ஆளுமைகள்

கே. பாலதண்டாயுதம்

Published

on

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 1965 பொள்ளாச்சி மாநாட்டையும், 1968 திருச்சி மாநாட்டையும் முன்னின்று நடத்தி, பெருமன்றத்தின் துணைத்  தலைவர் பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றியவர் தோழர் கே.பாலதண்டாயுதம்.
பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி காளகஸ்தியார்- சுப்பாத்தாள் தம்பதியினருக்கு 4ஆவது குழந்தையாக 1918 ஏப்ரல் 2ஆம் நாளில் பிறந்தார். பொள்ளாச்சி அரசுப் பள்ளியில் படித்து பின்னர் திருச்சி புனித வளனார் கல்லூரியில் புகுமுக வகுப்பு முடித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டவகுப்பில் சேர்ந்தார். அங்கு மாணவர் போராட்டத்தில் தீவிரமாக இயங்கியதால் 1938இல் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். கல்லூரித் தோழி கிளாடிஸ் என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

1939இல் திருச்சியில் ரயில்வே தொழிலாளர் சங்கப் பணிகளில் ஈடுபட்டார். பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். யுத்த எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி ஓராண்டு  சிறையிலிருந்தார். அரசியலா, மண வாழ்க்கையா என்ற சிக்கல் எழுந்தபோது மணவாழ்க்கையைத் துறந்தார். 1940ஆம் ஆண்டிலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். 1942இல் சோவியத் நண்பர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளரானார்.

நெல்லை மாவட்டத்தில் கட்சி அமைப்புபப் பணிகளில்  தீவிரமாகச் செயல்பட்டார். பதுக்கலுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சிகளுக்குத் தலைமை தாங்கினார்.1948 ல் கட்சி எடுத்த  முடிவின்படி, தலைமறைவாக இருந்து கட்சி வேலைகளைத் தொடர்ந்தார். 1953ல் நெல்லை சதி வழக்கில் கைதானார்.

பிணையில் வெளிவந்த காலத்தில் கட்சிக் குடும்பத்தைச் சேர்ந்த துல்ஜாராணியை மணந்தார். ஆனால் சதிவழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 1953 முதல் 1962 வரை பத்தாண்டுகள் வேலூர், சேலம், கோவை சிறைகளில் கழித்தார்.  சிறைக் கைதிகளின் உரிமைகளுக்காகப் போராடியதுடன், அவர்களின் கலை, இலக்கியத் திறமைகளை வெளிக் கொணருவதில் ஊக்க சக்தியாக விளங்கினார்.
1962இல் விடுதலை பெற்றவுடன் தமிழ்நாடெங்கும் பயணித்து அரசியல் முழக்கம் செய்தார். 1971 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1973 மே 31இல் தலைநகர் அருகே நடந்த விமான விபத்தில் காலமானார்.
அவர் எழுதிய நூல்கள்- மார்க்சிய ஞானரதம், இலக்கியத்தில் மனிதநேயம்,உலகப்பன் – நாடகம்,தேனி – மொழிபெயர்ப்பு நூல், ஆயுள் தண்டனை அனுபவங்கள்,கலையும் வாழ்க்கையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version