இராமர் கோவில் கட்டுதல், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல் பொதுசிவில்சட்டம் கொண்டுவருதல் என்னும் முஸ்லிம் எதிர்ப்பை
முன்னிலைப்படுத்திய வேலைத்திட்டத்தில் முதல் இரண்டும் கிட்டத்தட்ட நிறைவேறிவிட்டன.

இடையில் பாகிஸ்தானை முன்வைத்து ஒரு புல்வாமா நாடகம் .இந்தத் தொடர்ச்சியில் இப்போது பொதுசிவில்சட்டம் கொண்டுவரும் முயற்சியை அரசு
மேற்கொண்டுள்ளது. வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க கையில் எதுவும் இல்லாத சூழலில் பொதுசிவில்சட்டம் என்பதன் வழியாக மீண்டும் ஓர் முஸ்லிம் எதிர்ப்பை உருவாக்க முயற்சிக்கிறது இந்துத்துவம். பெண்களுக்கு உரிமை எதுவும் முஸ்லிம் சமூகத்தில் கொடுக்கப்படவில்லை என்னும் ஒரு பிரச்சாரத்தை இதனூடாக இந்துத்துவம் முன்வைக்கிறது.

இஸ்லாம் பெண்களுக்குவழங்கிய உரிமை களை அதன் தொடக்க நிலையிலேயே சட்டவடிவமாக்கிவிட்டது. புனிதப்பிரதியான திருக்குர்ஆன் , மற்றும் நபி முஹம்மதுவின் சொல், செயல், ஏற்பாக இருக்கின்ற நபிமொழி என்னும் ஹதீஸ் பிரதிகளிலும் இதற்கான சான்றுகளைக் காணமுடியும். இது இஸ்லாத்திற்கும் ஏனைய சமயங்களுக்கும் இஸ்லாமிய சமயத்திற்கும் இடையிலான ஓர் அடிப்படையான வேறுபாடு.

தமிழ்நாட்டில் பெண்களின் சொத்துரிமைக்காக இருபதாம் நூற்றாண்டு கடைசி வரை காத்திருக்க வேண்டியது இருந்தது. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே பெற்றோரின் சொத்தில், பிள்ளைகளின் சொத்தில், கணவனின் சொத்தில் பெண்ணிற்கு உரிமை உண்டு என்பதை சட்ட நிலையில் இஸ்லாம் தெளிவுபடுத்திவிட்டது. ஆண்/பெண் வாரிசு சொத்துரிமை குறித்து திருக்குர்ஆன் 4- ஆவது அத்தியாயம் 11,12, 176- ஆவது வசனங்கள்விரிவாகக் கூறுகின்றன .

“ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்துள்ளதற்கேற்ப பெண்கள் அவர்கள்
சம்பாதித்துள்ளதற்கேற்ப பங்கு உண்டு” ( திருக்குர்ஆன்.4;32) என்று ஆண்/பெண் இருவரையும் உழைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவர்கள் என்னும் நிலையில் வைத்து குர்ஆன் குறிப்பிட்டாலும் குடும்பத்தலைமை என்பதை ஆண்களுக்குரியதாக இஸ்லாம் பார்க்கிறது.ஆண்களின் குடும்பப் பொறுப்பு என்னும் புரிதலில் இருந்து, ஆண்கள் பெண்களின் நிர்வாகிகள் என்னும் நிலையில் இருந்து பெண்களுக்கான சொத்துரிமை அளவை இஸ்லாம்
கணக்கிடுகிறது.“ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர்.இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கிறான் என்பதும் ஆண்கள் தங்களுடைய செல்வத்தில் இருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும்” (திருக்குர் ஆன்.4;34) என்னும் குர்ஆன் வசனங்கள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன

ஆண் பெண் இணைந்துகொள்ளும் திருமண உறவில் அந்த இணைப்புக்கு பெண்ணின் சம்மதத்தை அடிப்படையான நிபந்தனையாக இஸ்லாம் வைக்கிறது. (புஹாரி 5136 முஸ்லிம் 1419)திருமணம் செய்து கொள்கிறார்கள்.கணவனோடு சேர்ந்து வாழ விருப்பம் இல்லை
விவாகரத்தை முன்மொழிய மனைவிக்கு அதிகாரம் உண்டு என்று இஸ்லாம் அனுமதிக்கிறது.


ஆண்கள் கொடுக்கும் விவாகரத்து ‘தலாக்’ என்றால் பெண்கள் கொடுக்கும் விவாகரத்து ‘குலா’எனப்படுகிறது .ஆண்/பெண் யாராக இருந்தாலும் போகிற போக்கில் விவாகரத்து சொல்லி விட்டு போய்விடமுடியாது. இன்று அரசாங்கம் அதில் பல சட்டநடை முறைகளைக் கொண்டு வந்துள்ளது. விவாகரத்து பெற விரும்புகிறவர்கள் தங்களுடைய மதத்தலைமையிடமிருந்து அவரின் முன்னிலையில் ஷரியத் சட்டப்படி விவாகரத்துப் பெறும் ஒருவர் அந்த மதத்தலைமை வழங்கிய விவாகரத்து அனுமதி உத்தரவை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் . அதன் அடிப்படையில் நீதின்றத்தில் இருந்தும் விவாகரத் திற்கான ஆணையைப்பெற வேண்டும். அந்த நீதிமன்ற ஆணையைக் கொண்டு ஏற்கெனவே திருமணத்தைப் பதிவுசெய்திருந்த
பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு அந்தத் திருமணத்தை சட்டப்படி ரத்து செய்ய வேண்டும் அதன்பிறகுதான் மறுமணம் என்னும் நிலை நோக்கி நகர முடியும்.நான் அறிந்தவரை தமிழ்நாட்டிலும் ,கேரளாவிலும் சூழல் இதுதான் .

முஸ்லிம் தனியார் சட்டத்தை முஸ்லிம்கள் தங்களின் சமய மொழியில் ஷரியத் சட்டம் என்கின்றனர். இஸ்லாமிய மரபில் இரண்டு கூறுகள் இருக்கின்றன. ஒன்று ‘தீன்’ , மற்றொன்று ‘ஷரியத்’ . ‘தீன்’ என்பது அடிப் படையான இறைக்கோட்பாடு. இறைவன் ஒருவன் அல்லாஹ். இஸ்லா மிய இறையியல் ‘தீன்’ என்பதை மாற்றமுடியாத ஒன்றாகவும் நித்தியத்துவம் கொண்டதாகவும் பார்க்கிறது. உலகின் முதல் மனிதரான ஆதம் தொடங்கி இறுதித்தூதரான
நபி முஹம்மது வரை இந்த இறைக்கோட் பாட்டைப் பேசினார்கள் என்பது இஸ்லாமிய இறையியல்.

இஸ்லாமிய இறைக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களின் வாழ்வியல் நெறிகளை ,சட்டங்களை திருக்குர்ஆன் அடிப்படையிலும் நபி முஹம்மது அவர்களின் சொல் செயல் அங்கீகாரமாக இருக்கின்ற ‘ஹதீஸ்’ என்னும் நபிமொழிகளின் அடிப்படையிலும் இஸ்லாமிய அறிஞர்கள் உருவாக்கிய சட்டவிதிகளே ஷரியத்தாக இருக்கிறது. ‘தீன்’ மாறாத ஒன்று ‘ஷரியத்’ என்பது அறிஞர்களின் பார்வைக்கு ஏற்ப மாறும் நெகிழ்வுடைய ஒன்று. இஸ்லாமிய அறிஞர்கள் தேவையான மாற்றங்களை ‘ஷரியத்’ சட்டங்களில் காலத்திற்கு
ஏற்பசெய்துள்ளார்கள். செய்து கொண்டும் இருக்கிறார்கள். சமீபத்தில் சவுதி அரேபிய அரசு கொண்டுவந்த ஒரு மாற்றம் அந்த வகையில் கவனிக்கத்தக்கது.. இந்த ஆண்டு (2023) ஹஜ் பயணம் சார்ந்த வழிகாட்டு முறையில் சவுதி அரேபிய அரசு முக்கியமான ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தது. இதுவரை ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பருவ வயதடைந்த ஆண் /பெண் இருபாலரில் ஆண்கள் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும் . ஆனால் பெண்கள்
அவ்வாறு தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாத சூழல்தான் இருந்தது. தந்தை ,கணவன் மகன் இவர்களுள் யாராவது ஒருவர் துணையுடன்தான் செல்லமுடியும் . இவர்கள் மூவரும் இல்லாத சூழலில் உடன் பிறந்த சகோதரன் போன்ற திருமணம் செய்துகொள்ள தடுக்கப்பட்ட உறவுகளின் துணையுடன்தான் ஹஜ் செய்ய முடியும். இஸ்லாமிய மரபில் இதனை ‘மஹரம்’ என்று குறிப்பிடுவார்கள் . இந்த ‘மஹரம்’ முறையில் இந்த ஆண்டு முதல்
சவுதி அராசங்கம் நெகிழ்வை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி நாற்பத்தி ஐந்து வயதுக்கு மேற்பட்ட பெண்கள் யாருடைய துணையும் இல்லாமல் தனித்து ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது. ஷரியத்தில் ஏற்பட்ட இந்த நெகிழ்வின் காரணமாக உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கில் பெண்கள் தனித்து ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள் . இந்தியாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் பெண்கள் சென்றார்கள்.

பத்துக்கும் மேற்பட்ட ஷரியத் முறைகள் உலகெங்கும் இருக்கின்றன. உலகம் முழுவதும் ஒரே மாதிரியான ஷரியத் சட்டங்கள் இல்லை. இஸ்லாமிய நாடுகளிலும் சரி அல்லது முஸ்லிம்கள் கணிசமாக வாழுகின்ற நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் தேவை மற்றும் சூழலுக்கு ஏற்ப ஷரியத் சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்தியாவில் காலனிய ஆட்சி காலத்தில் உருவான
முஸ்லிம் தனியார் சட்டம் என்னும் வடிவம் இப்படியான சூழலில்தான் அறிமுகமாகியது என்பது வரலாறு.

இமாம்கள் என்று அறியப்படும் இஸ்லாமிய அறிஞர்களின் பெயரால் இவை
அறியப்படுகின்றன . இவர்களின் சிந்தனைப் பள்ளிகளை ‘மத்ஹப்’ என்று அழைக்கிறார்கள். அந்தவகையில் ஷாபி அவர்களின் பெயரால் அறியப்படும் ஷாபி மத்ஹப், இமாம் அபூஹனிபா அவர்களின் பெயரால் அறியப்படும் ஹனபி மத்ஹப், இமாம் மாலிக் அவர்களின் பெயரால் அறியப்படும் மாலிக் மத்ஹப், இமாம் ஹன்பல் அவர்களின் பெயரால் அறியப்படும் ஹன்பலி மத்ஹப் ஆகியவை இவற்றுள் குறிப்பிடத்தக்கவை .

தமிழ்நாட்டிலும் இந்த நான்கு சிந்தனைப் பள்ளிகளின் செல்வாக்குகள் இருகின்றன. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கேரளம் முழுவதும் ஷாபி சிந்தனைப்பள்ளியின் சட்டதிட்டங் களைப் பின்பற்றுகிறார்கள். விருதுநகர் தொடங்கி வட தமிழ்நாடு முழு வதும் ஹனபி சிந்தனைப்பள்ளி சட்டதிட்டங்களைப் பின்பற்றுகிறார்கள். இந்த சிந்தனைப் பள்ளிகளின் சட்டதிட்டங்கள் இடையில் பல்வேறு வேறுபாடுகளும் இருக்கின்றன ஒன்றுபடும் புள்ளிகளும் இருக்கின்றன.

இந்தியாவின் ஷரியத் மரபுக்கு தொடக்கமாக முகலாயர் ஆட்சிமுறை இருக்கிறது. அவர்களின் ஆட்சி முறையில் கிரிமினல் சட்டம் ஷரியத் அடிப்படையில் அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. சிவில் நடைமுறைகளைப் பொறுத்தவரை முஸ்லிம்களுக்கு ஷரியத்
சட்டமுறைகளும் முஸ்லிம் அல்லாதோருக்கு திருமணம், வாரிசு உரிமை போன்ற விஷயங்களில் அவரவர்க்கான சிவில் நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன.

காலனிய ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டபிறகு இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பியசட்டமுறையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட்டது. என்றாலும் சிவில் நடைமுறைகளை அவர்கள் அப்படியே அனுமதித்தனர். இப்போதுள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தின் முதல் வடிவம் காலனிய ஆட்சியர்களால் முதன் முதலாக 1937 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது . இந்திய முஸ்லிம் தனியார் சட்டத்தில் பல்வேறு காலங்களில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடத்தக்க மாற்றம் 1939-ஆம் ஆண்டு
கொண்டுவரப்பட்ட முஸ்லிம் விவாகரத்து சட்டம். இந்தச் சட்டம் முஸ்லிம் பெண்களின் விவாகரத்துக் கோரும் உரிமையையும் அதற்காக நீதிமன்றத்தை நாடுவதையும் உறுதி செய்தது.

விடுதலை பெற்ற இந்தியாவில் அரசியல் சாசனம் உருவானபோது இத்தகையத் தனியார் சட்டங்கள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன,. இந்த விவாதங்களின் முடிவில் அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட முன்னோர்கள் இந்திய அரசியல் சாசனத்தின் 25- A பிரிவின் ஷரத்துக் களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் பல்வேறு தனியார் சட்டங்களும் சிவில் சார்ந்த நடைமுறைகளில்
பின்பற்றப்படலாம் என்று முடிவு செய்தனர் .

அப்படிஎன்றால் முஸ்லிம் பெண்களுக்கு பிரச்சனைகள் இல்லையா ? முஸ்லிம் தனியார் சட்டத்தில் பிரச்சனைகள் இல்லையா? என்றால் இருக்கிறது . எல்லா மத, சாதிய சமூகங்களைப் போலவே முஸ்லிம் சமூகமும் இன்றுவரை ஜனநாயகப்படுத்தப்படாமல் இருக்கிறது . எல்லா ஆண்களைப் போலவே முஸ்லிம் ஆண்களும் இருக்கிறார்கள். எல்லா மதங்களிலும் ஆண்கள் மதத்தின் பெயரில் அதிகாரங்களை தமதாக்கிக் கொண்டது போலவே இஸ்லாம் மதத்திலும் நடந்தது. இவற்றை நேர் செய்வதற்கான வழிவகைகளை அரசும் ,
முஸ்லிம் சமூகமும் கண்டறிய வேண்டும். எவ்வளவு காலம்தான் முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகளை ஆண்குரலில் கேட்பது . முஸ்லிம் சமூகத்தின் பொதுப்பிரச்னைகள் குறித்தும் , முஸ்லிம் பெண்கள் குறித்தும் பெண்கள்
பேசும் அதிகாரம் வேண்டும். முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம், ஒன்றிய , மாநில வக்ஃப் வாரியங்கள் , ஜமாஅத் உள்ளிட்ட அமைப்புகளில் பெண்களின் பங்கேற்பும் , பெண்களின் பிரதிநிதித்துவமும் சட்ட பூர்வமாக உறுதி செய்யப்பட வேண்டும் .

இஸ்லாமிய ஷரியத் என்பது காலம்தோறும் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதையும் , உலகெங்கும் இஸ்லாமிய நாடுகளில் அது அவ்வாறு தான்
வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது முஸ்லிம் அறிவுத்தலைமைகளும் மதத்தலைமைகளும் புரிந்து கொள்ளவேண்டும் . மாறிவரும் உலக ஒழுங்குகளுக்கு முகம்கொடுக்கும்வகையில் ஷரியத் சட்டங்கள் வளர்த் தெடுக்கப்படாவிட்டால் இன்றுள்ள சூழலில் முஸ்லிம்கள் இன்னும் சிக்கல்
படுவார்கள் என்பதை உணரவேண்டும்.

இந்திய அரசியல் சாசனத்தின் 25- A பிரிவு விரும்பும் சமயங்களைப் பின்பற்றவும், அதனை நடைமுறைப்படுத்தவும், அதனை பரப்புரை செய்யவும் இந்திய மக்கள் அனைவருக்கும் உரிமை வழங்குகிறது.இந்தியா முழுமைக்குமான பொதுவான ஒரே சட்டம் என்று கூறும் ஒன்றிய அரசு இன்றுவரை அதற்கான வரைவு சட்ட நகல் எதுவும் வெளியிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

ஒன்றிய அரசு பேசும் பொதுசிவில் சட்டம் இந்தியாவின் நூற்றுக்கணக்கான சமூகங்களை பாதிக்கிற ஒன்றாக இருக்க ஆனால் அதுசார்ந்த உரையாடல் கள் அனைத்தும் இந்தப் பொது சிவில் சட்டம் முஸ்லிம்களை குறிவைத்து கொண்டுவரப்படுகிறது என்னும் செய்தியை முன்கொண்டு வந்துள்ளன . ஒருவேளை அதுவே அரசின் நோக்கமாகவும் இருக்கலாம். பொதுசிவில் சட்டம் என்பதில் இருந்து பழங்குடிகளுக்கு விலக்கு வேண்டும் என்னும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டப் பிரச்சனையில் அரசு மற்ற
எல்லோரையும் உள்ளிழுத்துக் கொண்டு முஸ்லிம்களை மட்டும் விலக்கி வெளியே நிறுத்திய அனுபவம் ஏற்கெனவே இருக்கிறது. பொதுசிவில் சட்டத்திலும் அப்படியானதொரு அனுபவத்திற்கு வாய்ப்பு இருப்பதை மறுக்கமுடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version