Connect with us

கட்டுரைகள்

கல்வி உரிமை

எழுத்தாளர் மணி கணேசன்

Published

on

எழுத்தாளர் மணி கணேசன்

குழந்தையின் அடிப்படை பிறப்புரிமை கல்வி கற்பதாகும். மனித சமுதாயத்தில் கல்வி கற்பதன் அவசியமானது தொன்றுத் தொட்டு வலியுறுத்தப் பட்டே வந்துள்ளது. ஏனெனில் மனித நடத்தைகள் கல்வியால் மட்டுமே மாற்றமடைகின்றன. அத்தகைய கல்வியினை எப்பாடுபட்டாவது கற்கத் தலைப்பட வேண்டுமென்பதே ஆன்றோர் பலரது சீரிய வாக்காகும். கல்வி ஒன்றே சமுதாயத்தில் விரும்பத்தக்க விளைவுகளை உண்டாக்கவல்லது. மனிதவளம் அதனால் மேம்பாடு அடைந்து நாடு நல்வழியில் உலக அரங்கில் பீடுநடை போடவும் ஏதுவாகிறது. தவிர, ஒரு நாட்டின் வளர்ச்சியென்பது மனித அறிவு வளர்ச்சியோடு நேரடித் தொடர்புடையது. அத்தகு அறிவு வளர்ச்சிக்கு கல்வி இன்றியமையாதது. மேலும், கல்வி எனப்படுவது மனித வாழ்க்கையில் ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கி வருகின்றது.

இக்கல்வியானது பண்டைக் காலத் தமிழ்ச் சூழலில் சாதிப்பாகுபாடுகள் மேலோங்கிக் கோலோச்சியிருந்த காலக்கட்டத்தில் உயர்சாதி மேட்டுக்குடியினராக வாழ்ந்தோருக்கு மட்டுமே குருகுலக் கல்வியாக வழங்கப்பட்டு வந்தது. ஏனைய சமூக அடித்தட்டு மக்கள் காலந்தோறும் கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்களாகவே வாழ விதிக்கப்பட்டிருந்தனர். தவிர, அக்காலக் கல்வி ஆசிரியரை மையப்படுத்தியே காணப்பட்டது. நினைவாற்றல் மற்றும் போர்த்திறனை வளர்ப்பதாகவே பெரும்பாலும் அமைந்திருந்தது. மாணாக்கரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஆங்கே இடமில்லை.

ஆங்கிலக் கிழக்கிந்திய மற்றும் காலனியாதிக்கத்தின் போது கிருத்துவ மதத்தைப் பரவலாக்குதல் மற்றும் ஆட்சி நிர்வாகங்களில் கீழ்நிலைப் பணிகளில் உற்றத் துணையாக இருத்தல் பொருட்டு தன்னார்வ கிருத்தவ சமய அமைப்புகளும் ஆங்கிலேய அரசும் மெக்காலே கல்வித் திட்டத்தை உருவாக்கி கல்வியை எல்லோருக்குமாக வழங்க முற்பட்டன. இவை காரணமாக இடைச்சாதியினர் கல்வி விழிப்புணர்வு பெற்றனர். ஆனாலும், பட்டியல் இனத்தவரான தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பெண்கள் முதலானோர் புறக்கணிக்கப்பட்ட சமூகமாகவே கருதப்பட்டனர் என்றால் மிகையில்லை.

நாடு விடுதலையடைந்ததற்கு பிறகு, அரசால் பல்வேறு கல்வி நலத் திட்டங்களும் பள்ளிகளும் ஊர்தோறும் தோற்றுவிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்ட போதிலும் அனைவருக்கும் கல்வி என்பதில் ஒருவித தேக்கநிலையே தென்பட்டது. மக்களிடையே நிலவிய ஏழ்மை, வறுமை, அறியாமை, மூடப் பழக்கவழக்கங்கள், பழைமைவாதம் போன்றவற்றாலும் சாதிய மற்றும் பெண்ணடிமைத் தனத்தாலும் ஓர் இரும்புத்திரை சமுதாயத்தில் இருந்து கொண்டேயிருந்தது.

அதன்பிறகு, கோத்தாரி கல்விக் குழு, லெட்சுமண முதலியார் கல்விக்குழு ஆகியோர் தந்த கல்விப் பரிந்துரைகளை ஆராய்ந்து அவற்றை உள்ளடக்கி கி.பி. 198 6 இல் புதிய தேசியக் கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. பொதுவான ஒரு கலைத்திட்டம் அதன் வாயிலாக வடிவமைக்கப்பட்டது. அதற்கேற்ப, தொடக்கக்கல்வி நிலையில் நாடு முழுமைக்குமான பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டு பாடநூல்கள் வழங்கப்பட்டன. சமுதாயத்தில் காணப்படும் நலிந்த பிரிவினருக்குப் பல்வேறு சலுகைகள் தரப்பட்டன.

அனைவருக்கும் தொடக்கக்கல்வி; எப்போதும் கல்வி; தரமானக் கல்வி என மூன்று முக்கியமான முழக்கங்களை முன்னிறுத்தி ஒரு மாபெரும் இயக்கமாக மக்கள் மத்தியில் வீறு கொண்டெழுந்தது. பள்ளி அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. பாடத்திட்டங்களில் பல புதுமைகள் புகுத்தப்பட்டன. ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்க ஏதுவாக தேசிய மற்றும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டு அவற்றின் வாயிலாக மாவட்டங்கள் தோறும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. எனினும், கல்வியின் மீதான சமூகத்தடைகள் முற்றிலுமாக களையப்படவில்லை. கல்வியால் சமுதாய பலன் அடைந்தவர்கள் மட்டுமே தம்மை வளர்த்துக் கொண்டனர். பள்ளி வயதினர் எப்பள்ளியிலும் சேராமல் கல்லாதவராகவும், பள்ளிகளில் சேர்ந்தவர்கள் குடும்பச் சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் காரணமாக பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விடுபவராகவும் பல்கிப் பெருகி நாட்டிற்கு பெரும் அவமானத்தையும் அறைகூவலையும் தரத் தக்க வகையில் குழந்தைத் தொழிலாளராகவும் குடும்பத்தைப் பேணும் மற்றுமொரு தாய்மாராகவும் உருவாயினர்.

இதையடுத்து, கல்வியாளர் R.H. தவே அவர்களால் கி.பி.1992 இல் தொடக்கக் கல்வியில் குறைந்த பட்ச கற்றல் இலக்குகள் (Minimum Levels of Learning) எனும் குழந்தை மைய அணுகுமுறையினை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் கற்றல் – கற்பித்தல் செயல்முறைகளில் அனைத்திலும் கல்வியின் தரமே (Quality of Education) தாரக மந்திரமென முதன்மையாக வலியுறுத்தியது. ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு பாடத்திலும் கட்டாயம் குறைந்த பட்சம் மாணவர் அடைய வேண்டிய திறன்கள் வரையறைச் செய்து தரப்பட்டு பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பாடக்குழுவில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு முதல்முறையாக முன்னுரிமைகள் அளிக்கப்பட்டன. பாடம் சார்ந்த குறைகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டன. ஆசிரியர்களுக்கு இடைவிடாது பல்வேறு புத்தாக்க மற்றும் வலுவூட்டல் பயிற்சிகள் எளிதாக அவர்கள் வந்து செல்லும் வகையில் அவரவர் சொந்த ஒன்றிய, நகரங்களிலேயே தரப்பட்டன. நால்வகை அடிப்படை கற்றல் திறன்களைச் சோதித்தறியத்தக்க வகையிலேயே மதிப்பீட்டு முறைகளில் மாற்றங்கள் புகுத்தப்பட்டன. இதனால் மொழிப்பாடங்களில் தன்னிச்சையாக ஆட்சி செய்து வந்த எழுத்துத்திறனின் முக்கியத்துவம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. வாய்மொழி ச் சோதனையின் அவசியம் உணரப்பட்டது என்றாலும் கல்வியில் தரம் முதன்முறை யாக கூடியதேயொழிய முழுச் சேர்க்கையையும் இடைநிற்றலையும் எட்டுவதில் வழக்கம்போல் இடையூறுகள் இருந்திடத்தான் செய்தன.

இதற்கிடையில் கணித, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான எளிய செயல்முறை உபகரணங்களும் தொடக்கக் கல்வி நிலையில் விளையாட்டுத் திறனை உக்குவிக்கும் பொருட்டு எளிய விளையாட்டுக் கருவிகளும் கூடுதல் ஆசிரியர் பணியிடங்களும் தளவாடங்களும் வழங்கப்பட்டு கல்வியை மேம்படுத்திடும் விதத்தில் கரும்பலகைத்திட்டம் (Blackboard Scheme) எனும் புதிய முறையொன்று நடைமுறைக்கு வந்தது.

அதுபோக குழந்தை உளவியலுக்குச் சற்றும் பொருந்தாத ஆசிரியர் விளக்க முறை காரணமாக இறுகிப் போய்க்கிடந்த கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளில் அவ்விறுக்கத்தைத் தளர்த்தி இனிமையாக்கும் முகமாக கற்றலில் இனிமை (Joyful Learning) எனும் புரட்சிகரத் திட்டம் தொடக்கக் கல்வி வகுப்பறைகளை ஆக்கிரமித்துக் கொண்டது. ஆடல், பாடல், நடிப்பு, விளையாட்டு போன்ற மாணவர் உள்ளங்களை மகிழச் செய்யும் இன்ப அணுகுமுறைகள் (Pleasure Principl Approach) கடைபிடிக்கப்பட்ட போதிலும் வருகை மற்றும் அடைவுகளின் விழுக்காடுகளில் முழு அளவு எட்டப்படவில்லை.

இத்தகைய கடும் நெடும் பயணத்திற்கிடையே தமிழக அரசியலில் மலிந்த வணிக லாப நோக்கும் போக்கும் காரணமாக தாய்மொழிவழிக் கல்வி புறம் தள்ளப்பட்டு புற்றீசல்களாக மெட்ரிக் ஆங்கில வழிக் கல்விப் பள்ளிகள் குக்கிராமங்களிலும் முளைக்கத் தொடங்கின. அச்சு மற்றும் மின் ஊடகங்கள் வாயிலாக உயர்தர, நடுத்தர மற்றும் பாமர வர்க்க அடித்தட்டு மனங்களில் மேனாட்டு மொழி மற்றும் நாகரிக மோகங்கள் நன்கு விதைக்கப்பட்டுப் பெருகியதன் விளைவாக கல்வி கொழுத்தக் கடைச்சரக்காகிப் போனது. அரசுப் பள்ளிகளில் தாய்மொழி வழிக் கல்வி கற்போரது சதவீதம் பெருமளவு சரியத் தொடங்கி விட்டிருந்தன. அனைவருக்கும் தொடக்கக்கல்வி எனும் தீர்க்கமான, தீவிரமான உறுதியுடன் செயல்பட்டுவந்த இப்பள்ளிகள் பல்வகைப்பட்ட மக்களின் நன்மதிப்பையிழந்து பொருளாதாரத்தில் மிகவும் பலவீனப்பட்ட மற்றும் உயர் விளிம்புநிலை மக்களது வேறுவழியற்றப் புகலிடங்களாக மாறிப்போயின. வறிய மற்றும் வீடற்ற குடும்பங்களின் குழந்தைகளும் கல்வியின் பெருமையினை இன்றளவும் உணராத அருந்ததியர், பழங்குடியினர், நாடோடி இனத்தவர் முதலானோரின் பிள்ளைகளும் படிப்பை ஒரு பொருட்டாக மதிக்காமலேயே தம் மரபான வாழ்க்கையை மேற்கொள்ளவே முற்பட்டனர். அரசின் அறிவிப்புகளும் அச்சுறுத்தல்களும் விழலுக்கு இறைத்த நீராகவே இருந்தன. ஒரு புறம் தனியார் மயமாக்க வெடிப்புகள் மறுபுறம் அரசுப் பள்ளிச் சீரமைப்புகள் என இவற்றிற்கிடையே அனைவருக்கும் தொடக்கக் கல்வி அகப்பட்டுச் சீரழிந்துக் கொண்டிருந்தது.

இத்தகு இக்கட்டானச் சூழலில்தான் 2001 ஆம் ஆண்டில் நாடு தழுவிய அனைவருக்கும் கல்வி இயக்கம் மத்திய, மாநிலக் கூட்டு நிதியுதவியுடன் தீவிர முனைப்புடன் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து பள்ளி வயது குழந்தைகளுக்கும் தரமான கல்வியை உறுதி செய்கிறது. சேர்க்கை, தக்கவைத்தல், திறனடைவு ஆகியவை நூறு விழுக்காடு என்று உறுதிபூண்டு ஒரு மாபெரும் பேரியக்கமாக மக்களிடையே அவர்தம் வரிப்பணத்தை வாரியிறைத்து வளர்த்தெடுக்கப்பட்டது. இதற்காகவே ஆண்டு வருமான வரி செலுத்துகையில் வருமான வரிக்கு கூடுதல் வரியாக மூன்று சதவீத கல்வி வரி வசூலிக்கும் புதுநடைமுறை அரசால் செயல்படுத்தப்பட்டது. வட்டார அளவில் வளமையங்களும் பகுதிவாரியாக குறுவள மையங்களும் அதற்குரிய நவீனத் தகவல் தொழில் நுட்ப வசதிகொண்ட அடிப்படைக் கட்டமைப்புகளும் பாட வாரியாக உயர் தகுதிபெற்ற ஆசிரியப் பணியிடங்களும் பயிற்சித் திட்டங்களும் கட்டகங்களும் ஏற்படுத்தி வழங்கப்பட்டன. மேலும், பள்ளிகள் அனைத்தும் காங்கிரீட் கட்டடங்களாக அமைக்கப்பட்டன. கழிப்பிடம், குடிநீர், நூலகம், கணினி மையம் முதலிய வியத்தகு வசதிகளுடன் புத்தகச்சுமையற்ற எளிய அட்டைக்கல்வி என்றழைக்கப்படும் செயல்வழிக் கற்றல் ஒன்று முதல் நான்கு வகுப்புகளுக்கும் ஐந்தாம் வகுப்பிற்கு எளிமைபடுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி முறையும் ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளுக்கு முறையே படைப்பாற்றல் கல்வி முறைகளும் தோற்றுவிக்கப்பட்டு அவை மக்கள் இயக்கமாகக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. பொது மக்களின் பங்கேற்பை உறுதி செய்யும் பொருட்டு பள்ளிகள் தோறும் கிராமக்கல்விக் குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளியின் எல்லா நிலைகளிலும் தம் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி உரிய பங்களிப்புகளை ஆற்றிட தக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது ஈண்டுக் குறிப்பிடத்தக்கதாகும்.

இது தவிர, பள்ளிச் சேர்க்கை வார விழா, பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள், கல்வி வளர்ச்சி நாள் விழா, கிராமக் கல்விக்குழு நாள் விழா போன்ற விழாக்கள் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வந்தபோதிலும், பள்ளி இடைநின்றோர், எப்பள்ளியிலும் சேராதோர். மாற்றுத் திறன்படைத்தோர், குழந்தைத் தொழிலாளர் முதலானோருக்கு உதவிடும் வகையில் மாற்றுப் பள்ளிகள், மாலை நேரம் பள்ளிகள், இணைப்பு மையங்கள் சிறப்புப் பள்ளிகள் போன்றன தொடங்கப்பட்டு தனிக் கவனம் செலுத்தப்பட்ட போதிலும், பாடப்பொருள்கள், உதவித்தொகைகள், சீருடைகள், முட்டையுடன் கூடிய சத்துணவு போன்றவை சாதிபாகுபாடின்றித் தந்து உதவிட்ட போதிலும் அனைவருக்கும் கல்வி குறிக்கோள் மீதான தடைகள் நீடிக்கவே செய்கின்றன. மேலும், கல்வியைப் பொதுமைப்படுத்தி எல்லோருக்கும் கிடைக்கச் செய்து சாமானியனும் பலனடையச் செய்திடும் வகையில் அண்மையில் சமச்சீர்க் கல்வி மழலை நடை போட்டு வரத் தொடங்கியது.

அதன் பின்னர், தொடக்க நிலையில் எண்ணும் எழுத்தும் திட்டம் முதல் மூன்று வகுப்புகளுக்குச் செயல்படுத்தப்பட்டு வந்த நிலை மேலும் விரிவுப்படுத்த பண்பாட்டு நடப்புக் கல்வியாண்டில் இத்திட்டம் நான்கு மற்றும் ஐந்து வகுப்புகளுக்கும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, கல்வித்துறையில் மாறிவரும் நவீனத் தகவல் தொழில்நுட்ப வசதிக்கேற்ப நிர்வாகம், கற்றல கற்பித்தல் நிகழ்வுகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மதிப்பீட்டு முறைகள், வருகைப் பதிவுகள், நலத்திட்ட உதவிகள், பணி மாறுதல்கள் போன்றவற்றின் பயன்பாட்டிற்காகப் பல்வேறு புதுப்புது செயலிகள் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இக்காலகட்டத்தில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பை அதிகரிக்கும் பொருட்டு மறுசீரமைக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் மாதந்தோறும் கட்டாயம் நடைபெற பெருமளவில் ஊடகங்கள் வழி பரப்புரை செய்யப்பட்டு வருவது எண்ணத்தக்கது. அதேவேளையில், பெருந்தொற்று பொதுமுடக்கக் காலத்தில் கற்றல் இடைவெளிகளை ஈடுசெய்யும் விதமாகத் தோற்றுவிக்கப்பட்ட இல்லம் தேடிக் கல்வித் திட்டம் உள்ளூர் இளம் பட்டதாரி தன்னார்வலர்கள் உதவியுடன் இப்போது வரை மாலை நேர கற்றல் மையமாக இயங்கி வருகிறது. இதன் மூலமாவது அனைவருக்கும் கல்வி கிட்டிவிடுமா என்றால் தீவிர குழப்பமும் கனத்த மௌனமும் விடைகளாய்க் கிடைக்கின்றன.

ஆக, என்ன தான் இதற்குத் தீர்வு என்று ஆராய்ந்தோமானால் சில உண்மைகள் தெள்ளத்தெளிவாக நமக்குப் புலப்படுகின்றன. இவற்றை எளிதாக ஒதுக்கி விட இயலாது.

முதற்கண், எத்தகைய கல்வியாயினும் அவை அவரவர் தாய்மொழியிலேயே இலவசக் கட்டாயக் கல்வியாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். தாய்மொழிவழிக் கல்வியைத் தவிர்த்து அந்நிய மொழியில் எவ்வளவு தான் முயன்றாலும் அனைவருக்கும் கல்வி என்பது துளியும் சாத்தியமில்லை. ஏனெனில், மனித மனத்துள் உருவாகும் சிந்தனைகள் அவரவர் தாய்மொழியிலேயே உருவெடுத்து பின் அவை சொற்களாகவும் செயல்களாகவும் பரிணமிக்கின்றன. ஆதலால் தான் பல்வேறு வளர்ந்த நாடுகளும் கூட தம் தொடக்கக் கல்வியைத் தாய்மொழி வழியிலேயே வழங்கி வருவதை இன்றியமையாத தேசக்கடமையாகக் கொண்டுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே பல்வேறு கல்வியாளர்களும், உளவியல் அறிஞர்களும் தாய்மொழிவழிக் கல்வியின் அவசியம் மற்றும் பயன்பாடுகள் குறித்து உரத்துப்பேசி வருகின்றனர். பிள்ளைகளைப் பெற்றெடுத்தப் பெற்றோர்கள் எல்லாம் ஆங்கில மயம் ஆங்கிலமே தம் குழந்தையின் எதிர்கால நல்வாழ்வு என்னும் சமூகக் கேடுமிக்க தப்பெண்ணங்களைக் கைவிட்டு குழந்தைகளின் அறிவு கூர்மைப்படுவதில் தாய்மொழியே பெரும் பங்கு வகிக்கிறது எனும் கல்வி உளவியல் சிந்தனையை மனதில் இருத்திக் கொண்டு செயலாற்ற முன்வருதல் சாலச் சிறந்தது ஆகும்.

தவிர, இதற்கு அடிப்படையாக விளங்குவது, படிப்பு என்பது பணிக்கே! எனும் நடப்பு வாழ்வியல் அவலப்போக்கே ஆகும். கல்வியின் ஒரு செயல்முறை விளைவுதான் பணிக்குச் செல்லுதல் மற்றும் பணம் ஈட்டுதல் ஆகியன. கல்வியின் முழுமையான நோக்கங்கள் இவையல்ல. அன்றாட வாழ்க்கையை விழிப்புடன் எதிர்நோக்கி தக்க வளங்களை நேர்மையுடன் பெருக்கி குற்றமிலா இன்பப் பெருவாழ்வினை வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்கி, மானுடம் தழைக்க. மனிதவளம் சிறக்க வாழவே கல்வியானது வழிகாட்டுகின்றது; நெறிப்படுத்துகின்றது. சுருங்கச் சொன்னால் வேலை வாய்ப்பிற்கானதல்ல கல்வி. கல்வியின் ஓர் அங்கம்தான் வேலைவாய்ப்பு. இதை உணர்ந்து செயல்படுவது அனைவருக்கும் நலம் பயக்கும்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு குடிமகன் மழலைக்கல்வி முதல் உயர் தொழில் கல்வி முடிய தமிழைப் பயிற்றுமொழியாகக் கொள்ளாமல் ஆங்கில வழியில் படித்துப் பட்டம் பெறும் அவலநிலை காணப்படுகின்றது. சமுதாயத்தின் பெருங்கேடாகத் திகழும் மதுபானக் கடைக்குப் படித்த, பட்டதாரிகளைப் பணியிலமர்த்திக் கொண்டு வேலைவாங்கும் அரசு நாடு முன்னேற பேருதவியாற்றும் அறிவு வள முதலீட்டிற்கான கல்வியைத் தனியாரிடம் தாரைவார்த்து வருவது சமுதாய ஏற்புடையதல்ல. முறையான கல்வித் தகுதியோ, குழந்தைகளை நன்முறையில் கையாளும் போதிய குழந்தை உளவியல் பயிற்சியோ இல்லாத குறைந்தக் கூலிக்கு மாரடிக்கும் நபர்களின் கைகளில் இந்தியாவின் எதிர்காலம் அகப்பட்டுக் கொண்டு மிகவும் துன்பப்படுவதை எந்தவொரு அறிவார்ந்த சமுதாயமும் எளிதில் ஏற்றுக் கொள்ளாது. இந்த இழிநிலை உடனடியாக மாற்றம் பெற வேண்டும்.

அதுபோல், கல்வியின் வளர்ச்சியில் மாணாக்கரின் தனியாள் வேறுபாடு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அறிவு மேம்பாட்டின் வளர்ச்சித் தளங்களில் கற்கும் திறனும் அளவும் அனைவரிடத்தும் சமமாய் இருப்பதில்லை. ஆளுக்கு ஆள் மாறுபடும் தன்மை படைத்தது. மீத்திறன் பெற்றோர், சராசரி நிலையினர். மெதுவாகக் கற்போர், கற்றலையே நிகழ்த்த முடியாத அதிசம் பாதிப்பிற்கு உள்ளான மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் மனித சமுதாயத்தில் எல்லா மட்டங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பதை உணராமல் ஓர் ஒருங்கிணைந்தப் பாடத்திட்டத்தைப் பொதுவாக முன்வைத்து அது ஈடேற முயற்சிப்பது என்பது ஒரு வீண்வேலை. சூரியன்கூட ஒருக்கால் மேற்கில் உதித்தாலும் உதிக்குமே ஒழிய அனைவருக்கும் கல்வி என்பது ஒருபோதும் நிறைவேற இயலாதப் பெருங்கனவேயாகும் என்பதை மேற்காணும் சமுதாயச் சிக்கல்கள் மூலம் நன்கறிய முடியும். அதுவும் பெருவணிக மயமாகக் கல்வி முற்றிலுமாக மாறிப்போய்விட்டால் அதற்குப் பின் இதையும் கூட நினைத்துப்பார்க்க இயலாமல் போய்விடும்.

ஆகவே, சாதி, மத, இன வேறுபாடின்றி கல்வி எல்லோருக்கும் எளிதில் கிட்டிட சட்டங்களும் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டாலும் கல்வியானது பேரளவு பரவலாகுமே ஒழிய முழுமையாகாது. இப்பரவலாக்கத்திற்குத் தாய்மொழி வழிக் கல்வியே உறுதுணையாக விளங்க முடியும். அத்தாய்மொழி வழிக்கல்வியைப் புறக்கணித்து ஆங்கில மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் தந்துப் பேணுதலானது எவ்வகையிலும் பயனைத்தராது. குறிப்பாக, ஒன்றிய அரசின்கீழ் செயல்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பள்ளிகளில் தொடக்கக்கல்வியில் தாய்மொழிப் பயிற்றுவிப்பு கட்டாயப்படுத்தப்பட்டு வருவது ஒரு நல்ல அறிகுறியாகும். தமிழ்நாட்டில் செயல்படும் ஆங்கிலவழியிலான மெட்ரிக் பள்ளிகளில் இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்வது அவசர அவசியமாகும்.

இத்தகைய இரட்டை எதிர்வு அரசியல் நிலைப்பாடு தமிழ்நாட்டுக் கல்விச் சூழலில் நிலவும் வரை அனைவருக்கும் கல்வி ஒரு வெற்று முழக்கமாகவே உடன் தோன்றி மறையும் வானவில்லாய் மக்களிடையே விளங்கி வரும். வழி நெடுக காணப்படும் தமிழ்நாடு அரசு நடத்தும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைப் புறக்கணித்து தூரத்துப் பச்சை நோக்கிய தம் பச்சிளம் குழந்தைகளுடனான பல்வேறு கனவுகளுடன் பெருந்தொகையைத் திரட்டி, தோளில் சுமந்து செல்லும் பெற்றோர்களுக்குக் கானல் நீர்தாகம் தணிக்காது என்பதை எப்படி எடுத்துச் சொல்வது?

எழுத்தாளர் மணி கணேசன்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கட்டுரைகள்

பொது சிவில் சட்டமும் – முஸ்லிம் தனியார் சட்டமும்

எச். ஹாமீம் முஸ்தபா

Published

on

இந்திய முஸ்லிம்கள் குறித்தும் பின்பற்றுகின்ற சிவில் சார்ந்த முஸ்லிம் தனியார் சட்டம் குறித்து எதிர்நிலை பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
தென்னைமரப்பூக்கள் பார்ப்பதற்கு அழகானவை. அந்தப்பூக்கள் ஒரு சமூகத்தின் திருமணமேடையில் மங்கலம் சார்ந்த சடங்குபொருள்களுள் ஒன்றாக இடம்பெற்றிருக்கிறதுஇன்னொரு சமூத்தின் இறப்புச்சடங்கில் துயரத்தின் அடையாளமாக இடம் பெற்றிருக்கிறது.

தண்ணீரில் நீந்தும் மீன் வங்கத்துப் பார்ப்பனருக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட உணவாகவும் ஏனைய பார்ப்பனருக்கு விலக்கப்பட்டதாகவும் இருக்கிறது. இப்படி இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பின்பற்றப்படும் மரபுகளும், பழக்க வழக்கங்களும் நூற்றுக்கணக்கில் இருகின்றன.இவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் இந்தியாவின் சட்டஅமைப்பு.

பொதுசிவில்சட்டம் என்ற ஒன்றைக் குறித்த விவாதம் இல்லாமலேயே இந்தியச்சமூகம் இத்தனை ஆண்டுகால வாழ்க்கையை கடந்து வந்திருக் கிறது. அவரவரும் அவர்களின் நம்பிக்கைகளின் பெயரால், பாரம்பரியங் களின் பெயரால், மரபுகளின் பெயரால் பேணப்படும் நடைமுறைகள் மனித சமூகத்தை பின்னிழுக்கின்றன , அல்லது அவை காட்டாண்டித்தனமாக இருக்கின்றன என்று பொதுச்சமூகம் கருதும்போது அதனை
ஓரிடத்தில் தடுத்துநிறுத்தவும் நாகரிக சமூகம் பக்குவம் பெற்றுள்ளது.

அந்தப்பக்குவத்தின் வழியாகத்தான் இந்தியச்சமூகம் உடன்கட்டை வழக்கத்தை ஒழித்தது,குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தியது , தேவதாசிமுறையினை முற்றாக நிராகரித்தது.அனைவரும் சமமான வர்கள் என்ற அடிப்படை விழுமியத்தின் அடிப்படையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் உருவாகி நடைமுறைக்கும் வந்துவிட்டது.


பல்வேறு சமூகங்களும் தாங்கள் பின்பற்றிய வழக்கங்களை அல்லது சட்டமரபுகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி இருக்கின்றன. ஒருகாலத்தில் முஸ்லிம் சமூகத்தில் அதிகமாகப் பேசப்பட்ட ‘முத்தலாக்’ முறை இன்று கணிசமாக இல்லை என்னும் நிலைக்கு வந்துவிட்டது திருமணத்திற்கான வயதுவரம்பு குறிப்பாக பெண்களுக்கு என்பது இந்தியச்சூழலில் அனைவருக்கும் பொதுவானது என்று அரசு தெளிவு படுத்தி இருக்கிறது. இதில் அரசு தனியார் சட்டங்களையோ, சாதிகளின் பார்வைகளையோ
ஏற்றுக்கொள்ளவில்லை. சிதம்பரம் தீட்சிதர்கள் சார்ந்த பிரச்சனையில் குழந்தைத் திருமணம் என்பதும் ஒன்று என்பதை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

நூற்றுக்கணக்கில் சாதிகள், இனங்கள், பழங்குடிகள் , நிலவியல் சூழல்கள் இருக்கின்ற விரிந்துபட்ட நிலப்பரப்பு ஒன்றில் அனைவருக்கும் பொதுவான சட்டம் என்னும் பொதுப்புள்ளியை நோக்கி இப்படித்தான் பயணப்பட முடியும்.காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரும் வழக்குரைஞருமான கபில்சிபில் பொதுசிவில் சட்டம் குறித்து
எழுப்பியுள்ள கேள்விகள் முக்கியமானவை. குறிப்பாக இந்து மதத்திற்குள் காணப்படும் பிஹிதி என்னும் வழமை குறித்தும் , வடகிழக்கு மாநிலங்கள் குறித்தும் அவர் எழுப்பி இருக்கும் கேள்விகள் முக்கியமானவை .

மண்ணுக்கும் , நெருப்புக்கும், பருந்துக்கும் இறந்தவர் உடலை ஒப்படைக்கும் வழக்கங்களைக் கொண்டிருக்கிற ஒரு நிலவியல் சூழலில் மேற்குறிப்பிட்ட மூன்றிலிருந்தும் பொதுவுக்கு என்று எந்த ஒரு குறிப்பிட்ட வழக்கத்தையும் தேர்வு செய்தல் சாத்தியமில்லை. அதே வேளை பொது மயானம், இறந்தவரின் உடலைக் கொண்டுசெல்ல பொதுப்பாதையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுதல் தொடர்பாக சட்டம் இயற்றமுடியும். கறாராக நடைமுறைப்படுத்தவும் முடியும்.

இந்தியாவின் கிரிமினல் சட்டம் ஏற்கெனெவே அனைவருக்கும் பொதுவானதாக இருக்கிறது.திருட்டுக்கும், ஊழலுக்கும் , கொலைக்கும் , வன்கொடுமைக்கும் , வரதட்சணைகொடுமைக்கும் விசாரிக்கப்படும் சட்டமும் , கொடுக்கப்படும் தண்டனையும் அனைவருக்கும் பொது.

இப்போது சிவில் சட்டத்தில் இருக்கும் தனியார் சட்டக் கூறுகளை நீக்கம் செய்துவிட்டு நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான சட்ட அமைப்பைக் கொண்டுவரப்போவதாக ஒன்றிய அரசு அறிவித் துள்ளது. அதற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புகளையும் கேட்க ஆரம்பித்துள்ளது.

அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்னும் தோற்றத்தைக்
கொடுத்தாலும் முஸ்லிம்களை மட்டுமே குறிவைத்து இந்தப் பொதுசிவில் சட்டம்கொண்டுவரப்படுகிறது என்னும் உணர்வு எல்லோரிடமும் இருக்கிறது. உண்மையாகவும் இருக்கிறது. இந்தியாவில் இருக்கின்ற மற்ற எல்லா மக்களும் ஒரே சட்டத்தை பின்பற்றுவதுபோலவும் முஸ்லிம்கள் மட்டும் முஸ்லிம் தனியார் சட்டம் ஒன்றின்படி நடப்பது போலவும், அந்த சட்டவிதிகள் அநீதம் கொண்ட ஒன்றாக இருப்பதுவும் போன்றதொரு தோற்றம், இந்துத்துவத்தால் நீண்டகாலமாகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நூற்றுக்கணக்கான சட்ட முறைகள் சிவில் சட்டத்தில்
பின்பற்றப்படுகின்றன.அந்த சட்ட நடைமுறைகள் சாதி சார்ந்து, மதம் சார்ந்து , நிலவியல்சார்ந்து இருக்கின்றன. முஸ்லிம்களுக்கு என்று சிவில் சார்ந்து தனியாக சட்டம் இருப்பதுபோலவே பல்வேறு மதங்களுக்கும் , சாதி அமைப்புகளுக்கும், வடகிழக்கு மாநிலங்களை மையப்படுத்திய நிலவியலில் வாழும் மக்களுக்கும் தனித்தனியாக சிவில் சட்ட நடைமுறைகள் இருக்கின்றன. உண்மை நிலை இவ்வாறிருக்க முஸ்லிம்களை மட்டும்
குறிவைத்து ஒரு பொதுப்புத்தியை உருவாக்க இந்துத்துவம் முயற்சிக்கிறது. இதன் வழியாகஅதிகாரத்தில் தனது இருப்பினை தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்ள முயற்சிக்கிறது.


இந்துத்வத்தின் அதிகாரப்பசிக்கு முஸ்லிம் எதிர்ப்பு தொடர்ந்து இரையாக்கப் படுகிறது.மாட்டிறைச்சியின் பெயரில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் மற்றும் கொலைகள் , ஹிஜாபைமுன்வைத்து நடத்திய அரசியல், குஜராத் பில்கிஸ்பானு வழக்கில் குற்றவாளிகளைநன்நடத்தைக் கொடுத்து சிறையில் இருந்து வெளியே கொண்டுவந்தது. சிறுபான்மையினரில் உள்ள நலிந்த மாணவர்களுக்கான வழங்கப்படும் கல்வி உதவித்தொகைமீதான நெருக்கடி
என்று ஒன்றிய அரசு முஸ்லிம்களை குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் நெருக்கடிகளை வரிசைப்படுத்தலாம் .

மதம் கடந்த நிலையில் காஷ்மீரிகளுக்குரியதாக இருந்த காஷ்மீருக்குரிய சிறப்பு அந்தஸ்தை ‘முஸ்லிம் வளையத்திற்குள்’ கொண்டு வந்து அதனை ரத்து செய்தது, குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டுவந்து அதில் முஸ்லிம்களை குறிவைத்து செயல்பட்டது என்று ஒன்றிய அரசின் ஒவ்வொரு அசைவிலும் முஸ்லிம் எதிர்ப்பும் வெறுப்பும்,ஒழிப்பும்வெளிப்படையாக இருப்பதைக்காண முடியும் .

முஸ்லிம்கள் மீதான இந்த வெறுப்பையும், எதிர்ப்பையும் பொதுப்புத்திக்குள் கொண்டு செல்ல ஊடகங்கள் , இணையம், திரைப்படம் உள்ளிட்ட அனைத்து கலைவடிவங்களும் பயன்படுத்தப்படுகின்றன. காஷ்மீர் ஃபைல்ஸ், கேரள ஸ்டோரி என்றெல்லாம் முஸ்லிம்களை அவதூறு செய்து குற்றப்படுத்தும் திரைப்படங்கள் வெளிவருகின்றன. பாபரி மசூதியை இடித்து இராமர் கோவில் கட்டுதல், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல் பொதுசிவில்சட்டம் கொண்டுவருதல் என்னும் முஸ்லிம் எதிர்ப்பை
முன்னிலைப்படுத்திய வேலைத்திட்டத்தில் முதல் இரண்டும் கிட்டத்தட்ட நிறைவேறிவிட்டன.

இடையில் பாகிஸ்தானை முன்வைத்து ஒரு புல்வாமா நாடகம் .இந்தத் தொடர்ச்சியில் இப்போது பொதுசிவில்சட்டம் கொண்டுவரும் முயற்சியை அரசு
மேற்கொண்டுள்ளது. வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க கையில் எதுவும் இல்லாத சூழலில் பொதுசிவில்சட்டம் என்பதன் வழியாக மீண்டும் ஓர் முஸ்லிம் எதிர்ப்பை உருவாக்க முயற்சிக்கிறது இந்துத்துவம். பெண்களுக்கு உரிமை எதுவும் முஸ்லிம் சமூகத்தில் கொடுக்கப்படவில்லை என்னும் ஒரு பிரச்சாரத்தை இதனூடாக இந்துத்துவம் முன்வைக்கிறது.

இஸ்லாம் பெண்களுக்குவழங்கிய உரிமை களை அதன் தொடக்க நிலையிலேயே சட்டவடிவமாக்கிவிட்டது. புனிதப்பிரதியான திருக்குர்ஆன் , மற்றும் நபி முஹம்மதுவின் சொல், செயல், ஏற்பாக இருக்கின்ற நபிமொழி என்னும் ஹதீஸ் பிரதிகளிலும் இதற்கான சான்றுகளைக் காணமுடியும். இது இஸ்லாத்திற்கும் ஏனைய சமயங்களுக்கும் இஸ்லாமிய சமயத்திற்கும் இடையிலான ஓர் அடிப்படையான வேறுபாடு.

தமிழ்நாட்டில் பெண்களின் சொத்துரிமைக்காக இருபதாம் நூற்றாண்டு கடைசி வரை காத்திருக்க வேண்டியது இருந்தது. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே பெற்றோரின் சொத்தில், பிள்ளைகளின் சொத்தில், கணவனின் சொத்தில் பெண்ணிற்கு உரிமை உண்டு என்பதை சட்ட நிலையில் இஸ்லாம் தெளிவுபடுத்திவிட்டது. ஆண்/பெண் வாரிசு சொத்துரிமை குறித்து திருக்குர்ஆன் 4- ஆவது அத்தியாயம் 11,12, 176- ஆவது வசனங்கள்விரிவாகக் கூறுகின்றன .

“ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்துள்ளதற்கேற்ப பெண்கள் அவர்கள்
சம்பாதித்துள்ளதற்கேற்ப பங்கு உண்டு” ( திருக்குர்ஆன்.4;32) என்று ஆண்/பெண் இருவரையும் உழைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவர்கள் என்னும் நிலையில் வைத்து குர்ஆன் குறிப்பிட்டாலும் குடும்பத்தலைமை என்பதை ஆண்களுக்குரியதாக இஸ்லாம் பார்க்கிறது.ஆண்களின் குடும்பப் பொறுப்பு என்னும் புரிதலில் இருந்து, ஆண்கள் பெண்களின் நிர்வாகிகள் என்னும் நிலையில் இருந்து பெண்களுக்கான சொத்துரிமை அளவை இஸ்லாம்
கணக்கிடுகிறது.“ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர்.இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கிறான் என்பதும் ஆண்கள் தங்களுடைய செல்வத்தில் இருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும்” (திருக்குர் ஆன்.4;34) என்னும் குர்ஆன் வசனங்கள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன

ஆண் பெண் இணைந்துகொள்ளும் திருமண உறவில் அந்த இணைப்புக்கு பெண்ணின் சம்மதத்தை அடிப்படையான நிபந்தனையாக இஸ்லாம் வைக்கிறது. (புஹாரி 5136 முஸ்லிம் 1419)திருமணம் செய்து கொள்கிறார்கள்.கணவனோடு சேர்ந்து வாழ விருப்பம் இல்லை
விவாகரத்தை முன்மொழிய மனைவிக்கு அதிகாரம் உண்டு என்று இஸ்லாம் அனுமதிக்கிறது.


ஆண்கள் கொடுக்கும் விவாகரத்து ‘தலாக்’ என்றால் பெண்கள் கொடுக்கும் விவாகரத்து ‘குலா’எனப்படுகிறது .ஆண்/பெண் யாராக இருந்தாலும் போகிற போக்கில் விவாகரத்து சொல்லி விட்டு போய்விடமுடியாது. இன்று அரசாங்கம் அதில் பல சட்டநடை முறைகளைக் கொண்டு வந்துள்ளது. விவாகரத்து பெற விரும்புகிறவர்கள் தங்களுடைய மதத்தலைமையிடமிருந்து அவரின் முன்னிலையில் ஷரியத் சட்டப்படி விவாகரத்துப் பெறும் ஒருவர் அந்த மதத்தலைமை வழங்கிய விவாகரத்து அனுமதி உத்தரவை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் . அதன் அடிப்படையில் நீதின்றத்தில் இருந்தும் விவாகரத் திற்கான ஆணையைப்பெற வேண்டும். அந்த நீதிமன்ற ஆணையைக் கொண்டு ஏற்கெனவே திருமணத்தைப் பதிவுசெய்திருந்த
பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு அந்தத் திருமணத்தை சட்டப்படி ரத்து செய்ய வேண்டும் அதன்பிறகுதான் மறுமணம் என்னும் நிலை நோக்கி நகர முடியும்.நான் அறிந்தவரை தமிழ்நாட்டிலும் ,கேரளாவிலும் சூழல் இதுதான் .

முஸ்லிம் தனியார் சட்டத்தை முஸ்லிம்கள் தங்களின் சமய மொழியில் ஷரியத் சட்டம் என்கின்றனர். இஸ்லாமிய மரபில் இரண்டு கூறுகள் இருக்கின்றன. ஒன்று ‘தீன்’ , மற்றொன்று ‘ஷரியத்’ . ‘தீன்’ என்பது அடிப் படையான இறைக்கோட்பாடு. இறைவன் ஒருவன் அல்லாஹ். இஸ்லா மிய இறையியல் ‘தீன்’ என்பதை மாற்றமுடியாத ஒன்றாகவும் நித்தியத்துவம் கொண்டதாகவும் பார்க்கிறது. உலகின் முதல் மனிதரான ஆதம் தொடங்கி இறுதித்தூதரான
நபி முஹம்மது வரை இந்த இறைக்கோட் பாட்டைப் பேசினார்கள் என்பது இஸ்லாமிய இறையியல்.

இஸ்லாமிய இறைக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களின் வாழ்வியல் நெறிகளை ,சட்டங்களை திருக்குர்ஆன் அடிப்படையிலும் நபி முஹம்மது அவர்களின் சொல் செயல் அங்கீகாரமாக இருக்கின்ற ‘ஹதீஸ்’ என்னும் நபிமொழிகளின் அடிப்படையிலும் இஸ்லாமிய அறிஞர்கள் உருவாக்கிய சட்டவிதிகளே ஷரியத்தாக இருக்கிறது. ‘தீன்’ மாறாத ஒன்று ‘ஷரியத்’ என்பது அறிஞர்களின் பார்வைக்கு ஏற்ப மாறும் நெகிழ்வுடைய ஒன்று. இஸ்லாமிய அறிஞர்கள் தேவையான மாற்றங்களை ‘ஷரியத்’ சட்டங்களில் காலத்திற்கு
ஏற்பசெய்துள்ளார்கள். செய்து கொண்டும் இருக்கிறார்கள். சமீபத்தில் சவுதி அரேபிய அரசு கொண்டுவந்த ஒரு மாற்றம் அந்த வகையில் கவனிக்கத்தக்கது.. இந்த ஆண்டு (2023) ஹஜ் பயணம் சார்ந்த வழிகாட்டு முறையில் சவுதி அரேபிய அரசு முக்கியமான ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தது. இதுவரை ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பருவ வயதடைந்த ஆண் /பெண் இருபாலரில் ஆண்கள் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும் . ஆனால் பெண்கள்
அவ்வாறு தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாத சூழல்தான் இருந்தது. தந்தை ,கணவன் மகன் இவர்களுள் யாராவது ஒருவர் துணையுடன்தான் செல்லமுடியும் . இவர்கள் மூவரும் இல்லாத சூழலில் உடன் பிறந்த சகோதரன் போன்ற திருமணம் செய்துகொள்ள தடுக்கப்பட்ட உறவுகளின் துணையுடன்தான் ஹஜ் செய்ய முடியும். இஸ்லாமிய மரபில் இதனை ‘மஹரம்’ என்று குறிப்பிடுவார்கள் . இந்த ‘மஹரம்’ முறையில் இந்த ஆண்டு முதல்
சவுதி அராசங்கம் நெகிழ்வை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி நாற்பத்தி ஐந்து வயதுக்கு மேற்பட்ட பெண்கள் யாருடைய துணையும் இல்லாமல் தனித்து ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது. ஷரியத்தில் ஏற்பட்ட இந்த நெகிழ்வின் காரணமாக உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கில் பெண்கள் தனித்து ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள் . இந்தியாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் பெண்கள் சென்றார்கள்.

பத்துக்கும் மேற்பட்ட ஷரியத் முறைகள் உலகெங்கும் இருக்கின்றன. உலகம் முழுவதும் ஒரே மாதிரியான ஷரியத் சட்டங்கள் இல்லை. இஸ்லாமிய நாடுகளிலும் சரி அல்லது முஸ்லிம்கள் கணிசமாக வாழுகின்ற நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் தேவை மற்றும் சூழலுக்கு ஏற்ப ஷரியத் சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்தியாவில் காலனிய ஆட்சி காலத்தில் உருவான
முஸ்லிம் தனியார் சட்டம் என்னும் வடிவம் இப்படியான சூழலில்தான் அறிமுகமாகியது என்பது வரலாறு.

இமாம்கள் என்று அறியப்படும் இஸ்லாமிய அறிஞர்களின் பெயரால் இவை
அறியப்படுகின்றன . இவர்களின் சிந்தனைப் பள்ளிகளை ‘மத்ஹப்’ என்று அழைக்கிறார்கள். அந்தவகையில் ஷாபி அவர்களின் பெயரால் அறியப்படும் ஷாபி மத்ஹப், இமாம் அபூஹனிபா அவர்களின் பெயரால் அறியப்படும் ஹனபி மத்ஹப், இமாம் மாலிக் அவர்களின் பெயரால் அறியப்படும் மாலிக் மத்ஹப், இமாம் ஹன்பல் அவர்களின் பெயரால் அறியப்படும் ஹன்பலி மத்ஹப் ஆகியவை இவற்றுள் குறிப்பிடத்தக்கவை .

தமிழ்நாட்டிலும் இந்த நான்கு சிந்தனைப் பள்ளிகளின் செல்வாக்குகள் இருகின்றன. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கேரளம் முழுவதும் ஷாபி சிந்தனைப்பள்ளியின் சட்டதிட்டங் களைப் பின்பற்றுகிறார்கள். விருதுநகர் தொடங்கி வட தமிழ்நாடு முழு வதும் ஹனபி சிந்தனைப்பள்ளி சட்டதிட்டங்களைப் பின்பற்றுகிறார்கள். இந்த சிந்தனைப் பள்ளிகளின் சட்டதிட்டங்கள் இடையில் பல்வேறு வேறுபாடுகளும் இருக்கின்றன ஒன்றுபடும் புள்ளிகளும் இருக்கின்றன.

இந்தியாவின் ஷரியத் மரபுக்கு தொடக்கமாக முகலாயர் ஆட்சிமுறை இருக்கிறது. அவர்களின் ஆட்சி முறையில் கிரிமினல் சட்டம் ஷரியத் அடிப்படையில் அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. சிவில் நடைமுறைகளைப் பொறுத்தவரை முஸ்லிம்களுக்கு ஷரியத்
சட்டமுறைகளும் முஸ்லிம் அல்லாதோருக்கு திருமணம், வாரிசு உரிமை போன்ற விஷயங்களில் அவரவர்க்கான சிவில் நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன.

காலனிய ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டபிறகு இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பியசட்டமுறையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட்டது. என்றாலும் சிவில் நடைமுறைகளை அவர்கள் அப்படியே அனுமதித்தனர். இப்போதுள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தின் முதல் வடிவம் காலனிய ஆட்சியர்களால் முதன் முதலாக 1937 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது . இந்திய முஸ்லிம் தனியார் சட்டத்தில் பல்வேறு காலங்களில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடத்தக்க மாற்றம் 1939-ஆம் ஆண்டு
கொண்டுவரப்பட்ட முஸ்லிம் விவாகரத்து சட்டம். இந்தச் சட்டம் முஸ்லிம் பெண்களின் விவாகரத்துக் கோரும் உரிமையையும் அதற்காக நீதிமன்றத்தை நாடுவதையும் உறுதி செய்தது.

விடுதலை பெற்ற இந்தியாவில் அரசியல் சாசனம் உருவானபோது இத்தகையத் தனியார் சட்டங்கள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன,. இந்த விவாதங்களின் முடிவில் அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட முன்னோர்கள் இந்திய அரசியல் சாசனத்தின் 25- A பிரிவின் ஷரத்துக் களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் பல்வேறு தனியார் சட்டங்களும் சிவில் சார்ந்த நடைமுறைகளில்
பின்பற்றப்படலாம் என்று முடிவு செய்தனர் .

அப்படிஎன்றால் முஸ்லிம் பெண்களுக்கு பிரச்சனைகள் இல்லையா ? முஸ்லிம் தனியார் சட்டத்தில் பிரச்சனைகள் இல்லையா? என்றால் இருக்கிறது . எல்லா மத, சாதிய சமூகங்களைப் போலவே முஸ்லிம் சமூகமும் இன்றுவரை ஜனநாயகப்படுத்தப்படாமல் இருக்கிறது . எல்லா ஆண்களைப் போலவே முஸ்லிம் ஆண்களும் இருக்கிறார்கள். எல்லா மதங்களிலும் ஆண்கள் மதத்தின் பெயரில் அதிகாரங்களை தமதாக்கிக் கொண்டது போலவே இஸ்லாம் மதத்திலும் நடந்தது. இவற்றை நேர் செய்வதற்கான வழிவகைகளை அரசும் ,
முஸ்லிம் சமூகமும் கண்டறிய வேண்டும். எவ்வளவு காலம்தான் முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகளை ஆண்குரலில் கேட்பது . முஸ்லிம் சமூகத்தின் பொதுப்பிரச்னைகள் குறித்தும் , முஸ்லிம் பெண்கள் குறித்தும் பெண்கள்
பேசும் அதிகாரம் வேண்டும். முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம், ஒன்றிய , மாநில வக்ஃப் வாரியங்கள் , ஜமாஅத் உள்ளிட்ட அமைப்புகளில் பெண்களின் பங்கேற்பும் , பெண்களின் பிரதிநிதித்துவமும் சட்ட பூர்வமாக உறுதி செய்யப்பட வேண்டும் .

இஸ்லாமிய ஷரியத் என்பது காலம்தோறும் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதையும் , உலகெங்கும் இஸ்லாமிய நாடுகளில் அது அவ்வாறு தான்
வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது முஸ்லிம் அறிவுத்தலைமைகளும் மதத்தலைமைகளும் புரிந்து கொள்ளவேண்டும் . மாறிவரும் உலக ஒழுங்குகளுக்கு முகம்கொடுக்கும்வகையில் ஷரியத் சட்டங்கள் வளர்த் தெடுக்கப்படாவிட்டால் இன்றுள்ள சூழலில் முஸ்லிம்கள் இன்னும் சிக்கல்
படுவார்கள் என்பதை உணரவேண்டும்.

இந்திய அரசியல் சாசனத்தின் 25- A பிரிவு விரும்பும் சமயங்களைப் பின்பற்றவும், அதனை நடைமுறைப்படுத்தவும், அதனை பரப்புரை செய்யவும் இந்திய மக்கள் அனைவருக்கும் உரிமை வழங்குகிறது.இந்தியா முழுமைக்குமான பொதுவான ஒரே சட்டம் என்று கூறும் ஒன்றிய அரசு இன்றுவரை அதற்கான வரைவு சட்ட நகல் எதுவும் வெளியிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

ஒன்றிய அரசு பேசும் பொதுசிவில் சட்டம் இந்தியாவின் நூற்றுக்கணக்கான சமூகங்களை பாதிக்கிற ஒன்றாக இருக்க ஆனால் அதுசார்ந்த உரையாடல் கள் அனைத்தும் இந்தப் பொது சிவில் சட்டம் முஸ்லிம்களை குறிவைத்து கொண்டுவரப்படுகிறது என்னும் செய்தியை முன்கொண்டு வந்துள்ளன . ஒருவேளை அதுவே அரசின் நோக்கமாகவும் இருக்கலாம். பொதுசிவில் சட்டம் என்பதில் இருந்து பழங்குடிகளுக்கு விலக்கு வேண்டும் என்னும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டப் பிரச்சனையில் அரசு மற்ற
எல்லோரையும் உள்ளிழுத்துக் கொண்டு முஸ்லிம்களை மட்டும் விலக்கி வெளியே நிறுத்திய அனுபவம் ஏற்கெனவே இருக்கிறது. பொதுசிவில் சட்டத்திலும் அப்படியானதொரு அனுபவத்திற்கு வாய்ப்பு இருப்பதை மறுக்கமுடியாது.

Continue Reading

கட்டுரைகள்

புனிதப்பசு

Published

on

புனிதப்பசு என்னும் கட்டுக்கதை –ஹெச்.ஜி.ரசூல்
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் பாஜக யோகி ஆதித்யநாத் உ.பி.யில் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. குஜராத்,ராஜஸ்தான், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பாஜக, மாட்டிறைச்சி கூடங்களை மூடி சீல் வைத்தது. இப்போது நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்பதற்கு ஒட்டு மொத்தமாக இந்துத்துவ அரசு தடை விதித்துள்ளது.

இந்திய சமூகச் சூழலில் பல கலாச்சாரங்கள் இணைந்து வாழுகிற பண்பாட்டுப் பரப்புக்குள் மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பது தலித் மற்றும் இந்துஅடித்தள மக்களின் , சிறுபான்மை முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மக்களின் உணவுப்பழக்கத்தின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையாகவே அமைந்து விடுகிறது. மாட்டின் புனிதம் பற்றிய கற்பிதங்கள் இவ்வேளையில் கட்டுடைக்கப்படுகின்றன.

1) இந்தியாவில் ஆரியர் நுழைவின் காலம் குறித்து ரொமிலா தாப்பர், கே.எம்.பணிக்கர் போன்ற மார்க்ஸிய ஆய்வாளர்கள் கிமு 2500களிலிருந்தே கணிக்கின்றனர்.மேய்ச்சல் சமூகமாக வந்தவர்கள் இங்குள்ள இனக்குழுக்களை வென்று தங்களை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்கள். புராதன காலத்தில் நெருப்பின் கண்டுபிடிப்பு சமூக வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்திருந்தது. நெருப்பின் உருவாக்கம் புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிராக இருந்துள்ளது. எனவே நெருப்பை பாதுகாக்கும் நோக்கில் அணைந்து விடாதிருப்பதற்காக விலங்குகள், தானியங்கள் நெருப்புக்கு படையல் செய்யப்பட்டன.வேள்வியும், புரோகிதமும் அதிகாரத்தின் வடிவங்களாக மாறின

2)இந்திய வரலாற்றில் புதையுண்டு கிடந்த சான்றுகளை வெளிக்கொண்டு வந்து புனிதங்கள் ஏற்றப்பட்ட பசுவின் கதையை கட்டுடைத்த அறிஞர் டி.என்.ஜா. எனப்படும் தவிஜேந்திர நாராயண் ஜா என்று கூறலாம்.வேத காலத்திலேயே பசுக்கள் யாகங்களில் பலியிடப்பட்டன. உணவுக்காகவும், விருந்துக்காகவும் பசுக்கள் கொல்லப்பட்டன என்பதை டி.என்.ஜா வரலாற்று ஆதாரங்களோடு விளக்குகிறார்.
வேத கால யாகங்களில் ஒன்றான அக்னதேயா சடங்கில் பசு கொல்லப்படவேண்டும் என்பது ஒரு விதி முறை. பொது யாகமான அஸ்வமேதாவில் குதிரைகள்உள்ளிட்ட அறுநூறுக்கும் மேற்பட்ட விலங்கினங்கள், பறவைகள் கொல்லப்படவேண்டும். இந்த யாகத்தின் இறுதியில் 21 பசுக்கள் பலியிடப்பட வேண்டும். இதுபோன்றே ராஜ சூயா, வாஜ் பேயா யாகங்களிலும் பசுக்கள் பலியிடப்பட வேண்டும். என்பதான் கருத்துக்கள் முன்னுக்கு வருகின்றன.
இலக்கிய ஆதாரம் சார்ந்து பேசுகையில் மகாபாரதம் வனபர்வதம் பகுதியில் மன்னன் நந்தி தேவனின் சமையலறையில் தினம் 2000 பசுக்கள் கொல்லப்படுகிற குறிப்பு இடம் பெறுகிறது. வால்மீகி இராமாயாணத்தில் தன் கணவனின் சபதம் நிறைவேறினால் 1000 பசுக்களையும், 100 ஜாடி மதுவையும் யமுனைக்கு படையல் செய்வதாய் சீதையின் வேண்டுதல் சொல்லப்படுகிறது.

ரிக்வேதத்தில் இந்திரன், அக்னி,சோமன் போன்ற வேதகால கடவுளர்கள் மாட்டிறைச்சியின் மீது பேரார்வம் கொண்டிருக்கின்றனர். வேதகால ஆரியர்கள் தாங்கள் விரும்பியதை பெரிய கடவுளான இந்திரனுக்கு படைத்தார்கள். எருதுகளின் இறைச்சி சமைக்கப்பட்டது.சோமக் கடவுளுக்கு அக்கினியால் சுடப்பட்ட எருமைகள், மலட்டுபசுக்களை உணவாக வழங்கப்பட்டது.

கோஸவம், பசு மாடு, காளைமாடு, இவைகளைக் கொல்லும் யாகம், ஐந்த்ர பசு,இந்திரனுக்காக பசுவைக்கொல்லும் யாகம், வைஷ்ணவ பசு, விஷ்ணு தேவனுக்காக பசுவைக் கொன்று நடத்தும் யாகம்,ஸாவித்ரபசு,சூரிய தேவனுக்காக பசுவைக் கொல்லும் யாகம்,வாயவீயஸ் வேதபசு,வாயு தேவதைக்காக வெள்ளைப் பசுவைக் கொல்வது,காம்யபசு, தனது எண்ணங்களை ஈடேற்றிக் கொள்வதற்குரிய பசு யாகம்,வத்ஸோபகரணம்,கன்றுக்குட்டியைக் கொலை செய்து நடத்தும் யாகம், அஷ்டதசபசுவிதானம், பதினெட்டு பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்,ஏகாதசீனபசுவிதானம், பதினொன்று பசுக்களைக் கொல்லும் யாகம்,க்ராமாரண்யபசுப்ரசம்ஸா,நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுக்களைக் கொன்று செய்யும் யாகம்,ஆதித்ய வேதாகபசு,சூரிய தேவதைக்கு பசு யாகம்,உபாரண மந்த்ரம்: யாகத்தில் கொல்லப்படும் பசுவைச் சுத்தி செய்யும் மந்திரம் ,என்பதான யாகங்களின் தகவல்களையும் நாம் கடந்து வருகிறோம்.

பசு நிச்சயமாக ஒரு உணவுதான் என்பதாக வேத நூல் கூறுகிறது.யாக்ஞவல்க்யர் பசுவின் இறைச்சி சாப்பிட்டதாகவும், திருமணம், மரணச் சடங்குகளில் ,விருந்தாளிக்கு மரியாதையின் நிமித்தமாக பசுவைக்கொன்றதும்,வேதமறிந்த பிராமணர்களுக்கு விலங்கின காணிக்கைகள் வழங்கப்பட்டதும் விவாத தளத்தில் முன்னுக்கு வந்துள்ளன.
கிபி 1- 4 காலகட்டத்தின் இந்திய மருத்துவ நூல்களான சரக சம்கிதம், சுஷ்ருதா சம்கிதம் போன்ற வற்றில் மாட்டிறைச்சியின் மருத்துவ குணம் பேசப்பட்டிருக்கிறது.மூச்சுத் திணறல்,மூக்கடைப்பு, இருமல், தொடர்காய்ச்சலுக்கு இதன் பயன்பாடுகள் வலியறுத்தவும் பட்டுள்ளன.

3) புனிதப்பசு பற்றிய கற்பிதங்களை கட்டுடைத்த டி.என்.ஜாவின் நூலுக்கு எதிராக இந்துத்துவ அதிகார மையங்கள் அறிவுத்துறியினரை ஈர்க்க உருவாக்கிய நூல்தான் தரம்பால் எழுதி 2002 ஆம் ஆண்டு வெளிவந்த த பிரிட்டீஷ் ஆரிஜின் ஆப் கவ் சிலாட்டர் இன் இண்டியா எனும் நூலாகும். பிரிட்டீஷ் ஏகாதிபத்திய சதியாக இந்த மாட்டிறைச்சி அரசியல் முன்வைக்கப்படுகிறது.ஒரு சில இந்துத்துவ அறிவுஜீவிகளின் விவாதத்தில் காளை தடை செய்யப்பட்டதற்கு காரணம் அது சிவனின் வாகனம். எருமையைப் பொறுத்தமட்டில் அது எமனின் வாகனம் எனவே அதை கொல்லலாம் என்பதாகவும் விவாதிக்கப்பட்டது. மாட்டிறைச்சி அரசியலில் பிங்க் ரெவலுயூசன் – இளஞ்சிவப்புப் புரட்சிக்கு மாற்றாக பசுமைப்புரட்சியை நடத்த வேண்டும் எனவும் குரல்கள் எழுப்பப்பட்டன.
இந்துத்துவ பண்பாட்டு அரசியல் ஒடுக்குமுறைக்கு எதிராக எழும் குரல்களின் அச்சமும், சந்தர்ப்பவாதமும் , மவுனமும் மிகவும் ஆபத்தானது.

Continue Reading

கட்டுரைகள்

தோழர் ஜீவானந்தம்

Published

on

ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 211907 – ஜனவரி 181963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.

கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.

வைக்கம் சத்தியாக்கிரகம்சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

Continue Reading

Trending

Copyright © 2021 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். Developed by : Marxist Info Systems, Coimbatore.