Connect with us

இலக்கியம்

குறி…

சோலச்சி

Published

on

“ஏம்மா.. இத்தன பேரு வேல பாத்தும் ஒரு வேல கூட முழுசா நடக்கலயே. கையிலயா எழுதுறீங்க. ம்… ஒரு மிசினா ரெண்டு மிசினா, மொத்தம் பன்னெண்டு மிசினு இருக்கு. மிசின்ல என்ன நிகழ்வுனு கொடுத்தா அது செய்யப் போகுது. இல்ல…. எதும் புரியலனா என்கிட்ட கேட்டா நா சொல்ல மாட்டேனா. அது என்னாச்சு இது என்னாச்சுனு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் காலையிலிருந்து போன்ல கேட்டுக்கிட்டே இருக்காங்க. நா என்னத்த சொல்லி மழுப்புறது. எனக்குனு ஒரு மரியாதை இருக்கு அதக் கெடுத்துறாதீங்க.” ஆடிட்டர் கோவிந்தராஜின் சத்தத்தில் அந்த அறையே நிசப்தமானது.

அப்போது பக்கத்து அறையிலிருந்து இரண்டு கோப்புகளுடன் வந்தாள் நவநீதசுந்தரி.

“என்னம்மா…வந்த புதுசுல நீயும் ஒழுங்காதான் வேல பாத்த. இவங்களோட சேர்ந்து நீயும் வரவர சொதப்ப ஆரம்பிச்சுட்டீயே.”

அவள் எதுவும் பேசாமல் இரண்டு கோப்புகளையும் அவர் கைகளில் நீட்டினாள். வாங்கி ஒவ்வொரு பக்கமாக புரட்டி பார்த்துவிட்டு அவளின் முகத்தைப் பார்த்தார். சீதையம்மாள் டிரான்ஸ்போர்ட் ஆடிட்டிங் பேமஸ் ஜவுளிக்கடை ஆடிட்டிங்கும் பணிகள் நிறைவு பெற்றிருந்தன. வேற எதும் பாக்கனும்னா சொல்லுங்க சார் என்பது போல அவரை பார்த்துக் கொண்டிருந்தாள் நவநீதசுந்தரி.

“பரவாயில்லையே. வேலக்கி வந்த நாள்ல இருந்து இந்தப் பொண்ணுக்கிட்ட ஒரு குறையும் பாக்க முடியலயே. எனக்கும் வயசு எழுபது ஆகப் போவுது. இந்த மாதிரி துருதுருனு இருக்க பொண்ண ஒன்னு ரெண்டதான் பாக்க முடியுது.” ம்….. தலையாட்டி்கொண்டே கோப்புகளை கையில் வைத்துக்கொண்டு சீதையம்மாள் டிரான்ஸ்போர்ட் மேலாளர் ரெத்தினத்தை அலைபேசியில் தொடர்பு கொண்டபடி தனது அறைக்குள் நுழைந்தார் ஆடிட்டர் கோவிந்தராசு.

“இப்புடி எறிஞ்சு விழுறது தப்பு இல்லயா. எல்லாம் வயசுக்கு வந்த புள்ளைங்க. வெளியில போயி ஒன்ன திட்ட மாட்டாங்களா. வேல பாக்குறவுங்ககிட்ட அன்பா இருடா. வயசுக்கு ஏத்த பக்குவம் ரொம்ப முக்கியம்” நண்பர் செங்குட்டுவன் சொன்னதை நினைத்து தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டார்.

“நா சாமி கும்புடுறது இல்லனு உனக்கு தெரியும். எனக்கு எல்லாமே இந்த ஆபிஸ்தான். யாரா இருந்தாலும் கொடுத்த வேலயா சரியான நேரத்துல செஞ்சு முடிக்கனும். இல்லனா, பொம்பளப் புள்ளைகள வச்சுக்கிட்டு கெழவன் அரட்டை அடிக்கிறானு, இங்க வந்துட்டு போற நூறு பேருல எவனாவது ஒருத்தன் டவுனுக்குள்ள பொய்யும் பொரட்டுமா சொல்லிக்கிட்டு திரிவான். கோவிந்தராசு சிடுமூஞ்சிகாரனு சொல்லட்டுமே. அதுனால எனக்கு ஒரு நட்டமும் இல்ல. ஆனா இங்க வேல பாக்குற பொம்பளப் புள்ளைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு கெடைக்கும்ல”. நினைப்போடு இருக்கையில் அமர்ந்து அழைப்பு மணியை அழுத்தினார்.

அழைப்பு மணியோசை கேட்டு உள்ளே நுழைந்தாள் நவநீதசுந்தரி.

“சார்…” அவளின் ஒலியளவு மிக மெதுவாய் இருந்தது.

நீல நிறத்தில் கோப்பு ஒன்றை கொடுத்து ”இந்த கோப்புகள புரட்டி பாரும்மா. அரைமணி நேரத்துல கணேசன்னு ஒருத்தரு வருவாரு. அவருக்கிட்ட தேவையான வெவரத்த கேட்டுக்க. இந்த வேலை எப்ப முடியுமுனு சரியாச் சொல்லி அனுப்பிடு. பீஸ் எப்பவும்போல பாதி வாங்கிடும்மா”

கோவிந்தராஜின் பேச்சுக்கு ஆமோதிப்பது போல் தலையாட்டிக் கொண்டே சென்றாள் நவநீதசுந்தரி.

ஆடிட்டர் கோவிந்தராசின் அலுவலக நேரம் காலை பத்துமணி முதல் மாலை ஆறுமணி வரைதான். ஞாயிறு விடுமுறை. எல்லோரும் வீட்டுக்குச் சென்ற பிறகு இரவு பத்துப் பதினோரு மணிவரை அலுவலகத்தில் வேலை பார்ப்பார். பல நேரங்களில் அங்கேயே சாப்பிடாமல் கூட உறங்கி விடுவிடுவார்.

“ஏங்க இப்புடி ஒடம்ப கெடுத்துக்குறீங்க. பசங்கதான் நல்ல நிலையில் இருக்கானுக. நமக்கு என்ன குறை. வயசான காலத்துல ஒரு இடத்துல இருக்கக் கூடாதா. இதுவரைக்கும் ஒழச்சது போதாதா.” தினந்தோறும் இப்படி சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் உலகநாயகி.

“உலகம் தெரிஞ்சவனு நெனச்சுதான் என் மாமனாரு பொருத்தமா ஒனக்குப் பேரு வச்சுருக்காரு. ஒன்னோட ஒலகத்துக்குள்ள இந்தக் கோவிந்தராச அடச்சுப் போட்றனும்னு இந்தன வருசமா போராடுற. ம்….ஒன்னோட உலகத்த விட்டு நா எப்ப வெலகுனேன். எங்க இருந்தாலும் ஒனக்குள்ளதான் அடஞ்சு கெடக்குறேன்.” அவரின் பேச்சுக்கு வலுசேர்ப்பதைப்போல “எதையாவது சொல்லி மயக்கிப்புடுங்க. பேசாம நீங்க வக்கீலுக்கு படிச்சு வக்கீல் ஆயிருக்கலாம்” என்றார்.

“பேசுனாதானே வக்கீல் ஆக முடியும்…” மொட்டு மலர ஆரம்பிப்பதைப் போல் சொற்களை மெல்ல தூவினா். அந்தச் சொற்களில் நனைந்து மலர்ந்து கொண்டிருந்தார் உலகநாயகி. வயது கடந்தும் அவர்களின் சொற்களில் காதல் குடிகொண்டு நடனமாடியது.

காரு , பங்களா என்று வசதிக்கு குறைவில்லை. பணம் வாழ்க்கை நடத்துறதுக்கு ஒரு துணை அவ்ளோதான் என்று உணர்ந்ததால் பணத்தின் மீது அவ்வளவு ஆசை அவருக்கு கிடையாது. மகன் முகிலன் திரைத்துறையில் இசையமைப்பாளர். மேலும் இசைக் கல்லூரி ஒன்றையும் நடத்துகிறார். மகள் தமிழினி மகப்பேரு மருத்துவராக இருக்கிறார். ஆபிஸ அடுத்த ஆளுகிட்ட விட்டா நம்ம பேர காப்பாத்த மாட்டாங்க. நம்ம இருக்குறதால இத்தன பொம்பளப் புள்ளைங்களுக்கும் வேல கெடக்குது. ஆபிஸ இழுத்து மூடிட்டா நமக்கு ஒன்னும் நட்டம் இல்லனாலும் இத்தன புள்ளைங்களோட குடும்பம் என்னாகும். ஏதோ உசுரு இருக்க வரைக்கும் ஆபிஸ் இயங்கட்டும் என்று எண்ணியே ஆடிட்டர் கோவிந்தராசு அலுவலகத்தை நடத்தி வந்தார்.

வேலை முடிந்து பேருந்து நிலையத்திற்கு சின்னப்பா பூங்கா வழியாகத்தான் நவநீதசுந்தரியும் யாமினியும் நடந்து செல்வார்கள். அந்த வழியில்தான் தனம் பேங்கர்ஸ் என்ற வட்டிக்கடை இருக்கிறது. அந்தக் கடையின் அருகில் செல்லும்போதெல்லாம் எதையோ முனுமுனுத்துக் கொண்டே செல்வாள் நவநீதசுந்தரி.

எத்தனையோ நாய்ங்க தெருவுல திரியுது. சில நாய்க கத்துது, சில நாய்க மூடிக்கிட்டு கெடக்குது, கத்துறது…. லோலோனு அலையுறது நாயோட கொணம்டி. அதுக்காக அதுககூட சண்ட போட முடியுமா. நம்ம வேலய பாத்துக்கிட்டு போக வேண்டியதுதான். நாம கிராமத்துல இருந்து டவுனுக்கு வேலக்கி வர்றோம். வந்தம்மா வேலய பாத்தமானு ஊரு போயி சேரனும்டி. டவுன்லயே பெரிய வட்டிக்கடை இதுதான். அதுமட்டுமா தனம் லாட்ஜ்ம் அவனுகோட்டுதான். ஒரே புள்ள அதான் போற வர்ற பொம்பளப் புள்ளைகள ரூட்டுவிட்டுக்கிட்டு திரியுறான். நமக்கென்ன….. எத்தனையோ முறை யாமினியும் சொல்லிவிட்டாள். ஆனாலும் புவியரசை பார்க்கும் போதெல்லாம் மனதுக்குள் திட்டுவதை நவநீதசுந்தரி நிறுத்துவதே இல்லை.

கிழக்கு சூரியன் மேற்கே மறைகிறதோ இல்லையோ புவியரசு மறக்காமல் மாலை நேரம் தனது கடை வாசலுக்கு வந்துவிடுவான். ராயல் என்பீல்டு வண்டியில் செல்போன் பேசியபடி பின் தொடர்வதை தலையாய பணியாக கொண்டிருந்தான்.

“மாப்ள ஒரு கவிதை சொல்றேன் கேளு…

காற்றில் ஆடும் செவ்வந்தி பூ
உன்
மாராப்பில் ஒளிந்துகொண்டு
என் மனதை திருடும் வித்தை
கேளடி….
அருகே தோழி
அன்ன நடையே
அலையும் என் மூச்சு
அமுதம் தர
எடுத்துச் சொல்வாயோ…
என் பீல்டு வண்டியும்
நொண்டியாய் ஒண்டியாய்
நாள்தோறும் நலியுதே
என் மேனி மெலியுதே
கிராமத்து தேன் ஊற்றே
என்னைக் கிரங்கடிக்கும்
தென்றல் காற்றே….
வாரேன் வாரேன்
வாயேன் வாயேன்
உனது
வலது கரத்தை தாயேன்…..!

மாப்ள எப்படிடா இருக்கு என்னோட கவிதை”. அலைபேசியில் பேசியபடி வண்டியை இயக்கினான்.

மெல்லியதாய் சிரித்தவள், பேருந்தின் சன்னலோரமாய் உட்கார்ந்தாள். நகரத்து காற்றில் நவநீதசுந்தரியின் மூச்சுக்காற்று கலந்து புவியரசின் முகத்தில் பளிச்சென பட சிலிர்த்துப் போனான்.

“டவுனு பசங்ககிட்ட கவனமா இருக்கனும்டி. அவன் நம்ம பின்னாடி சுத்துறது தெரிஞ்சுச்சுனா சாரு நம்மல வேலயவிட்டு தூக்கிருவாரு.” யாமினியின் பேச்சை காதில் வாங்காதவளாய் பேருந்தில் ஒலித்த செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா…. பாடலில் மூழ்கிப் போனாள்.

தனது திருமணம் அடுத்தவாரம் ஞாயிற்றுக்கிழமை தபசுமலை முருகன் கோவிலில் நடப்பதாகச் சொல்லி அழைப்பிதழை எல்லோரிடமும் கொடுத்திருந்தாள் யாமினி. அவளை திருமணம் முடியும்வரை வீட்டில் ஓய்வு எடு திருமணத்திற்கு பிறகு உன் கணவனிடம் சொல்லிவிட்டு பணிக்கு வரலாம் என்று சொல்லி மூன்றரை பவுன் நெக்லஸும் வாங்கிக் கொடுத்தார் ஆடிட்டர் கோவிந்தராசு. ஆனால் அவளோ வீட்டில் எனக்கொன்றும் வேலையில்லை. அதனால் வேலைக்கு வருகிறேன் என்று பிடிவாதமாக வந்தாள்.

தமது அலுவலகத்தில் இரண்டாண்டுக்கு மேல் பணியாற்றுபவர்களின் திருமணத்திற்கு மூன்றரைபவுன் நெக்லஸ் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பது உலகநாயகியின் உத்தரவு.

“லீவே கொடுக்காம சாரு வேல வாங்குறாருனு யாரும் தப்பா நெனைக்க மாட்டாங்களா” நவநீதசுந்தரி சொன்னதை காதில் வாங்கிக் கொண்டவள்…

“பெத்த தகப்பனோடு எத்தன நாள்டி வாழப்போறோம். நம்ம சாரு எனக்கும் தகப்பன் மாதிரிதான். சிடுசிடுனு சத்தம் போட்டாலும் தங்கமான மனசுடி சாருக்கு. நா வேணுங்கிற நெனப்புல என்னக் கட்டிக்கப் போறவன் எல்லாத்துக்கும் மண்டய ஆட்டுறான். கல்யாணத்துக்குபிறகு அப்புடியே இருக்க முடியுமா. போற எடத்துல என்ன நெலமையோ அதப் பாத்த பிறகுதான்டி வேலக்கிப் போறதா இல்லையானே முடிவு எடுக்க முடியும். அதுவரைக்கும் ஒங்க கூட இருக்கேனே…”யாமினியின் பேச்சில் கண்கலங்கிப் போனாள் நவநீதசுந்தரி.

யாமினியின் திருமணத்திற்குப் பிறகு நவநீதசுந்தரி கண்ணனூரிலிருந்து தனியாகத்தான் வேலைக்கு வந்து சென்றாள். புவியரசு அவளை பின்தொடர்ந்து செல்வதில் முன்னேற்றம் கண்டான். மெல்லியதாய் சிரிக்க ஆரம்பித்தவள் மணிக்கணக்கில் அலைபேசியில் அவனோடு சிரித்து சிரித்து பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டாள்.

யாருக்கும் சந்தேகம் வந்துவிடாதவாறும் நடந்து கொண்டாள். எப்போதாவது யாமினி அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினால் புவியரசைப் பற்றிக் கேட்பாள். அப்போதெல்லாம் நீதான் சொல்லியிருக்கியே நாம உண்டு நம்ம வேல உண்டுனு இருக்கனும்னு. நா எதயும் கண்டுக்கிறது இல்லடி. பூமி தன்னையும் சுத்திக்கிட்டு சூரியனையும் சுத்துது. என்னைக்காச்சும் சூரியன பூமி தொட முடியுமா. தொட்டா மொத்தமா எரிஞ்சு போயிரும்… நவநீதசுந்தரியின் சொல்லாடலில் உண்மை இருப்பதை உணர்ந்து பெருமைபட்டுக் கொண்டாள் யாமினி.

ஒட்டுமொத்த அழகையும் உதடுகளுக்குள் பூட்டிவச்சு உசுர எடுக்குறாளே. அதை உறிஞ்சி குடிக்கும் நாள் எந்நாளோ. அந்த நாள் எந்த உலகில் இருக்கோ தெரியலயே. ஓராயிரம் கவிதைகளை ஒவ்வொரு கண்களுக்குள்ளும் குவித்து வைத்து என் இதயத்தை குடைபவளின் மேனியை என் கரங்களால் கடைந்தெடுக்க நேரம் சீக்கிரம் வாய்க்காதா. நம்ம வச்ச குறி தப்பவில்லை. இருந்தாலும் சுவைத்துவிட முடியவில்லையே என்று ஏங்கினான் புவியரசு.

காதலின் உச்சத்திற்கு சென்றான் புவியரசு. அதனைக் கொண்டாடும் விதமாக சத்யம் லாட்ஜில் அறை எடுத்து தன் நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்து மகிழ்ந்தான்.

மாப்ள ஒனக்கு மச்சம்டா. இல்லனா பேரழகின் பிறப்பிடமாய் திகழும் அவள் கிடைப்பாளா. இன்னும் அவள எங்கயும் கூட்டிப் போகலயா. என்னடா இப்புடி சொதப்புற. வாழ்க்கையின் ரகசியத்தை நாங்கள் சொல்லித் தரனுமா என்னா… மதுவுக்குள் மூழ்கிய நண்பர்கள் சொற்களை வழிந்தோடச் செய்தார்கள். மதுவுக்குள் மூழ்கியவாறே அந்தச் சொற்களை மாலையாக்கி அணிந்து மகிழ்ந்தான்.

ஆடிட்டர் கோவிந்தராஜின் எழுபதாவது பிறந்த நாள் விழாவினை அலுவலகத்தில் எல்லோரும் கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள். இரவு விருந்துடன் விழா நிறைவு பெற ஏழு மணியானது.

நவநீதசுந்தரியின் அலைபேசி சினுங்குவதும் அமைதியாவதுமாக இருந்தது. ஒருகட்டத்தில் அதன் ஒலியளவைக் குறைத்து வைத்தாள். கவனித்துக் கொண்டிருந்த ஆடிட்டர் கோவிந்தராசு மாடியிலிருந்து வெளியில் வாசலைப் பார்த்தார். புவியரசு வீதியில் அலைபேசியை நோண்டிக்கொண்டு நின்றான். உள்ளே வந்தவர் நவநீதசுந்தரியை பார்த்தார். அவள் அலைபேசியில் குறுந்தகவல் ஒன்றை பதிவு செய்துகொண்டு இருப்பதை அவளின் பின்புறம் இருந்த நிலைக் கண்ணாடி காட்டிக் கொடுத்தது. குறுஞ்செய்தியை அனுப்பியவள் தனது கைப்பைக்குள் அலைபேசியை வைத்தாள்.

வேகமாய் மாடியிலிருந்து வீதியை பார்த்தார். புவியரசு அலைபேசியை சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு மாடியை திரும்பி பார்த்தபடி சென்றுகொண்டிருந்தான்.

நவநீதசுந்தரியின் நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாமல் வழக்கத்தைவிட சுறுசுறுப்பாக காணப்பட்டாள். யாமினி வராத நாட்களில் புவியரசோடு காரில் அவளது ஊர் எல்லைவரை செல்வதை ஆடிட்டர் கோவிந்தராசுவிடம் நண்பர் செங்குட்டுவன் பலமுறை நேரில் பார்த்ததாக சொல்லியிருக்கிறார்.

விழா முடிந்ததும் நவநீதசுந்தரியை தனது காரில் ஏற்றிக் கொண்டு பேருந்து நிலையம் வந்தார். புவியரசு பின்தொடர்ந்து கொண்டே இருந்தான். வீட்டுக்குப் போயிட்டு எனக்கு போன் பண்ணும்மா. நாளைக்கி மதியம் வந்தால் போதும். உனக்கும் சீக்கிரம் மூன்றரை பவுன்ல நெக்லஸ் வாங்கனும். உங்க அப்பாகிட்ட சொல்லி ஒனக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளை பாக்கச் சொல்லனும் என்று சொல்லிக்கொண்டே தனது காரை ஓரமாக நிறுத்தினார். அவள், வர்றேங்க சார் என்றவாறு பேருந்தில் ஏறினாள். பேருந்து புறப்பட்டது. புவியரசின் அழைப்பு வந்துகொண்டே இருந்தது. ஆடிட்டர் பார்த்துக்கொண்டே இருந்ததால் பேருந்து மறையும் வரை அலைபேசியின் ஒலியளவை குறைத்தே வைத்திருந்தாள்.

“ஏங்க இப்புடி பறக்குறீங்க. நான்தான் வர்றேனு சொல்லிட்டேன்ல. ராத்திரி பூரா தூங்கவிடல. கல்யாணம் வரைக்கும் பொறுத்திருக்க முடியாதா. அவ்ளோ அவசரமா. சார் மத்தியானம் ஆபிஸ்க்கு வரச்சொன்னார். நா ஒடம்பு சரியில்லைனு லீவு சொல்லிட்டேன். ஒங்களுக்காக நான், எங்க சார்கிட்ட சொன்ன முதல் பொய். இன்னும் எத்தன பொய் சொல்ல வைக்கப் போறீகளோ” சொல்லிக்கொண்டே கட்டிலில் அமர்ந்தாள். சாய்ந்தரம் கொண்டு போய் டவுன்ல விட்ருங்க. அப்பதான் ஆபிஸ் முடிஞ்சு போறமாதிரி எங்க ஊர் பஸ்ல வீட்டுக்கு கெளம்ப முடியும்.” முந்தானையை வலது கை விரல்களால் பின்னிக்கொண்டிருந்தாள்.

“இப்பவே மணி பன்னண்டாச்சு. நாலு மணிக்கு கார்ல கெளம்புனா ஆறுமணிக்கெல்லாம் போய்டலாம். இந்த லாட்ஜ்க்கு ஒருநாள் வாடகை பதினஞ்சாயிரம். எல்லாம் ஒனக்காகத்தான். வா…. அடங்கா பசியோடு இருக்கேன் என்னை அப்படியே அடக்கிவிடு” மேல்சட்டை பணியனை கழட்டி கட்டிலில் போட்டவன் அவளை நெருங்கி தோள்களில் கை போட்டான். தொட்டால் சினுங்கியாய் வெட்கத்தில் குறுகிப் போனாள்.

அவளை மார்போடு அணைத்தான். தூண்டில் மீனாய் துடித்தாள். என்னங்க… நான் சொன்னேனே வாங்கி வந்தீங்களா… முனுமுனுத்தாள். ம்…. வாங்கி வந்திருக்கேன். கொஞ்சம் குடிச்சாலே போதை இமயமலை உச்சிக்கு கொண்டு போய்டும். அதோடு உன்னோட போதையும் சேர்ந்தால் எனக்கு கண்ணே தெரியாது. அதாங்க எனக்கு வேணும்… சொல்லிக்கொண்டே மதுப்பாட்டிலை திறந்து கண்ணாடி குவளையில் ஊற்றினாள். அவன் ஒட்டுமொத்தமாக தனது ஆடைகளை களைந்து மெல்லிய துண்டு ஒன்றை கட்டியிருந்தான்.

சன்னல் கதவினை திறந்தாள். வெளிக்காற்று உள்ளே நுழைந்து வேடிக்கைப் பார்த்தது. எதற்கு சன்னலை திறந்தாய் என்பது போல் கண்களை உயர்த்தினான். நாம் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து அந்தச் சூரியன் கொஞ்ச நேரம் வெட்கத்தில் குளிரட்டுமே என்றாள்.

என்னங்க கல்யாணத்துக்குப் பிறகு உங்கப் பசியை அடக்க முடியாமல் திணறப் போறேன். அவன் மதுவை குடித்துக்கொண்டே அவளை இறுக அணைத்தான். என்னங்க எதையும் நீங்க முழுசா சாப்டுவீங்களா இல்ல அறைகுறைதானா.

நான் முழுசா உன்ன சாப்பிடப் போறத பாக்கத்தானே போற. எப்புடி நம்புறது. அப்புடினா இந்தப்‌ பாட்டில் முழுவதுமாய் குடிங்க பாக்கலாம்.

ம்….அப்படியா.

ம்… அப்படித்தான்.

இத முழுசா குடிச்சா என் கண்ணே எனக்குத் தெரியாது. அப்படினா இன்னக்கி ராத்திரி இங்கயே தங்கிருவோமா… எத்தன ராத்திரி வேணாலும் ஒங்க கூட தங்குறேன்ங்க. அவளின் சொற்களில் சொக்கிப் போனவன் ஆனந்தத்தில் அப்படியே குடித்தான்.

வாய் அவனுக்கு உளர ஆரம்பித்தது. அவளின் மார்பில் சாய்ந்தான். முந்தானையின் வாசத்தை நுகர்ந்தபடி அவளையும் நுகர கட்டிலில் அவளோடு சாய்ந்தான். அவனால் அவளை இப்போது நுகர முடியாது என்பதை உணர்ந்தாள்.

தனது பையை திறந்தாள். அவனைப் பார்த்தாள். மேற்கு சுவரையும் பார்த்தாள். கண் இமைக்கும் நேரத்தில் அவனது குறியை அறுத்து சன்னலில் எறிந்தாள். அது தார்ச்சாலையில் விழ, வேகமாக வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. . நவ….நவ…. என்று அலறினான். அலறல் சத்தம் கேட்டு லாட்ஜில் இருந்தவர்கள் அறையை நோக்கி ஓடிவந்தனர்.

“எத்தனப் பொண்ணுகள நாசம் பண்ணியிருப்ப. அப்பாவி புள்ளைகள மயக்கி கெடுத்து அத வீடியோ எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்புறியா. பாருடா….. பாரு…..” என்று கத்திக்கொண்டே தனது பைக்குள்ளிருந்து செய்தித்தாள்களை எடுத்து அவன் மேல் போட்டாள். “இந்த கவிதாளும் நானும் ஆறாங்கிளாசுலருந்து ஒன்னாப் படிச்சோம்டா. என் உசுருடா அவ. அவளை மயக்கி கெடுத்து கொன்னுட்டியேடா. பணம் இருக்க திமிருல ஜெயிலுக்குப் போறதும் வாரதும் ஒனக்குப் பழகிப் போச்சுல. நா என்ன கூறுகெட்ட சிறுக்கியா. ஒன்ன நேரா எதிர்க்க என்னால முடியாதுடா. ஆனா எனக்கு இதவிட்டா வேற வழி தெரியல. ஒனக்காகவேதான்ட அங்க வேலக்கி சேந்தேன். இப்ப கூட என்னைய படம்பிடிக்க கேமராவ செட்பண்ணி வச்சுருக்கே. நீ செட் பண்ணுன வீடியோ உலகம்பூரா போகட்டும். நாசம் பண்றவனுகளுக்கு பயம் வரட்டும்”

அவள் சொல்வது எதுவுமே அவன் காதில் விழவில்லை. கைகளை இடுப்பில் பொத்திக்கொண்டு கத்தினான். இரத்தம் பீறிட்டு வழிந்தோடியது. கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவள் திறக்கவில்லை. நான்கைந்து பேர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தனர்.

செய்தித்தாள்கள் கட்டிலில் சிதறிக் கிடக்க கைகளில் இரத்தம் வழிய பெருமூச்சுவிட்டபடி கத்தியுடன் நின்றாள் நவநீதசுந்தரி. இரத்த வெள்ளத்தில் கட்டிலில் செத்துக் கிடந்தான் புவியரசு.

சோலச்சி

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கட்டுரைகள்

பொது சிவில் சட்டமும் – முஸ்லிம் தனியார் சட்டமும்

எச். ஹாமீம் முஸ்தபா

Published

on

இந்திய முஸ்லிம்கள் குறித்தும் பின்பற்றுகின்ற சிவில் சார்ந்த முஸ்லிம் தனியார் சட்டம் குறித்து எதிர்நிலை பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
தென்னைமரப்பூக்கள் பார்ப்பதற்கு அழகானவை. அந்தப்பூக்கள் ஒரு சமூகத்தின் திருமணமேடையில் மங்கலம் சார்ந்த சடங்குபொருள்களுள் ஒன்றாக இடம்பெற்றிருக்கிறதுஇன்னொரு சமூத்தின் இறப்புச்சடங்கில் துயரத்தின் அடையாளமாக இடம் பெற்றிருக்கிறது.

தண்ணீரில் நீந்தும் மீன் வங்கத்துப் பார்ப்பனருக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட உணவாகவும் ஏனைய பார்ப்பனருக்கு விலக்கப்பட்டதாகவும் இருக்கிறது. இப்படி இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பின்பற்றப்படும் மரபுகளும், பழக்க வழக்கங்களும் நூற்றுக்கணக்கில் இருகின்றன.இவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் இந்தியாவின் சட்டஅமைப்பு.

பொதுசிவில்சட்டம் என்ற ஒன்றைக் குறித்த விவாதம் இல்லாமலேயே இந்தியச்சமூகம் இத்தனை ஆண்டுகால வாழ்க்கையை கடந்து வந்திருக் கிறது. அவரவரும் அவர்களின் நம்பிக்கைகளின் பெயரால், பாரம்பரியங் களின் பெயரால், மரபுகளின் பெயரால் பேணப்படும் நடைமுறைகள் மனித சமூகத்தை பின்னிழுக்கின்றன , அல்லது அவை காட்டாண்டித்தனமாக இருக்கின்றன என்று பொதுச்சமூகம் கருதும்போது அதனை
ஓரிடத்தில் தடுத்துநிறுத்தவும் நாகரிக சமூகம் பக்குவம் பெற்றுள்ளது.

அந்தப்பக்குவத்தின் வழியாகத்தான் இந்தியச்சமூகம் உடன்கட்டை வழக்கத்தை ஒழித்தது,குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தியது , தேவதாசிமுறையினை முற்றாக நிராகரித்தது.அனைவரும் சமமான வர்கள் என்ற அடிப்படை விழுமியத்தின் அடிப்படையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் உருவாகி நடைமுறைக்கும் வந்துவிட்டது.


பல்வேறு சமூகங்களும் தாங்கள் பின்பற்றிய வழக்கங்களை அல்லது சட்டமரபுகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி இருக்கின்றன. ஒருகாலத்தில் முஸ்லிம் சமூகத்தில் அதிகமாகப் பேசப்பட்ட ‘முத்தலாக்’ முறை இன்று கணிசமாக இல்லை என்னும் நிலைக்கு வந்துவிட்டது திருமணத்திற்கான வயதுவரம்பு குறிப்பாக பெண்களுக்கு என்பது இந்தியச்சூழலில் அனைவருக்கும் பொதுவானது என்று அரசு தெளிவு படுத்தி இருக்கிறது. இதில் அரசு தனியார் சட்டங்களையோ, சாதிகளின் பார்வைகளையோ
ஏற்றுக்கொள்ளவில்லை. சிதம்பரம் தீட்சிதர்கள் சார்ந்த பிரச்சனையில் குழந்தைத் திருமணம் என்பதும் ஒன்று என்பதை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

நூற்றுக்கணக்கில் சாதிகள், இனங்கள், பழங்குடிகள் , நிலவியல் சூழல்கள் இருக்கின்ற விரிந்துபட்ட நிலப்பரப்பு ஒன்றில் அனைவருக்கும் பொதுவான சட்டம் என்னும் பொதுப்புள்ளியை நோக்கி இப்படித்தான் பயணப்பட முடியும்.காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரும் வழக்குரைஞருமான கபில்சிபில் பொதுசிவில் சட்டம் குறித்து
எழுப்பியுள்ள கேள்விகள் முக்கியமானவை. குறிப்பாக இந்து மதத்திற்குள் காணப்படும் பிஹிதி என்னும் வழமை குறித்தும் , வடகிழக்கு மாநிலங்கள் குறித்தும் அவர் எழுப்பி இருக்கும் கேள்விகள் முக்கியமானவை .

மண்ணுக்கும் , நெருப்புக்கும், பருந்துக்கும் இறந்தவர் உடலை ஒப்படைக்கும் வழக்கங்களைக் கொண்டிருக்கிற ஒரு நிலவியல் சூழலில் மேற்குறிப்பிட்ட மூன்றிலிருந்தும் பொதுவுக்கு என்று எந்த ஒரு குறிப்பிட்ட வழக்கத்தையும் தேர்வு செய்தல் சாத்தியமில்லை. அதே வேளை பொது மயானம், இறந்தவரின் உடலைக் கொண்டுசெல்ல பொதுப்பாதையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுதல் தொடர்பாக சட்டம் இயற்றமுடியும். கறாராக நடைமுறைப்படுத்தவும் முடியும்.

இந்தியாவின் கிரிமினல் சட்டம் ஏற்கெனெவே அனைவருக்கும் பொதுவானதாக இருக்கிறது.திருட்டுக்கும், ஊழலுக்கும் , கொலைக்கும் , வன்கொடுமைக்கும் , வரதட்சணைகொடுமைக்கும் விசாரிக்கப்படும் சட்டமும் , கொடுக்கப்படும் தண்டனையும் அனைவருக்கும் பொது.

இப்போது சிவில் சட்டத்தில் இருக்கும் தனியார் சட்டக் கூறுகளை நீக்கம் செய்துவிட்டு நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான சட்ட அமைப்பைக் கொண்டுவரப்போவதாக ஒன்றிய அரசு அறிவித் துள்ளது. அதற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புகளையும் கேட்க ஆரம்பித்துள்ளது.

அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்னும் தோற்றத்தைக்
கொடுத்தாலும் முஸ்லிம்களை மட்டுமே குறிவைத்து இந்தப் பொதுசிவில் சட்டம்கொண்டுவரப்படுகிறது என்னும் உணர்வு எல்லோரிடமும் இருக்கிறது. உண்மையாகவும் இருக்கிறது. இந்தியாவில் இருக்கின்ற மற்ற எல்லா மக்களும் ஒரே சட்டத்தை பின்பற்றுவதுபோலவும் முஸ்லிம்கள் மட்டும் முஸ்லிம் தனியார் சட்டம் ஒன்றின்படி நடப்பது போலவும், அந்த சட்டவிதிகள் அநீதம் கொண்ட ஒன்றாக இருப்பதுவும் போன்றதொரு தோற்றம், இந்துத்துவத்தால் நீண்டகாலமாகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நூற்றுக்கணக்கான சட்ட முறைகள் சிவில் சட்டத்தில்
பின்பற்றப்படுகின்றன.அந்த சட்ட நடைமுறைகள் சாதி சார்ந்து, மதம் சார்ந்து , நிலவியல்சார்ந்து இருக்கின்றன. முஸ்லிம்களுக்கு என்று சிவில் சார்ந்து தனியாக சட்டம் இருப்பதுபோலவே பல்வேறு மதங்களுக்கும் , சாதி அமைப்புகளுக்கும், வடகிழக்கு மாநிலங்களை மையப்படுத்திய நிலவியலில் வாழும் மக்களுக்கும் தனித்தனியாக சிவில் சட்ட நடைமுறைகள் இருக்கின்றன. உண்மை நிலை இவ்வாறிருக்க முஸ்லிம்களை மட்டும்
குறிவைத்து ஒரு பொதுப்புத்தியை உருவாக்க இந்துத்துவம் முயற்சிக்கிறது. இதன் வழியாகஅதிகாரத்தில் தனது இருப்பினை தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்ள முயற்சிக்கிறது.


இந்துத்வத்தின் அதிகாரப்பசிக்கு முஸ்லிம் எதிர்ப்பு தொடர்ந்து இரையாக்கப் படுகிறது.மாட்டிறைச்சியின் பெயரில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் மற்றும் கொலைகள் , ஹிஜாபைமுன்வைத்து நடத்திய அரசியல், குஜராத் பில்கிஸ்பானு வழக்கில் குற்றவாளிகளைநன்நடத்தைக் கொடுத்து சிறையில் இருந்து வெளியே கொண்டுவந்தது. சிறுபான்மையினரில் உள்ள நலிந்த மாணவர்களுக்கான வழங்கப்படும் கல்வி உதவித்தொகைமீதான நெருக்கடி
என்று ஒன்றிய அரசு முஸ்லிம்களை குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் நெருக்கடிகளை வரிசைப்படுத்தலாம் .

மதம் கடந்த நிலையில் காஷ்மீரிகளுக்குரியதாக இருந்த காஷ்மீருக்குரிய சிறப்பு அந்தஸ்தை ‘முஸ்லிம் வளையத்திற்குள்’ கொண்டு வந்து அதனை ரத்து செய்தது, குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டுவந்து அதில் முஸ்லிம்களை குறிவைத்து செயல்பட்டது என்று ஒன்றிய அரசின் ஒவ்வொரு அசைவிலும் முஸ்லிம் எதிர்ப்பும் வெறுப்பும்,ஒழிப்பும்வெளிப்படையாக இருப்பதைக்காண முடியும் .

முஸ்லிம்கள் மீதான இந்த வெறுப்பையும், எதிர்ப்பையும் பொதுப்புத்திக்குள் கொண்டு செல்ல ஊடகங்கள் , இணையம், திரைப்படம் உள்ளிட்ட அனைத்து கலைவடிவங்களும் பயன்படுத்தப்படுகின்றன. காஷ்மீர் ஃபைல்ஸ், கேரள ஸ்டோரி என்றெல்லாம் முஸ்லிம்களை அவதூறு செய்து குற்றப்படுத்தும் திரைப்படங்கள் வெளிவருகின்றன. பாபரி மசூதியை இடித்து இராமர் கோவில் கட்டுதல், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல் பொதுசிவில்சட்டம் கொண்டுவருதல் என்னும் முஸ்லிம் எதிர்ப்பை
முன்னிலைப்படுத்திய வேலைத்திட்டத்தில் முதல் இரண்டும் கிட்டத்தட்ட நிறைவேறிவிட்டன.

இடையில் பாகிஸ்தானை முன்வைத்து ஒரு புல்வாமா நாடகம் .இந்தத் தொடர்ச்சியில் இப்போது பொதுசிவில்சட்டம் கொண்டுவரும் முயற்சியை அரசு
மேற்கொண்டுள்ளது. வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க கையில் எதுவும் இல்லாத சூழலில் பொதுசிவில்சட்டம் என்பதன் வழியாக மீண்டும் ஓர் முஸ்லிம் எதிர்ப்பை உருவாக்க முயற்சிக்கிறது இந்துத்துவம். பெண்களுக்கு உரிமை எதுவும் முஸ்லிம் சமூகத்தில் கொடுக்கப்படவில்லை என்னும் ஒரு பிரச்சாரத்தை இதனூடாக இந்துத்துவம் முன்வைக்கிறது.

இஸ்லாம் பெண்களுக்குவழங்கிய உரிமை களை அதன் தொடக்க நிலையிலேயே சட்டவடிவமாக்கிவிட்டது. புனிதப்பிரதியான திருக்குர்ஆன் , மற்றும் நபி முஹம்மதுவின் சொல், செயல், ஏற்பாக இருக்கின்ற நபிமொழி என்னும் ஹதீஸ் பிரதிகளிலும் இதற்கான சான்றுகளைக் காணமுடியும். இது இஸ்லாத்திற்கும் ஏனைய சமயங்களுக்கும் இஸ்லாமிய சமயத்திற்கும் இடையிலான ஓர் அடிப்படையான வேறுபாடு.

தமிழ்நாட்டில் பெண்களின் சொத்துரிமைக்காக இருபதாம் நூற்றாண்டு கடைசி வரை காத்திருக்க வேண்டியது இருந்தது. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே பெற்றோரின் சொத்தில், பிள்ளைகளின் சொத்தில், கணவனின் சொத்தில் பெண்ணிற்கு உரிமை உண்டு என்பதை சட்ட நிலையில் இஸ்லாம் தெளிவுபடுத்திவிட்டது. ஆண்/பெண் வாரிசு சொத்துரிமை குறித்து திருக்குர்ஆன் 4- ஆவது அத்தியாயம் 11,12, 176- ஆவது வசனங்கள்விரிவாகக் கூறுகின்றன .

“ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்துள்ளதற்கேற்ப பெண்கள் அவர்கள்
சம்பாதித்துள்ளதற்கேற்ப பங்கு உண்டு” ( திருக்குர்ஆன்.4;32) என்று ஆண்/பெண் இருவரையும் உழைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவர்கள் என்னும் நிலையில் வைத்து குர்ஆன் குறிப்பிட்டாலும் குடும்பத்தலைமை என்பதை ஆண்களுக்குரியதாக இஸ்லாம் பார்க்கிறது.ஆண்களின் குடும்பப் பொறுப்பு என்னும் புரிதலில் இருந்து, ஆண்கள் பெண்களின் நிர்வாகிகள் என்னும் நிலையில் இருந்து பெண்களுக்கான சொத்துரிமை அளவை இஸ்லாம்
கணக்கிடுகிறது.“ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர்.இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கிறான் என்பதும் ஆண்கள் தங்களுடைய செல்வத்தில் இருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும்” (திருக்குர் ஆன்.4;34) என்னும் குர்ஆன் வசனங்கள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன

ஆண் பெண் இணைந்துகொள்ளும் திருமண உறவில் அந்த இணைப்புக்கு பெண்ணின் சம்மதத்தை அடிப்படையான நிபந்தனையாக இஸ்லாம் வைக்கிறது. (புஹாரி 5136 முஸ்லிம் 1419)திருமணம் செய்து கொள்கிறார்கள்.கணவனோடு சேர்ந்து வாழ விருப்பம் இல்லை
விவாகரத்தை முன்மொழிய மனைவிக்கு அதிகாரம் உண்டு என்று இஸ்லாம் அனுமதிக்கிறது.


ஆண்கள் கொடுக்கும் விவாகரத்து ‘தலாக்’ என்றால் பெண்கள் கொடுக்கும் விவாகரத்து ‘குலா’எனப்படுகிறது .ஆண்/பெண் யாராக இருந்தாலும் போகிற போக்கில் விவாகரத்து சொல்லி விட்டு போய்விடமுடியாது. இன்று அரசாங்கம் அதில் பல சட்டநடை முறைகளைக் கொண்டு வந்துள்ளது. விவாகரத்து பெற விரும்புகிறவர்கள் தங்களுடைய மதத்தலைமையிடமிருந்து அவரின் முன்னிலையில் ஷரியத் சட்டப்படி விவாகரத்துப் பெறும் ஒருவர் அந்த மதத்தலைமை வழங்கிய விவாகரத்து அனுமதி உத்தரவை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் . அதன் அடிப்படையில் நீதின்றத்தில் இருந்தும் விவாகரத் திற்கான ஆணையைப்பெற வேண்டும். அந்த நீதிமன்ற ஆணையைக் கொண்டு ஏற்கெனவே திருமணத்தைப் பதிவுசெய்திருந்த
பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு அந்தத் திருமணத்தை சட்டப்படி ரத்து செய்ய வேண்டும் அதன்பிறகுதான் மறுமணம் என்னும் நிலை நோக்கி நகர முடியும்.நான் அறிந்தவரை தமிழ்நாட்டிலும் ,கேரளாவிலும் சூழல் இதுதான் .

முஸ்லிம் தனியார் சட்டத்தை முஸ்லிம்கள் தங்களின் சமய மொழியில் ஷரியத் சட்டம் என்கின்றனர். இஸ்லாமிய மரபில் இரண்டு கூறுகள் இருக்கின்றன. ஒன்று ‘தீன்’ , மற்றொன்று ‘ஷரியத்’ . ‘தீன்’ என்பது அடிப் படையான இறைக்கோட்பாடு. இறைவன் ஒருவன் அல்லாஹ். இஸ்லா மிய இறையியல் ‘தீன்’ என்பதை மாற்றமுடியாத ஒன்றாகவும் நித்தியத்துவம் கொண்டதாகவும் பார்க்கிறது. உலகின் முதல் மனிதரான ஆதம் தொடங்கி இறுதித்தூதரான
நபி முஹம்மது வரை இந்த இறைக்கோட் பாட்டைப் பேசினார்கள் என்பது இஸ்லாமிய இறையியல்.

இஸ்லாமிய இறைக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களின் வாழ்வியல் நெறிகளை ,சட்டங்களை திருக்குர்ஆன் அடிப்படையிலும் நபி முஹம்மது அவர்களின் சொல் செயல் அங்கீகாரமாக இருக்கின்ற ‘ஹதீஸ்’ என்னும் நபிமொழிகளின் அடிப்படையிலும் இஸ்லாமிய அறிஞர்கள் உருவாக்கிய சட்டவிதிகளே ஷரியத்தாக இருக்கிறது. ‘தீன்’ மாறாத ஒன்று ‘ஷரியத்’ என்பது அறிஞர்களின் பார்வைக்கு ஏற்ப மாறும் நெகிழ்வுடைய ஒன்று. இஸ்லாமிய அறிஞர்கள் தேவையான மாற்றங்களை ‘ஷரியத்’ சட்டங்களில் காலத்திற்கு
ஏற்பசெய்துள்ளார்கள். செய்து கொண்டும் இருக்கிறார்கள். சமீபத்தில் சவுதி அரேபிய அரசு கொண்டுவந்த ஒரு மாற்றம் அந்த வகையில் கவனிக்கத்தக்கது.. இந்த ஆண்டு (2023) ஹஜ் பயணம் சார்ந்த வழிகாட்டு முறையில் சவுதி அரேபிய அரசு முக்கியமான ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தது. இதுவரை ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பருவ வயதடைந்த ஆண் /பெண் இருபாலரில் ஆண்கள் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும் . ஆனால் பெண்கள்
அவ்வாறு தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாத சூழல்தான் இருந்தது. தந்தை ,கணவன் மகன் இவர்களுள் யாராவது ஒருவர் துணையுடன்தான் செல்லமுடியும் . இவர்கள் மூவரும் இல்லாத சூழலில் உடன் பிறந்த சகோதரன் போன்ற திருமணம் செய்துகொள்ள தடுக்கப்பட்ட உறவுகளின் துணையுடன்தான் ஹஜ் செய்ய முடியும். இஸ்லாமிய மரபில் இதனை ‘மஹரம்’ என்று குறிப்பிடுவார்கள் . இந்த ‘மஹரம்’ முறையில் இந்த ஆண்டு முதல்
சவுதி அராசங்கம் நெகிழ்வை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி நாற்பத்தி ஐந்து வயதுக்கு மேற்பட்ட பெண்கள் யாருடைய துணையும் இல்லாமல் தனித்து ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது. ஷரியத்தில் ஏற்பட்ட இந்த நெகிழ்வின் காரணமாக உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கில் பெண்கள் தனித்து ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள் . இந்தியாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் பெண்கள் சென்றார்கள்.

பத்துக்கும் மேற்பட்ட ஷரியத் முறைகள் உலகெங்கும் இருக்கின்றன. உலகம் முழுவதும் ஒரே மாதிரியான ஷரியத் சட்டங்கள் இல்லை. இஸ்லாமிய நாடுகளிலும் சரி அல்லது முஸ்லிம்கள் கணிசமாக வாழுகின்ற நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் தேவை மற்றும் சூழலுக்கு ஏற்ப ஷரியத் சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்தியாவில் காலனிய ஆட்சி காலத்தில் உருவான
முஸ்லிம் தனியார் சட்டம் என்னும் வடிவம் இப்படியான சூழலில்தான் அறிமுகமாகியது என்பது வரலாறு.

இமாம்கள் என்று அறியப்படும் இஸ்லாமிய அறிஞர்களின் பெயரால் இவை
அறியப்படுகின்றன . இவர்களின் சிந்தனைப் பள்ளிகளை ‘மத்ஹப்’ என்று அழைக்கிறார்கள். அந்தவகையில் ஷாபி அவர்களின் பெயரால் அறியப்படும் ஷாபி மத்ஹப், இமாம் அபூஹனிபா அவர்களின் பெயரால் அறியப்படும் ஹனபி மத்ஹப், இமாம் மாலிக் அவர்களின் பெயரால் அறியப்படும் மாலிக் மத்ஹப், இமாம் ஹன்பல் அவர்களின் பெயரால் அறியப்படும் ஹன்பலி மத்ஹப் ஆகியவை இவற்றுள் குறிப்பிடத்தக்கவை .

தமிழ்நாட்டிலும் இந்த நான்கு சிந்தனைப் பள்ளிகளின் செல்வாக்குகள் இருகின்றன. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கேரளம் முழுவதும் ஷாபி சிந்தனைப்பள்ளியின் சட்டதிட்டங் களைப் பின்பற்றுகிறார்கள். விருதுநகர் தொடங்கி வட தமிழ்நாடு முழு வதும் ஹனபி சிந்தனைப்பள்ளி சட்டதிட்டங்களைப் பின்பற்றுகிறார்கள். இந்த சிந்தனைப் பள்ளிகளின் சட்டதிட்டங்கள் இடையில் பல்வேறு வேறுபாடுகளும் இருக்கின்றன ஒன்றுபடும் புள்ளிகளும் இருக்கின்றன.

இந்தியாவின் ஷரியத் மரபுக்கு தொடக்கமாக முகலாயர் ஆட்சிமுறை இருக்கிறது. அவர்களின் ஆட்சி முறையில் கிரிமினல் சட்டம் ஷரியத் அடிப்படையில் அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. சிவில் நடைமுறைகளைப் பொறுத்தவரை முஸ்லிம்களுக்கு ஷரியத்
சட்டமுறைகளும் முஸ்லிம் அல்லாதோருக்கு திருமணம், வாரிசு உரிமை போன்ற விஷயங்களில் அவரவர்க்கான சிவில் நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன.

காலனிய ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டபிறகு இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பியசட்டமுறையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட்டது. என்றாலும் சிவில் நடைமுறைகளை அவர்கள் அப்படியே அனுமதித்தனர். இப்போதுள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தின் முதல் வடிவம் காலனிய ஆட்சியர்களால் முதன் முதலாக 1937 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது . இந்திய முஸ்லிம் தனியார் சட்டத்தில் பல்வேறு காலங்களில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடத்தக்க மாற்றம் 1939-ஆம் ஆண்டு
கொண்டுவரப்பட்ட முஸ்லிம் விவாகரத்து சட்டம். இந்தச் சட்டம் முஸ்லிம் பெண்களின் விவாகரத்துக் கோரும் உரிமையையும் அதற்காக நீதிமன்றத்தை நாடுவதையும் உறுதி செய்தது.

விடுதலை பெற்ற இந்தியாவில் அரசியல் சாசனம் உருவானபோது இத்தகையத் தனியார் சட்டங்கள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன,. இந்த விவாதங்களின் முடிவில் அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட முன்னோர்கள் இந்திய அரசியல் சாசனத்தின் 25- A பிரிவின் ஷரத்துக் களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் பல்வேறு தனியார் சட்டங்களும் சிவில் சார்ந்த நடைமுறைகளில்
பின்பற்றப்படலாம் என்று முடிவு செய்தனர் .

அப்படிஎன்றால் முஸ்லிம் பெண்களுக்கு பிரச்சனைகள் இல்லையா ? முஸ்லிம் தனியார் சட்டத்தில் பிரச்சனைகள் இல்லையா? என்றால் இருக்கிறது . எல்லா மத, சாதிய சமூகங்களைப் போலவே முஸ்லிம் சமூகமும் இன்றுவரை ஜனநாயகப்படுத்தப்படாமல் இருக்கிறது . எல்லா ஆண்களைப் போலவே முஸ்லிம் ஆண்களும் இருக்கிறார்கள். எல்லா மதங்களிலும் ஆண்கள் மதத்தின் பெயரில் அதிகாரங்களை தமதாக்கிக் கொண்டது போலவே இஸ்லாம் மதத்திலும் நடந்தது. இவற்றை நேர் செய்வதற்கான வழிவகைகளை அரசும் ,
முஸ்லிம் சமூகமும் கண்டறிய வேண்டும். எவ்வளவு காலம்தான் முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகளை ஆண்குரலில் கேட்பது . முஸ்லிம் சமூகத்தின் பொதுப்பிரச்னைகள் குறித்தும் , முஸ்லிம் பெண்கள் குறித்தும் பெண்கள்
பேசும் அதிகாரம் வேண்டும். முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம், ஒன்றிய , மாநில வக்ஃப் வாரியங்கள் , ஜமாஅத் உள்ளிட்ட அமைப்புகளில் பெண்களின் பங்கேற்பும் , பெண்களின் பிரதிநிதித்துவமும் சட்ட பூர்வமாக உறுதி செய்யப்பட வேண்டும் .

இஸ்லாமிய ஷரியத் என்பது காலம்தோறும் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதையும் , உலகெங்கும் இஸ்லாமிய நாடுகளில் அது அவ்வாறு தான்
வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது முஸ்லிம் அறிவுத்தலைமைகளும் மதத்தலைமைகளும் புரிந்து கொள்ளவேண்டும் . மாறிவரும் உலக ஒழுங்குகளுக்கு முகம்கொடுக்கும்வகையில் ஷரியத் சட்டங்கள் வளர்த் தெடுக்கப்படாவிட்டால் இன்றுள்ள சூழலில் முஸ்லிம்கள் இன்னும் சிக்கல்
படுவார்கள் என்பதை உணரவேண்டும்.

இந்திய அரசியல் சாசனத்தின் 25- A பிரிவு விரும்பும் சமயங்களைப் பின்பற்றவும், அதனை நடைமுறைப்படுத்தவும், அதனை பரப்புரை செய்யவும் இந்திய மக்கள் அனைவருக்கும் உரிமை வழங்குகிறது.இந்தியா முழுமைக்குமான பொதுவான ஒரே சட்டம் என்று கூறும் ஒன்றிய அரசு இன்றுவரை அதற்கான வரைவு சட்ட நகல் எதுவும் வெளியிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

ஒன்றிய அரசு பேசும் பொதுசிவில் சட்டம் இந்தியாவின் நூற்றுக்கணக்கான சமூகங்களை பாதிக்கிற ஒன்றாக இருக்க ஆனால் அதுசார்ந்த உரையாடல் கள் அனைத்தும் இந்தப் பொது சிவில் சட்டம் முஸ்லிம்களை குறிவைத்து கொண்டுவரப்படுகிறது என்னும் செய்தியை முன்கொண்டு வந்துள்ளன . ஒருவேளை அதுவே அரசின் நோக்கமாகவும் இருக்கலாம். பொதுசிவில் சட்டம் என்பதில் இருந்து பழங்குடிகளுக்கு விலக்கு வேண்டும் என்னும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டப் பிரச்சனையில் அரசு மற்ற
எல்லோரையும் உள்ளிழுத்துக் கொண்டு முஸ்லிம்களை மட்டும் விலக்கி வெளியே நிறுத்திய அனுபவம் ஏற்கெனவே இருக்கிறது. பொதுசிவில் சட்டத்திலும் அப்படியானதொரு அனுபவத்திற்கு வாய்ப்பு இருப்பதை மறுக்கமுடியாது.

Continue Reading

இலக்கியம்

இராவுத்தர் சாமி வரலாறும் வழிபாடும்

சோலச்சி

Published

on

தமிழ் மொழியில் கதை, கவிதை, நாவல், கட்டுரை என எண்ணற்ற நூல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் கட்டுரை நூல்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. கட்டுரை நூல்களில் பயணக் கட்டுரை ,ஆய்வுக் கட்டுரை, வரலாற்றுக் கட்டுரை என பல வகைகள் உண்டு. தற்கால அரசியலை முன்னெடுத்து சமகால கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வரலாற்றை ஆய்வு செய்வதற்கு எண்ணற்ற தரவுகள் தேவைப்படும். அதற்காக கூடுதல் நேரத்தை ஒதுக்க நேரிடும். வரலாற்று ஆய்வு கட்டுரைகளில் கள ஆய்வு என்பது மிக முக்கிய பங்காற்றுகிறது. கள ஆய்வுகளில் இனத்தைப் பற்றிய ஆய்வு, கடவுள் பற்றிய ஆய்வு, வழிபாடு பற்றிய ஆய்வு என ஆய்வுகளை வகைப்படுத்தி கொள்ளலாம்.
கிராமங்களில் எண்ணற்ற வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. வழிபாட்டு முறைகளை இரண்டு வகையாக பிரிக்க முடியும். ஒன்று குலசாமி வழிபாட்டு முறை, இன்னொன்று கார்ப்பரேட் கம்பெனிகளின் வழிபாட்டு முறை. குலசாமி வழிபாட்டில் நேர்த்திக்கடன் காணிக்கை என்பதெல்லாம் அவர் அவர்கள் முடிவு செய்வது. இந்த குலசாமி வழிபாட்டில் சாமியாடி பூசாரி இருப்பார்கள் பெரிதாக மாடமாளிகை கோபுரங்கள் எதுவும் இருக்காது. ஆனால் கார்ப்பரேட் வழிபாட்டு முறையில் விளம்பரங்கள் மாடமாளிகைகள் வழிபாட்டு முறைகள் என வேறு விதமான ஆடம்பரமாக இருக்கும் .

  பெரும்பாலும் கடவுள்களை கார்பரேட் கம்பெனிகளாகவே மாற்றி பணம் கொழிக்கும் இடமாக ஆக்கிவிட்டார்கள். எது எப்படியோ என்றாலும் நம்மக்கள் கொண்ட இறை நம்பிக்கையை எள்ளளவும் குறைத்து மதிப்பிட முடியாது. நம் மக்களின் இந்த இறை நம்பிக்கையைத்தான் சனாதன கும்பல் சூறையாடுகின்றன. ஒற்றுமையோடு வாழும் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியால் கூறு போடுகின்றனர்.
நம் முன்னோர்களின் வழிபாட்டில் எவ்வித பாகுபாடும் இருந்ததில்லை. இடைச்செருகளாய் வந்த சிலரால் கோயில்கள் சிலருக்கு மட்டுமான கூடாரமாக போய்விட்டது.

அழகர் கோயில் வழிபாடு குறித்து தொ.பரமசிவன், குலசாமி வழிபாடு குறித்து தோழர் அருணன் போன்றவர்களின் ஆய்வுகளும் ஆசீவகம் குறித்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் ஆய்வுகளும் மிக முக்கியமானவை. அந்த வரிசையில் புதிய முயற்சியாக தோழர் கனிமொழி செல்லத்துரை அவர்களின் வரலாற்றுத் தேடல் தொடங்குகிறது.

நாட்டார் வழிபாட்டில் குலசாமிகள்தான் மிகமுக்கியப் பங்காற்றுகின்றன. நாட்டார் வழிபாட்டில் அனைத்து மக்களும் வழிபடும் இடமாக மாறிப்போயிருக்கிறது. அங்குள்ள சாமிகளின் பெயர்களைக் கேட்டாலே நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

தோழர் கனிமொழி செல்லத்துரை அவர்கள் இராவுத்தர் சாமி வரலாறும் வழிபாடும் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் பரவலாக பயணம் செய்திருக்கிறார் என்பதை இந்நூலை வாசிக்கும்போது உணர முடிகிறது.

இந்திய ஒன்றியத்தில் மதபாகுபாடுகள் களைந்து சகோதரத்துடனும் சமத்துவத்துடனும் வாழவே நாம் அனைவரும் விரும்புகின்றோம். அதை மையமாக வைத்துத்தான் நமது வழிபாடுகளும் இருக்கின்றன. நம் நாட்டில் சனாதன கும்பல் இந்து முஸ்லீம் கிறித்துவம் பிரச்சனையை தூண்டிவிடுகிறார்கள். ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்காகவும் அதிகாரத்தை தக்க வைப்பதற்காகவும் இஸ்லாம் வெறுப்பு அரசியலை கையிலெடுக்கிறார்கள். சூழ்ச்சியில் சிக்கி எண்ணற்ற அப்பாவிகள் இறந்துபோகும் அவல நிலை இன்றளவும் தொடர்கிறது.

இந்துக்கள் வேளாங்கண்ணிக்கு செல்வதும் நாகூர் தர்ஹா செல்வதும் ஆண்டாண்டுகாலமாக நடந்து வருகிறது. அதேபோல் இந்துக் கோயில்களின் திருவிழாக்களில் இஸ்லாமியர் கிறித்துவர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பந்தல் அமைப்பது அன்னதானம் வழங்குவது போன்ற நல்ல செயல்களைச் செய்து வருகிறார்கள். இந்தச் செயல்கள்தான் சிலருக்கு கண்களை உறுத்துகிறது. நாம் ஒருமைப்பாட்டுடன் ஒற்றுமையுடன் எப்போதும் மதநல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

 இந்துக் கோயில்களில் இராவுத்தர் சாமி வழிபாடு என்பது பல ஊர்களில் நடந்தேறி வருகிறது. ஆனால் இந்த இராவுத்தர் சாமிகள் உண்மையிலேயே இராவுத்தர்கள்தானா என்கிற ஆராய்ச்சி நீளுவதாக நூலாசிரியர்  பதிவு செய்கிறார்.

 பெரும்பாலும் நாட்டார் தெய்வங்களின் வரலாறு காலம்காலமாய் செவிவழியாகச் சொல்லப்பட்டு வருவதே ஆகும். செவிவழிச் செய்திகளை உறுதிப்படுத்துவதற்கு போதிய ஆதாரங்கள் கிடைப்பதில்லை. மேலும் இந்திய ஒன்றியத்தில் உள்ள இஸ்லாமியர்களோ கிறித்துவர்களோ அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் அல்ல. மதம் மட்டமே அயல்நாட்டிலிருந்து வந்தது. மக்கள் இந்திய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் தெளிவு கொள்ள வேண்டும்.  இருபத்தோறாம் நூற்றாண்டிலேயே இவ்வளவு சாதிய வன்கொடுமைகள் நடைபெறும்பொழுது முந்தைய காலக்கட்டங்களில் இன்னும் அதிகமாகவே வன்கொடுமைகள் நிகழ்ந்திருக்கக் கூடும். வன்கொடுமைகளிலிருந்து மீளவும் தங்களது சந்ததியினரைக் காப்பாற்றிக்கொண்டு உயிர் வாழவும் மதம் மாறியிருக்கிறார்கள் என்பதே உண்மை. இதற்கு நிறைய ஆதாரங்கள் பரவிக்கிடக்கின்றன.

  முலை வரியின் கொடுமைகள் தாங்க முடியாமல் கிறித்துவ மதத்திற்கு மாறிய வரலாறுகள் நிறையவே உண்டு. இந்துக்கள் சேர்ந்து கட்டிய கோயிலுக்குள் குறிப்பிட்ட இனத்தவர் மட்டமே ஆதிக்கம் செலுத்தும் நிலைமை இப்போதும் தொடர்கிறதே...! வரலாறுகளை நாம் உன்னிப்பாக ஆராய வேண்டும். அதற்கு தோழர் கனிமொழி செல்லத்துரை போன்றவர்கள் கள ஆய்வில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
மகாபாரத கதையான பஞ்ச பாண்டவர்கள் கதையிலும் முத்தால் இராவுத்தர் வருகிறார். வேதாரண்யம் வட்டம் பூப்பட்டியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் பக்தர் குல மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பக்தர் குல மாரியம்மனுக்கு எதிர் வலது பக்கத்தில் இராவுத்தர் சாமி சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் செவிவழி வரலாறு உண்மையிலேயே நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. 

பொதுவாக நாம் புராணங்களையும் இதிகாசங்களையும் நம்புவதில்லை என்றாலும் இப்படியெல்லாமா நடந்திருக்கும் என்றும் யோசிக்க வைக்கிறது.

 அனைத்து திரௌபதி அம்மன் கோவிலிலும் பெரும்பாலும் காவல் தெய்வமாக போத்தராசாவும் முத்தால் இராவுத்தரும் இருப்பார்கள். இவர்களைப் பற்றிய கதைகள் ஏராளம் என்றாலும் இப்படியொரு கதையும் உண்டு.

அதாவது, சிவனும் பார்வதியும் கடற்கரையில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஈசானிய மூலையில் மணலால் மாளிகை ஒன்றை கட்டுவதாகவும் அம்மாளிகைக்கு காவலாளியாக மணலில் பொம்மையும் செய்து வைக்கிறார் பார்வதி. ., இப்படி கதை நீண்டு கொண்டு செல்லும் போது ஒருகட்டத்தில் போத்தராசாவின் மகன் அல்லிமுத்து முத்தால் இராவுத்தரின் மகள் மல்லிகா மீது காதல் கொள்கிறான். அல்லிமுத்து தன் தாய் சங்குவதியிடம் சொல்லுகிறான். சங்குவதி யாரென்றால் பஞ்சபாண்டவர்களின் தங்கை. இவள் பஞ்ச பாண்டவர்களிடம் முறையிடுகிறாள்.

பஞ்சபாண்டவர்கள் தனது தங்கை மகன் அல்லிமுத்துவுக்குப் பெண் கேட்பதற்காக முத்தால் இராவுத்தரிடம் செல்கிறார்கள். பெண் தர முடியாது என்று கூறி பஞ்சபாண்டவர்களையே சிறைபிடித்து விடுகிறார் முத்தால் இராவுத்தர். பிறகு அல்லிமுத்துவுக்கு தன்மகளை கலியாணம் செய்து வைக்க சம்மதித்து கலியாணமும் நடைபெற்றதாக கதை முடிகிறது. பிறகு வடக்கு வாசலுக்கு இராவுத்தர் காவல் காக்கிறார். இந்த நிகழ்வு பஞ்சபாண்டவர்கள் வனவாசம் இருந்தபோது நடைபெற்றதாக வாய்வெளிச் செய்தி இன்றளவும் தொடர்கிறது. இந்தச் செய்தியை புதுச்சேரியைச் சேர்ந்த தோழர் ஆதிராமன் சொன்னதாகவும் தகவலைப் பதிவு செய்கிறார் நூலாசிரியர் தோழர் கனிமொழி செல்லத்துரை அவர்கள்.

உண்மையிலேயே இராவுத்தர் என்பவர்கள் இஸ்லாமியர்கள்தானா என்கிற ஆய்வினை தொய்வில்லாமல் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.  குதிரை வியாபாரம் செய்பவர்களை இராவுத்தர் என்றும் அழைப்பதுண்டு என்கிற செய்தியையும் பதிவு செய்கிறார். மேலும் இராவுத்தர் என்கிற பட்டம் பல இனத்தவருக்கும் வழங்கப்பட்டு வந்தது என்றும் தற்போது இஸ்லாமியர்களில் சிலர் தங்களை இராவுத்தர் என இன்றளவும் அழைக்கப்பட்டுக் கொள்வதையும் நூலாசிரியர் பதிவு செய்கிறார்.

 குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்பட்டதும் பாபர் மசூதி இடிப்பில் இந்திய ஒன்றியத்தில் இஸ்லாமியர்கள் எவ்வாறு தாக்கப்பட்டார்கள் என்பதையும் நாடறியும். மாட்டுக்கறி வைத்திருந்ததாகச் சொல்லி உத்திரபிரதேசம் மாநிலத்தில் இஸ்லாமியர் குடும்பம் பட்ட துயரினையும் நாம் சாதாரணமாக கடந்து போய்விட முடியாது. இன்றளவும் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும்மேலும் நசுக்கப்படுவது தொடர்கதையாகிறது.  விவேகானந்தர் , வள்ளலார், இராமானுசர் போன்றவர்கள் சனாதனத்திற்கு எதிராகவும் சமத்துவம் சகோதரத்துவத்துக்காகவும் பாடுபட்டார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  முத்துப்பேட்டைத் தர்கா,  ஏர்வாடி, நாகப்பட்டினத்திலிருந்து வேளாங்கண்ணி செல்லும் வழியில் உள்ள பாப்பாக் கோவில் தர்கா, சிவகங்கையில் உள்ள மொட்டைப் பக்கிரி தர்கா, வேதாரண்யம்,  திருநெல்வேலி என தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்துள்ள நூலாசிரியர் தோழர் கனிமொழி செல்லத்துரை அவர்களுக்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

வரலாற்று ஆய்வு நூல் எழுதுவதில் உள்ள பிரச்சனைகள் ஏராளம். வாய்க்கு வந்ததைப் பேசுவதைப் போல் பேசிவிட முடியாது. மனதில் தோன்றுவதை எல்லாம் எழுத்தாக வடிவமைத்துவிட முடியாது. நூலாசிரியர் ஆய்வு மேற்கொள்ளும் இடத்திற்கு நேரடியாக சென்றுள்ளார். மேலும் வாய்ப்புகள் ஏற்படின் அங்கேயே இரவு நேரங்களில் தங்கி அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி இருக்கிறார். இராவுத்தர் சாமியின் வரலாற்றையும் அந்தப் பகுதியில் எந்தெந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் கொண்டாடுகிறார்கள் என்றும் இராவுத்தர் சாமியின் வழிபாட்டு முறைகளையும் தகவல் தெரிவித்தவரின் பெயரையும் மறக்காமல் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். தர்ஹா வழிபாட்டு முறைகளையும் கள ஆய்வு செய்து நூலில் பதிவு செய்திருக்கும் தோழர் கனிமொழி செல்லத்துரை அவர்களுக்கு வாழ்த்துகள்.

எங்கெல்லாம் இராவுத்தர் சாமி இருக்கிறதோ அவற்றின் புகைப்படங்களையும் நூலில் நூலில் பதிவு செய்திருப்பதால் தாமும் அங்கு சென்று வந்த உணர்வினைத் தருகிறார். இந்நூலினை வாங்கி வாசிக்கின்ற பொழுதோ அல்லது இந்த விமர்சனத்தை வாசிக்கின்ற பொழுதோ உங்கள் பகுதியில் அல்லது உங்களுக்குத் தெரிந்த இராவுத்தர் சாமி வழிபாடு இருக்குமானால் இந்நூலாசிரியரைத் தொடர்பு கொள்ளுங்கள். அவரது கள ஆய்வுக்கு பயன்படக் கூடும்.

இன்றும் பல ஊர்களில் இராவுத்தர் ஊரணி, துலுக்கர் ஊரணி, இராவுத்தர் பேட்டை போன்ற பெயர்களில் இருப்பதை நூலாசிரியர் ஆய்வு செய்ய வேண்டும். இந்திய விடுதலைக்காக அரும்பாடுபட்ட தலைவர்களில் இஸ்லாமியர்களின் பங்கு அளப்பறியது. ஆங்கிலேயர்களிடம் அடிபணியாமல் மன்னிப்புக்கடி்ம் எழுதிக் கொடுக்காமல் வீரத்தோடு பணியாற்றிய இஸ்லாமிய சொந்தங்களின் மகத்தான பணியை நாம் போற்ற வேண்டும்.

 மனிதன் தோன்றிய பிறகு மனிதனால் ஏற்படுத்தப்பட்டதுதான் கடவுள். அப்படி அந்தக் கடவுளை ஏற்படுத்தும்போது இன்னார்தான் வர வேண்டும் வரக்கூடாது என்றெல்லாம் வகுக்கவில்லை. தம் முன்னோர்களையோ அல்லது தம்மைக் காத்த தலைவனையோ தலைவியையோ கடவுளாக எண்ணி வழிபட்டார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது.

 இந்திய ஒன்றியம் மதநல்லிணக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்பதை நாம் வலியுறுத்திட தீய சக்திகளை ஓரங்கட்டி வைத்திட இதுபோன்ற வரலாற்று ஆய்வு நூல்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும் ஒவ்வொருவரும் முனைவர் கனிமொழி செல்லத்துரை அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள இராவுத்தர் சாமி வரலாறும் வழிபாடும் என்கிற நூலினை வாங்கி வாசிக்க வேண்டும் என பேரன்போடு வலியுறுத்துகின்றேன்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்நூலை 2022 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறது. 180 ரூபாய் விலையுள்ள இந்த நூல் 150 பக்கங்களைக் கொண்டது. யாவரும் வாங்கி வாசிக்க வேண்டிய நூல்.

நூலின் விலை ருபாய் 180/-

நூல் கிடைக்குமிடம்:

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

இரண்டாம் முதன்மைச் சாலை,

தரமணி,

சென்னை 600 113

பேச: 044 22522992

நூலாசிரியர் அலைபேசி எண்:

+91 96003 48587

பேரன்பின் வழியில்

சோலச்சி

Continue Reading

இலக்கியம்

கம்பன் பாடாத வரிகள்

கனல்கவி
கவிஞர் பொன்.இளையகுமார்

Published

on

Protest,Fist, Hand,Revolution,

கனல்கவி
கவிஞர் பொன்.இளையகுமார்

புல்வெளியில் போர்வைகள்
ஏதும் இன்றியே
படுத்துறங்கும் வெண்பனிகளை
துயில்லெழுப்ப மறந்ததோ ! (கம்பா)

நண்டூறும் வயலில்
பெண்டூறக் கண்டும்
விளையும் பயிருக்கு
உரமாகும் வியர்வைகளையா ? (கம்பா)

நெடுநெல் போனது
குறுநெல் வாழ்வை
குறைத்திடும் குறிப்பறிதலை
உரைத்திடடக் கூடலையோ ! (கம்பா)

கொஞ்சும் இயற்கைகைக்கு
கொஞ்சம் இடமில்லை
நஞ்சாகும் பூமியிலே
மிஞ்சுமோ கானிகளும் ? (கம்பா)

தீராவறுமைத் தெண்பட்டது
உண்டா கம்பா ?
வம்பில்லை நம்பு
பொதுவுடமை சொல்லு ! (கம்பா)

அறம்சாட வாழ்வியலில்
குறளோடு நில்லு ,
வளைந்தாலும் அரசியலை
அடியோடுக் கொல்லு ! (கம்பா)

மலர்களில் ஊடே
மகரந்தத்தில் தேனூரும்
இன்பம் தீண்டல்
தீர்க்கும் என்றாயே ! (கம்பா)

அந்திச் சுடும்
பிரிவின் வலி
ஆற்றாக் கடையாய்
ஊடல் தீர்க்குமோ ?(கம்பா)

அடுக்கடுக்காய் பொய்
சொன்னாயே கம்பா
அதிலாவது சேர்த்திருக்கலாமே
சாதிகள் பொய்யென்று ! (கம்பா)

யுத்தத்தைத் தவிர்த்து
மொத்தத்தைச் சொல்வேன்
கம்பன் பாடாத
வரி(லி)களை பாடவருகின்றேன் !

புரட்சி ஓங்குக…..

Continue Reading

Trending

Copyright © 2021 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். Developed by : Marxist Info Systems, Coimbatore.