கட்டுரைகள்

கல்வி உரிமை

எழுத்தாளர் மணி கணேசன்

Published

on

எழுத்தாளர் மணி கணேசன்

குழந்தையின் அடிப்படை பிறப்புரிமை கல்வி கற்பதாகும். மனித சமுதாயத்தில் கல்வி கற்பதன் அவசியமானது தொன்றுத் தொட்டு வலியுறுத்தப் பட்டே வந்துள்ளது. ஏனெனில் மனித நடத்தைகள் கல்வியால் மட்டுமே மாற்றமடைகின்றன. அத்தகைய கல்வியினை எப்பாடுபட்டாவது கற்கத் தலைப்பட வேண்டுமென்பதே ஆன்றோர் பலரது சீரிய வாக்காகும். கல்வி ஒன்றே சமுதாயத்தில் விரும்பத்தக்க விளைவுகளை உண்டாக்கவல்லது. மனிதவளம் அதனால் மேம்பாடு அடைந்து நாடு நல்வழியில் உலக அரங்கில் பீடுநடை போடவும் ஏதுவாகிறது. தவிர, ஒரு நாட்டின் வளர்ச்சியென்பது மனித அறிவு வளர்ச்சியோடு நேரடித் தொடர்புடையது. அத்தகு அறிவு வளர்ச்சிக்கு கல்வி இன்றியமையாதது. மேலும், கல்வி எனப்படுவது மனித வாழ்க்கையில் ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கி வருகின்றது.

இக்கல்வியானது பண்டைக் காலத் தமிழ்ச் சூழலில் சாதிப்பாகுபாடுகள் மேலோங்கிக் கோலோச்சியிருந்த காலக்கட்டத்தில் உயர்சாதி மேட்டுக்குடியினராக வாழ்ந்தோருக்கு மட்டுமே குருகுலக் கல்வியாக வழங்கப்பட்டு வந்தது. ஏனைய சமூக அடித்தட்டு மக்கள் காலந்தோறும் கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்களாகவே வாழ விதிக்கப்பட்டிருந்தனர். தவிர, அக்காலக் கல்வி ஆசிரியரை மையப்படுத்தியே காணப்பட்டது. நினைவாற்றல் மற்றும் போர்த்திறனை வளர்ப்பதாகவே பெரும்பாலும் அமைந்திருந்தது. மாணாக்கரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஆங்கே இடமில்லை.

ஆங்கிலக் கிழக்கிந்திய மற்றும் காலனியாதிக்கத்தின் போது கிருத்துவ மதத்தைப் பரவலாக்குதல் மற்றும் ஆட்சி நிர்வாகங்களில் கீழ்நிலைப் பணிகளில் உற்றத் துணையாக இருத்தல் பொருட்டு தன்னார்வ கிருத்தவ சமய அமைப்புகளும் ஆங்கிலேய அரசும் மெக்காலே கல்வித் திட்டத்தை உருவாக்கி கல்வியை எல்லோருக்குமாக வழங்க முற்பட்டன. இவை காரணமாக இடைச்சாதியினர் கல்வி விழிப்புணர்வு பெற்றனர். ஆனாலும், பட்டியல் இனத்தவரான தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பெண்கள் முதலானோர் புறக்கணிக்கப்பட்ட சமூகமாகவே கருதப்பட்டனர் என்றால் மிகையில்லை.

நாடு விடுதலையடைந்ததற்கு பிறகு, அரசால் பல்வேறு கல்வி நலத் திட்டங்களும் பள்ளிகளும் ஊர்தோறும் தோற்றுவிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்ட போதிலும் அனைவருக்கும் கல்வி என்பதில் ஒருவித தேக்கநிலையே தென்பட்டது. மக்களிடையே நிலவிய ஏழ்மை, வறுமை, அறியாமை, மூடப் பழக்கவழக்கங்கள், பழைமைவாதம் போன்றவற்றாலும் சாதிய மற்றும் பெண்ணடிமைத் தனத்தாலும் ஓர் இரும்புத்திரை சமுதாயத்தில் இருந்து கொண்டேயிருந்தது.

அதன்பிறகு, கோத்தாரி கல்விக் குழு, லெட்சுமண முதலியார் கல்விக்குழு ஆகியோர் தந்த கல்விப் பரிந்துரைகளை ஆராய்ந்து அவற்றை உள்ளடக்கி கி.பி. 198 6 இல் புதிய தேசியக் கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. பொதுவான ஒரு கலைத்திட்டம் அதன் வாயிலாக வடிவமைக்கப்பட்டது. அதற்கேற்ப, தொடக்கக்கல்வி நிலையில் நாடு முழுமைக்குமான பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டு பாடநூல்கள் வழங்கப்பட்டன. சமுதாயத்தில் காணப்படும் நலிந்த பிரிவினருக்குப் பல்வேறு சலுகைகள் தரப்பட்டன.

அனைவருக்கும் தொடக்கக்கல்வி; எப்போதும் கல்வி; தரமானக் கல்வி என மூன்று முக்கியமான முழக்கங்களை முன்னிறுத்தி ஒரு மாபெரும் இயக்கமாக மக்கள் மத்தியில் வீறு கொண்டெழுந்தது. பள்ளி அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. பாடத்திட்டங்களில் பல புதுமைகள் புகுத்தப்பட்டன. ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்க ஏதுவாக தேசிய மற்றும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டு அவற்றின் வாயிலாக மாவட்டங்கள் தோறும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. எனினும், கல்வியின் மீதான சமூகத்தடைகள் முற்றிலுமாக களையப்படவில்லை. கல்வியால் சமுதாய பலன் அடைந்தவர்கள் மட்டுமே தம்மை வளர்த்துக் கொண்டனர். பள்ளி வயதினர் எப்பள்ளியிலும் சேராமல் கல்லாதவராகவும், பள்ளிகளில் சேர்ந்தவர்கள் குடும்பச் சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் காரணமாக பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விடுபவராகவும் பல்கிப் பெருகி நாட்டிற்கு பெரும் அவமானத்தையும் அறைகூவலையும் தரத் தக்க வகையில் குழந்தைத் தொழிலாளராகவும் குடும்பத்தைப் பேணும் மற்றுமொரு தாய்மாராகவும் உருவாயினர்.

இதையடுத்து, கல்வியாளர் R.H. தவே அவர்களால் கி.பி.1992 இல் தொடக்கக் கல்வியில் குறைந்த பட்ச கற்றல் இலக்குகள் (Minimum Levels of Learning) எனும் குழந்தை மைய அணுகுமுறையினை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் கற்றல் – கற்பித்தல் செயல்முறைகளில் அனைத்திலும் கல்வியின் தரமே (Quality of Education) தாரக மந்திரமென முதன்மையாக வலியுறுத்தியது. ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு பாடத்திலும் கட்டாயம் குறைந்த பட்சம் மாணவர் அடைய வேண்டிய திறன்கள் வரையறைச் செய்து தரப்பட்டு பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பாடக்குழுவில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு முதல்முறையாக முன்னுரிமைகள் அளிக்கப்பட்டன. பாடம் சார்ந்த குறைகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டன. ஆசிரியர்களுக்கு இடைவிடாது பல்வேறு புத்தாக்க மற்றும் வலுவூட்டல் பயிற்சிகள் எளிதாக அவர்கள் வந்து செல்லும் வகையில் அவரவர் சொந்த ஒன்றிய, நகரங்களிலேயே தரப்பட்டன. நால்வகை அடிப்படை கற்றல் திறன்களைச் சோதித்தறியத்தக்க வகையிலேயே மதிப்பீட்டு முறைகளில் மாற்றங்கள் புகுத்தப்பட்டன. இதனால் மொழிப்பாடங்களில் தன்னிச்சையாக ஆட்சி செய்து வந்த எழுத்துத்திறனின் முக்கியத்துவம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. வாய்மொழி ச் சோதனையின் அவசியம் உணரப்பட்டது என்றாலும் கல்வியில் தரம் முதன்முறை யாக கூடியதேயொழிய முழுச் சேர்க்கையையும் இடைநிற்றலையும் எட்டுவதில் வழக்கம்போல் இடையூறுகள் இருந்திடத்தான் செய்தன.

இதற்கிடையில் கணித, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான எளிய செயல்முறை உபகரணங்களும் தொடக்கக் கல்வி நிலையில் விளையாட்டுத் திறனை உக்குவிக்கும் பொருட்டு எளிய விளையாட்டுக் கருவிகளும் கூடுதல் ஆசிரியர் பணியிடங்களும் தளவாடங்களும் வழங்கப்பட்டு கல்வியை மேம்படுத்திடும் விதத்தில் கரும்பலகைத்திட்டம் (Blackboard Scheme) எனும் புதிய முறையொன்று நடைமுறைக்கு வந்தது.

அதுபோக குழந்தை உளவியலுக்குச் சற்றும் பொருந்தாத ஆசிரியர் விளக்க முறை காரணமாக இறுகிப் போய்க்கிடந்த கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளில் அவ்விறுக்கத்தைத் தளர்த்தி இனிமையாக்கும் முகமாக கற்றலில் இனிமை (Joyful Learning) எனும் புரட்சிகரத் திட்டம் தொடக்கக் கல்வி வகுப்பறைகளை ஆக்கிரமித்துக் கொண்டது. ஆடல், பாடல், நடிப்பு, விளையாட்டு போன்ற மாணவர் உள்ளங்களை மகிழச் செய்யும் இன்ப அணுகுமுறைகள் (Pleasure Principl Approach) கடைபிடிக்கப்பட்ட போதிலும் வருகை மற்றும் அடைவுகளின் விழுக்காடுகளில் முழு அளவு எட்டப்படவில்லை.

இத்தகைய கடும் நெடும் பயணத்திற்கிடையே தமிழக அரசியலில் மலிந்த வணிக லாப நோக்கும் போக்கும் காரணமாக தாய்மொழிவழிக் கல்வி புறம் தள்ளப்பட்டு புற்றீசல்களாக மெட்ரிக் ஆங்கில வழிக் கல்விப் பள்ளிகள் குக்கிராமங்களிலும் முளைக்கத் தொடங்கின. அச்சு மற்றும் மின் ஊடகங்கள் வாயிலாக உயர்தர, நடுத்தர மற்றும் பாமர வர்க்க அடித்தட்டு மனங்களில் மேனாட்டு மொழி மற்றும் நாகரிக மோகங்கள் நன்கு விதைக்கப்பட்டுப் பெருகியதன் விளைவாக கல்வி கொழுத்தக் கடைச்சரக்காகிப் போனது. அரசுப் பள்ளிகளில் தாய்மொழி வழிக் கல்வி கற்போரது சதவீதம் பெருமளவு சரியத் தொடங்கி விட்டிருந்தன. அனைவருக்கும் தொடக்கக்கல்வி எனும் தீர்க்கமான, தீவிரமான உறுதியுடன் செயல்பட்டுவந்த இப்பள்ளிகள் பல்வகைப்பட்ட மக்களின் நன்மதிப்பையிழந்து பொருளாதாரத்தில் மிகவும் பலவீனப்பட்ட மற்றும் உயர் விளிம்புநிலை மக்களது வேறுவழியற்றப் புகலிடங்களாக மாறிப்போயின. வறிய மற்றும் வீடற்ற குடும்பங்களின் குழந்தைகளும் கல்வியின் பெருமையினை இன்றளவும் உணராத அருந்ததியர், பழங்குடியினர், நாடோடி இனத்தவர் முதலானோரின் பிள்ளைகளும் படிப்பை ஒரு பொருட்டாக மதிக்காமலேயே தம் மரபான வாழ்க்கையை மேற்கொள்ளவே முற்பட்டனர். அரசின் அறிவிப்புகளும் அச்சுறுத்தல்களும் விழலுக்கு இறைத்த நீராகவே இருந்தன. ஒரு புறம் தனியார் மயமாக்க வெடிப்புகள் மறுபுறம் அரசுப் பள்ளிச் சீரமைப்புகள் என இவற்றிற்கிடையே அனைவருக்கும் தொடக்கக் கல்வி அகப்பட்டுச் சீரழிந்துக் கொண்டிருந்தது.

இத்தகு இக்கட்டானச் சூழலில்தான் 2001 ஆம் ஆண்டில் நாடு தழுவிய அனைவருக்கும் கல்வி இயக்கம் மத்திய, மாநிலக் கூட்டு நிதியுதவியுடன் தீவிர முனைப்புடன் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து பள்ளி வயது குழந்தைகளுக்கும் தரமான கல்வியை உறுதி செய்கிறது. சேர்க்கை, தக்கவைத்தல், திறனடைவு ஆகியவை நூறு விழுக்காடு என்று உறுதிபூண்டு ஒரு மாபெரும் பேரியக்கமாக மக்களிடையே அவர்தம் வரிப்பணத்தை வாரியிறைத்து வளர்த்தெடுக்கப்பட்டது. இதற்காகவே ஆண்டு வருமான வரி செலுத்துகையில் வருமான வரிக்கு கூடுதல் வரியாக மூன்று சதவீத கல்வி வரி வசூலிக்கும் புதுநடைமுறை அரசால் செயல்படுத்தப்பட்டது. வட்டார அளவில் வளமையங்களும் பகுதிவாரியாக குறுவள மையங்களும் அதற்குரிய நவீனத் தகவல் தொழில் நுட்ப வசதிகொண்ட அடிப்படைக் கட்டமைப்புகளும் பாட வாரியாக உயர் தகுதிபெற்ற ஆசிரியப் பணியிடங்களும் பயிற்சித் திட்டங்களும் கட்டகங்களும் ஏற்படுத்தி வழங்கப்பட்டன. மேலும், பள்ளிகள் அனைத்தும் காங்கிரீட் கட்டடங்களாக அமைக்கப்பட்டன. கழிப்பிடம், குடிநீர், நூலகம், கணினி மையம் முதலிய வியத்தகு வசதிகளுடன் புத்தகச்சுமையற்ற எளிய அட்டைக்கல்வி என்றழைக்கப்படும் செயல்வழிக் கற்றல் ஒன்று முதல் நான்கு வகுப்புகளுக்கும் ஐந்தாம் வகுப்பிற்கு எளிமைபடுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி முறையும் ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளுக்கு முறையே படைப்பாற்றல் கல்வி முறைகளும் தோற்றுவிக்கப்பட்டு அவை மக்கள் இயக்கமாகக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. பொது மக்களின் பங்கேற்பை உறுதி செய்யும் பொருட்டு பள்ளிகள் தோறும் கிராமக்கல்விக் குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளியின் எல்லா நிலைகளிலும் தம் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி உரிய பங்களிப்புகளை ஆற்றிட தக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது ஈண்டுக் குறிப்பிடத்தக்கதாகும்.

இது தவிர, பள்ளிச் சேர்க்கை வார விழா, பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள், கல்வி வளர்ச்சி நாள் விழா, கிராமக் கல்விக்குழு நாள் விழா போன்ற விழாக்கள் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வந்தபோதிலும், பள்ளி இடைநின்றோர், எப்பள்ளியிலும் சேராதோர். மாற்றுத் திறன்படைத்தோர், குழந்தைத் தொழிலாளர் முதலானோருக்கு உதவிடும் வகையில் மாற்றுப் பள்ளிகள், மாலை நேரம் பள்ளிகள், இணைப்பு மையங்கள் சிறப்புப் பள்ளிகள் போன்றன தொடங்கப்பட்டு தனிக் கவனம் செலுத்தப்பட்ட போதிலும், பாடப்பொருள்கள், உதவித்தொகைகள், சீருடைகள், முட்டையுடன் கூடிய சத்துணவு போன்றவை சாதிபாகுபாடின்றித் தந்து உதவிட்ட போதிலும் அனைவருக்கும் கல்வி குறிக்கோள் மீதான தடைகள் நீடிக்கவே செய்கின்றன. மேலும், கல்வியைப் பொதுமைப்படுத்தி எல்லோருக்கும் கிடைக்கச் செய்து சாமானியனும் பலனடையச் செய்திடும் வகையில் அண்மையில் சமச்சீர்க் கல்வி மழலை நடை போட்டு வரத் தொடங்கியது.

அதன் பின்னர், தொடக்க நிலையில் எண்ணும் எழுத்தும் திட்டம் முதல் மூன்று வகுப்புகளுக்குச் செயல்படுத்தப்பட்டு வந்த நிலை மேலும் விரிவுப்படுத்த பண்பாட்டு நடப்புக் கல்வியாண்டில் இத்திட்டம் நான்கு மற்றும் ஐந்து வகுப்புகளுக்கும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, கல்வித்துறையில் மாறிவரும் நவீனத் தகவல் தொழில்நுட்ப வசதிக்கேற்ப நிர்வாகம், கற்றல கற்பித்தல் நிகழ்வுகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மதிப்பீட்டு முறைகள், வருகைப் பதிவுகள், நலத்திட்ட உதவிகள், பணி மாறுதல்கள் போன்றவற்றின் பயன்பாட்டிற்காகப் பல்வேறு புதுப்புது செயலிகள் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இக்காலகட்டத்தில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பை அதிகரிக்கும் பொருட்டு மறுசீரமைக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் மாதந்தோறும் கட்டாயம் நடைபெற பெருமளவில் ஊடகங்கள் வழி பரப்புரை செய்யப்பட்டு வருவது எண்ணத்தக்கது. அதேவேளையில், பெருந்தொற்று பொதுமுடக்கக் காலத்தில் கற்றல் இடைவெளிகளை ஈடுசெய்யும் விதமாகத் தோற்றுவிக்கப்பட்ட இல்லம் தேடிக் கல்வித் திட்டம் உள்ளூர் இளம் பட்டதாரி தன்னார்வலர்கள் உதவியுடன் இப்போது வரை மாலை நேர கற்றல் மையமாக இயங்கி வருகிறது. இதன் மூலமாவது அனைவருக்கும் கல்வி கிட்டிவிடுமா என்றால் தீவிர குழப்பமும் கனத்த மௌனமும் விடைகளாய்க் கிடைக்கின்றன.

ஆக, என்ன தான் இதற்குத் தீர்வு என்று ஆராய்ந்தோமானால் சில உண்மைகள் தெள்ளத்தெளிவாக நமக்குப் புலப்படுகின்றன. இவற்றை எளிதாக ஒதுக்கி விட இயலாது.

முதற்கண், எத்தகைய கல்வியாயினும் அவை அவரவர் தாய்மொழியிலேயே இலவசக் கட்டாயக் கல்வியாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். தாய்மொழிவழிக் கல்வியைத் தவிர்த்து அந்நிய மொழியில் எவ்வளவு தான் முயன்றாலும் அனைவருக்கும் கல்வி என்பது துளியும் சாத்தியமில்லை. ஏனெனில், மனித மனத்துள் உருவாகும் சிந்தனைகள் அவரவர் தாய்மொழியிலேயே உருவெடுத்து பின் அவை சொற்களாகவும் செயல்களாகவும் பரிணமிக்கின்றன. ஆதலால் தான் பல்வேறு வளர்ந்த நாடுகளும் கூட தம் தொடக்கக் கல்வியைத் தாய்மொழி வழியிலேயே வழங்கி வருவதை இன்றியமையாத தேசக்கடமையாகக் கொண்டுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே பல்வேறு கல்வியாளர்களும், உளவியல் அறிஞர்களும் தாய்மொழிவழிக் கல்வியின் அவசியம் மற்றும் பயன்பாடுகள் குறித்து உரத்துப்பேசி வருகின்றனர். பிள்ளைகளைப் பெற்றெடுத்தப் பெற்றோர்கள் எல்லாம் ஆங்கில மயம் ஆங்கிலமே தம் குழந்தையின் எதிர்கால நல்வாழ்வு என்னும் சமூகக் கேடுமிக்க தப்பெண்ணங்களைக் கைவிட்டு குழந்தைகளின் அறிவு கூர்மைப்படுவதில் தாய்மொழியே பெரும் பங்கு வகிக்கிறது எனும் கல்வி உளவியல் சிந்தனையை மனதில் இருத்திக் கொண்டு செயலாற்ற முன்வருதல் சாலச் சிறந்தது ஆகும்.

தவிர, இதற்கு அடிப்படையாக விளங்குவது, படிப்பு என்பது பணிக்கே! எனும் நடப்பு வாழ்வியல் அவலப்போக்கே ஆகும். கல்வியின் ஒரு செயல்முறை விளைவுதான் பணிக்குச் செல்லுதல் மற்றும் பணம் ஈட்டுதல் ஆகியன. கல்வியின் முழுமையான நோக்கங்கள் இவையல்ல. அன்றாட வாழ்க்கையை விழிப்புடன் எதிர்நோக்கி தக்க வளங்களை நேர்மையுடன் பெருக்கி குற்றமிலா இன்பப் பெருவாழ்வினை வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்கி, மானுடம் தழைக்க. மனிதவளம் சிறக்க வாழவே கல்வியானது வழிகாட்டுகின்றது; நெறிப்படுத்துகின்றது. சுருங்கச் சொன்னால் வேலை வாய்ப்பிற்கானதல்ல கல்வி. கல்வியின் ஓர் அங்கம்தான் வேலைவாய்ப்பு. இதை உணர்ந்து செயல்படுவது அனைவருக்கும் நலம் பயக்கும்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு குடிமகன் மழலைக்கல்வி முதல் உயர் தொழில் கல்வி முடிய தமிழைப் பயிற்றுமொழியாகக் கொள்ளாமல் ஆங்கில வழியில் படித்துப் பட்டம் பெறும் அவலநிலை காணப்படுகின்றது. சமுதாயத்தின் பெருங்கேடாகத் திகழும் மதுபானக் கடைக்குப் படித்த, பட்டதாரிகளைப் பணியிலமர்த்திக் கொண்டு வேலைவாங்கும் அரசு நாடு முன்னேற பேருதவியாற்றும் அறிவு வள முதலீட்டிற்கான கல்வியைத் தனியாரிடம் தாரைவார்த்து வருவது சமுதாய ஏற்புடையதல்ல. முறையான கல்வித் தகுதியோ, குழந்தைகளை நன்முறையில் கையாளும் போதிய குழந்தை உளவியல் பயிற்சியோ இல்லாத குறைந்தக் கூலிக்கு மாரடிக்கும் நபர்களின் கைகளில் இந்தியாவின் எதிர்காலம் அகப்பட்டுக் கொண்டு மிகவும் துன்பப்படுவதை எந்தவொரு அறிவார்ந்த சமுதாயமும் எளிதில் ஏற்றுக் கொள்ளாது. இந்த இழிநிலை உடனடியாக மாற்றம் பெற வேண்டும்.

அதுபோல், கல்வியின் வளர்ச்சியில் மாணாக்கரின் தனியாள் வேறுபாடு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அறிவு மேம்பாட்டின் வளர்ச்சித் தளங்களில் கற்கும் திறனும் அளவும் அனைவரிடத்தும் சமமாய் இருப்பதில்லை. ஆளுக்கு ஆள் மாறுபடும் தன்மை படைத்தது. மீத்திறன் பெற்றோர், சராசரி நிலையினர். மெதுவாகக் கற்போர், கற்றலையே நிகழ்த்த முடியாத அதிசம் பாதிப்பிற்கு உள்ளான மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் மனித சமுதாயத்தில் எல்லா மட்டங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பதை உணராமல் ஓர் ஒருங்கிணைந்தப் பாடத்திட்டத்தைப் பொதுவாக முன்வைத்து அது ஈடேற முயற்சிப்பது என்பது ஒரு வீண்வேலை. சூரியன்கூட ஒருக்கால் மேற்கில் உதித்தாலும் உதிக்குமே ஒழிய அனைவருக்கும் கல்வி என்பது ஒருபோதும் நிறைவேற இயலாதப் பெருங்கனவேயாகும் என்பதை மேற்காணும் சமுதாயச் சிக்கல்கள் மூலம் நன்கறிய முடியும். அதுவும் பெருவணிக மயமாகக் கல்வி முற்றிலுமாக மாறிப்போய்விட்டால் அதற்குப் பின் இதையும் கூட நினைத்துப்பார்க்க இயலாமல் போய்விடும்.

ஆகவே, சாதி, மத, இன வேறுபாடின்றி கல்வி எல்லோருக்கும் எளிதில் கிட்டிட சட்டங்களும் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டாலும் கல்வியானது பேரளவு பரவலாகுமே ஒழிய முழுமையாகாது. இப்பரவலாக்கத்திற்குத் தாய்மொழி வழிக் கல்வியே உறுதுணையாக விளங்க முடியும். அத்தாய்மொழி வழிக்கல்வியைப் புறக்கணித்து ஆங்கில மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் தந்துப் பேணுதலானது எவ்வகையிலும் பயனைத்தராது. குறிப்பாக, ஒன்றிய அரசின்கீழ் செயல்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பள்ளிகளில் தொடக்கக்கல்வியில் தாய்மொழிப் பயிற்றுவிப்பு கட்டாயப்படுத்தப்பட்டு வருவது ஒரு நல்ல அறிகுறியாகும். தமிழ்நாட்டில் செயல்படும் ஆங்கிலவழியிலான மெட்ரிக் பள்ளிகளில் இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்வது அவசர அவசியமாகும்.

இத்தகைய இரட்டை எதிர்வு அரசியல் நிலைப்பாடு தமிழ்நாட்டுக் கல்விச் சூழலில் நிலவும் வரை அனைவருக்கும் கல்வி ஒரு வெற்று முழக்கமாகவே உடன் தோன்றி மறையும் வானவில்லாய் மக்களிடையே விளங்கி வரும். வழி நெடுக காணப்படும் தமிழ்நாடு அரசு நடத்தும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைப் புறக்கணித்து தூரத்துப் பச்சை நோக்கிய தம் பச்சிளம் குழந்தைகளுடனான பல்வேறு கனவுகளுடன் பெருந்தொகையைத் திரட்டி, தோளில் சுமந்து செல்லும் பெற்றோர்களுக்குக் கானல் நீர்தாகம் தணிக்காது என்பதை எப்படி எடுத்துச் சொல்வது?

எழுத்தாளர் மணி கணேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version