Connect with us

சிறுகதைகள்

அத்தர்

Published

on

சிறுகதை

எழுதியவர்- நாணற்காடன்

அத்தர்

அந்த அத்தர் பாட்டிலை டிவி அருகே வைத்ததாகத் தான் ஞாபகம். பேண்ட் பாக்கெட்டில் தான் வைத்திருந்தேன். சில்லரைக் காசுகளை எடுக்கும்போது கைக்கு அகப்பட்ட அந்த அத்தர் பாட்டில் டிவி அருகே வைத்ததாகத் தான் ஞாபகம். எங்கே போயிருக்கும்? அல்லது பாக்கெட்டிலேயே இருக்கிறதா? ஹேங்கரில் தொங்கிக்கொண்டிருந்த ஜீன்ஸ் பேண்டின் நான்கு பாக்கெட்களிலும் கையை விட்டுத் தேடினேன். பக்கத்திலிருந்த சட்டைப் பாக்கெட்டிலும் தேடினேன். கிடைக்கவில்லை. எங்கே வைத்தேனோ தெரியவில்லையே.

“என்ன கண்ணு தேடற?” என்று அம்மா கேட்க, “ஒன்னுமில்லம்மா” என்று சொல்லியபடி சட்டைக்குப் பித்தான் மாட்டியபடி வெளியே கிளம்பினேன். நாமக்கல் வரை போக வேண்டும். ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி.

பேருந்து நிலையம் போய் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் மறுபடி அதே யோசனை. எங்கே வைத்தேனோ தெரியவில்லையே? ஒருவேளை டிவி அருகே வைக்கவில்லையா? பேண்ட் பாக்கெட்டிலேயே இருக்கிறதா? கை விரல்களுக்கு அகப்படாமல் பாக்கெட்டிலேயே ஒளிந்துகொண்டுவிட்டதா? நான் தான் சரியாகத் தேடவில்லையா?

அந்த அத்தர் பாட்டில் விலையுயர்ந்ததெல்லாம் இல்லை. முப்பது ரூபாயோ, நாற்பது ரூபாயோ தெரியவில்லை. நினைவுக்கு வந்துவிட்டது. சரியாக முப்பது ரூபாய் தான். அத்தர் பாட்டில் முப்பது ரூபாய். இரண்டு டீ இருபது ரூபாய். ஒரு பிஸ்கட் பாக்கெட் ஐந்து ரூபாய். ஆக மொத்தம் ஐம்பத்தைந்து ரூபாய். நூறு ரூபாய் தாளை நீட்டியபோது ஐந்து ரூபாய் சில்லரை கேட்டார் அந்த பாய். ஆனந்த் தான் ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து நீட்டினான். மீதி ஐம்பது ரூபாய் அவர் திருப்பிப் கொடுத்தது ஞாபகத்தில் இருக்கிறது.

இதெல்லாம் ஞாபகத்தில் இருக்கிறது. அந்த ஆள்காட்டி விரல் நீள அத்தர் பாட்டிலை எங்கே வைத்தேன் என்பது தான் தெரியவில்லை. எதை வாங்கி வந்தாலும், பாக்கெட்டிலிருந்து எதை எடுத்தாலும், சட்டென டிவி அருகே வைத்துவிடுவது தான் என் பழக்கம். ஆனால் இந்த அத்தர் பாட்டிலை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லையே? அத்தர், ஜவ்வாது என்றெல்லாம் கேள்விப்பட்டதோடு சரி. அதையெல்லாம் வாங்க வேண்டுமென்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. யாரேனும் கமகமக்க அருகில் வரும்போது ‘அட நல்லா இருக்கே வாசனை. இது அத்தரா? ஜவ்வாதா? இல்ல செண்ட்டா? என்னவா இருக்கும்’ என்று அந்தக் கணத்தில் யோசிப்பதோடு சரி. மற்றபடி அதை வாங்கி உடம்பில் பூசிக்கொண்டு கமகமக்க வேண்டுமென்று நினைத்ததேயில்லை.

இப்போது மட்டும் நானா தேடிப்போய் வாங்கினேன்? அதிலும் இந்த முப்பது ரூபாய் அத்தர் பாட்டிலை வாங்க திருநெல்வேலிக்குப் போவார்களா யாராவது? திருநெல்வேலிக்குப் போனால் எல்லோரும் அல்வா தானே வாங்கி வருவார்கள். நான் ஒரு அத்தர் பாட்டிலை வாங்கி வந்து அதையும் எங்கே வைத்தேன் என்று தெரியாமல் யோசித்து யோசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். போனால் போகிறது என்று விட்டுவிட்டு நகரவும் மறுக்கிறது இந்த மனசு. பழைய பேருந்து நிலையம் தாண்டி, ரயில்வே மேம்பாலம் ஏறி இறங்கி, ஆண்டகளூர் கேட் தாண்டி என் ஹெச் 7 இல் நாமக்கல்லை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறது பேருந்து.

நாகர்கோயில் போகும் போதெல்லாம் திருநெல்வேலியைக் கடந்து தான் போயாக வேண்டுமென்றாலும் திருநெல்வேலியைச் சுற்றிப்பார்க்கவென்றே முதன் முறையாக போனது இரண்டு நாள் முன்பு தான். எங்கேயாவது வெளியூர் போய் சுற்றிவிட்டு வரலாமா என்று கேட்டான் ஆனந்த். நெல்லையப்பர் கோயிலுக்குப் போயிருக்கிறாயா என்று கேட்டதும், அது எங்க இருக்கு என்று திருப்பிக் கேட்டான் அவன். வீடு, கம்பெனி என்று உழன்று கொண்டிருக்கும் அவனிடம் இப்படி நான் கேட்டிருக்கக் கூடாது தான்.

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இறங்கும்போது விடியற்காலை மணி நாலரை. தாமிரபரணி ஆற்றில் தலை முழுக வேண்டும் என்பது தான் எனது பெரு விருப்பம். காவிரி தண்ணீர் குடித்து ஜீவிக்கிற எனக்கு தாமிரபரணி தண்ணீரை ஒரு மிடறாவது குடிக்க வேண்டும் என்பது வெகு நாள் ஆசை. மற்றபடி நெல்லையப்பராவது கோயிலாவது? ஆனாலும், அந்த இசைத் தூண்கள். அடடா…

சிவப்பு நிற டவுன் பஸ் அருகே நின்றிருந்த நடத்துநரிடம் “தாமிரபரணி ஆத்துக்கு எப்படி சார் போகணும்?” என்று கேட்டேன்.

“பஸ்ல ஏறுங்க அண்ணாச்சி. ஜங்சன்ல இறங்கிக்கோங்க. அங்கிட்டு ஒரு டீய போடுங்க. விடிய ஆரம்பிச்சதும் காலாற அப்படியே நடங்க. அங்கிட்டு இருந்து கொஞ்ச தூரம் தான் அண்ணாச்சி” நெல்லைத் தமிழில் கொஞ்சினார். பேருந்திலேறி ஜங்சனில் இறங்கி…

கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் மேலே எழுவதை தாமிரபரணி ஆற்றங்கரையில் நின்றவாறு பார்த்துக்கொண்டிருந்தோம். குளித்துக்கொண்டும், துணியை அலசிக்கொண்டும், நீச்சலடித்துக்கொண்டும் படித்துறையில் நெல்லை ஜனங்கள் குழுமியிருந்தார்கள். தலைமுழுகி, தண்ணீர் குடித்து நெடு நாள் விருப்பம் தீர்ந்து மனசு மிதந்துகொண்டிருந்தது எனக்கு. “கிளம்பி நேரா கோயிலுக்குப் போகலாமா அண்ணா” என்று கேட்டான் ஆனந்த்.

ஆற்றின் சலசலப்பு காதுகளை விட்டு நீங்க நீங்க கரைவிட்டு மேடேறி சாலையை நோக்கி வந்துகொண்டிருந்தபோது, “டீ சாப்பிடுங்க அண்ணாச்சி” என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு மசூதி. இதே பாதையில் கீழிறங்கிச் செல்லும்போது இருட்டாக இருந்ததால் இங்கொரு மசூதி இருந்ததே தெரியவில்லை போல எங்களுக்கு.

“வாங்க அண்ணாச்சி. டீ சாப்பிடுங்க. வாங்க வாங்க” என்றபடி மசூதி வாசலில் டீ விற்றுக்கொண்டிருந்தவர் மறுபடி கூப்பிட அந்தத் தை மாதக் குளிருக்கு டீ சாப்பிட்டால் பரவாயில்லை என்று தோன்றியது எங்களுக்கும். தலையில் குல்லா. தாடி வெள்ளைக்கு மருதாணி பூசியிருந்தார்.

இரண்டுக்கு இரண்டடி மேசை. அதன் மேல் ஒரு டீ ட்ரம். பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் தட்டில் அடுக்கி வைக்கப்பட்ட பிஸ்கட் பாக்கெட்டுகள். இரண்டு மூன்று பிளாஸ்டிக் தட்டுகளில் வரிசை வரிசையாக அத்தர் பாட்டில்கள்.

“வெளியூரா அண்ணாச்சி” என்றபடி காகிதக் கப்பில் டீ பிடித்துக் கொடுத்தார் இருவருக்கும்.

“ஆமாங்க” என்றபடி வாங்கிக் குடிக்க ஆரம்பித்தோம். நாங்கள் கேட்கவேயில்லை. அவரே அடுத்து பிஸ்கட் பாக்கெட்டையும் எடுத்து நீட்டினார். மறுக்க வேண்டுமென்று எங்களுக்கும் தோன்றவில்லை.

“இதெல்லாம் என்னங்க” சுட்டுப்போட்டாலும் அண்ணாச்சி வராது எனக்கு.

“அத்தருங்க அண்ணாச்சி” என்றபடி ஒரு பாட்டிலை எடுத்து மூடி திறந்து “கைய நீட்டுங்க அண்ணாச்சி” என்றார்.

கையைப் பிடித்து பின்னங்கையில் அந்த அத்தர் பாட்டில் மேலிருந்த வெள்ளை உருண்டைப் பந்தை உருட்டினார். சில்லென்ற ஈரம் பின்னங்கையில் படர்ந்தது.

“சட்டையில் தேச்சிக்கோங்க அண்ணாச்சி. நாள் முழுக்க வாசமா இருக்கும்” என்றார்.

சட்டையில் தேய்த்தபடி “ஆஹா, நல்ல வாசமா இருக்கே. ஒரு பாட்டில் கொடுங்க. எவ்வளவு ரூபாய்ங்க.” என்றேன்.

“முப்பது ரூவா தானுங்க.”

“நீங்க டீ வேவாரியா? அத்தர் வேவாரியா?” என்றேன்.

“ஹ ஹ ஹா. அத்தர் விக்கறது தான் அண்ணாச்சி என் தொழிலு. காலைல நேரத்துல தொழுகைக்கு வாரவுக, ஆத்துல குளிக்க வாரவுகளுக்காக ஒரு ட்ரம் டீயும் போட்டுட்டு வந்துடறது. அதுலயும் ஒரு நூறு ரூவா வரட்டுமே” என்றார் சிரித்தபடி.

“தாடிக்கு மைலாஞ்சி பூசியிருக்கீங்களா?”

“ஆமாங்க அண்ணாச்சி. இதோ மைலாஞ்சி பாக்கெட். இயற்கையா தயாரிச்சது அண்ணாச்சி” என்றபடி காலடியிலிருந்த அட்டைப் பெட்டியிலிருந்து ஒரு பாக்கெட்டை எடுத்து நீட்டினார். வாங்கிப் பார்த்துவிட்டு அவரிடமே கொடுத்துவிட்டு, ஒரே ஒரு அத்தர் பாட்டில் மட்டும் வாங்கிக்கொண்டேன். மருதாணியை மைலாஞ்சி எனச் சொல்லும்போது அதுவும் ஓர் அழகு தான். அதுவுமில்லாமல் மைலாஞ்சி எனச் சொல்லும்போதெல்லாம் ரசூலின் முகம் நினைவில் சிவப்பதைத் தடுக்க முடியாது. இராசிபுரத்தில் மைலாஞ்சி என்று சொன்னாலும் யாருக்கும் தெரியப்போவதில்லை. மைலாஞ்சி என்ற சொல்லைச் சொல்ல வேண்டுமென்றாலும் பேருந்தேறி தெற்கே போக வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பாட்டிலையும் காட்டிக் காட்டி இது ரோஜா அத்தர், இது மல்லிகை அத்தர் என அவர் சொல்லிக்கொண்டிருக்க டீயைக் குடித்து பிஸ்கட்களையும் தின்று முடித்திருந்தோம் நானும், ஆனந்தும்.

புதன்சந்தை வந்துவிட்டதே தெரியவில்லை. மனம் அத்தர், தாமிரபரணி, மசூதி வாசல் பாய், நெல்லையப்பர் கோயில் இசைத்தூண்கள் என இப்படியே சுற்றிக்கொண்டிருக்கிறது. அதிலும் அந்த அத்தர் பாட்டிலும், அதன் வாசனையும் ஞாபகத்தில் இன்னமும் பரவிக்கொண்டிருக்கிறது. வாசனை என்பது என்ன? வெறும் ஞாபகம் மட்டும் தானே?

எங்கேயாவது தவறவிட்டுவிட்டேனோ? வரும்போது வழியில் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுக்கும்போது அத்தர் பாட்டில் தவறி கீழே விழுந்து அந்த திருநெல்வேலி டு சேலம் பேருந்திலேயே போய்விட்டதோ என்னவோ. நாளை மாலை நாமக்கல் திருமண வரவேற்புக்குப் போகும்போது அத்தர் பூசிக்கொண்டு போக வேண்டும் என நேற்று திருநெல்வேலியிலிருந்து திரும்பி வரும்போது கூட நினைத்துக்கொண்டே வந்தேன். “ நாலு தியேட்டர் இறங்குங்க” என்ற நடத்துநரின் குரலோடு அத்தர் பாட்டில் பற்றியும் அதன் வாசனை பற்றிய ஞாபகங்களையும் அந்தப் பேருந்திலேயே பயணிக்க விட்டுவிட்டு இறங்கிக்கொண்டேன்.

இந்த மாசி மாதக் கடைசியில் வெயில் சுர்ரென்று ஏறத் தொடங்கிவிட்டது. ஆதனுக்கு நுங்கு மாதிரி பிஞ்சு தலை. பிறந்து பத்து மாதத்தில் மொட்டையடித்தே ஆக வேண்டுமா என்ன? அதுவும் தாய்மாமன் என்கிற முறையில் என் மடியில் தான் வைத்து மொட்டையடிக்க வேண்டுமாம். அது கூடப் பரவாயில்லை. அவனது எலிக்குஞ்சு செவிமடல்களில் காதுகுத்து வேறு. அதுவும் என் மடியில் உட்கார வைத்து தான். வலிக்காதா அவனுக்கு?

ஒரு மினி ஆட்டோவில் பத்துப் பதினைந்து பேர் ஏறிக்கொண்டு மரப்பறை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறோம். ஆட்டோவில் ஏறியதிலிருந்தே ஒரு வாசனை என்னை அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வாசனையை எங்கோ நுகர்ந்திருக்கிறேனே?

மரப்பறை அங்காயிக்கு சாத்துவதற்காக வாங்கி வைத்த ரோஜாப்பூ மாலை, வாழைப்பழ சீப்பு, தேங்காய், ஊதுபத்தி, கற்பூரம் லொட்டு லொசுக்கெல்லாம் என் காலடியிலிருந்த ஒரு கூடையில் குலுங்கிக் குலுங்கி வந்துகொண்டிருந்தன. மினி ஆட்டோவில் ஆறேழு பெண்கள் காலை நீட்டிப்போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். நாலைந்து பொடுசு பெண் பிள்ளைகள் வேறு. எல்லாம் பத்துப் பன்னிரண்டு வயசுக்குள். கண்ணுக்கு மை என்ன? உதட்டுக்கு லிப்ஸ்டிக் என்ன? விரல்களுக்கு நெயில் பாலீஸ் என்ன? இந்தப் பெண் பிள்ளைகளுக்கு எங்கிருந்து தான் இந்த மேக்கப் சாதனங்கள் கிடைக்கிறதோ! அழகழகாய் இருக்கிறார்கள்.

ஆண்களெல்லாம் நின்று கொண்டு ஆட்டோவின் குலுங்கள்களுக்கேற்ப கீழே விழுந்துவிடாதபடி அவரவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு போகிறோம். இங்கிருந்து மரப்பறைக்கு பதினைந்து கிலோமீட்டர் தான். அதனால் சமாளித்துக்கொண்டு போய்விடலாம்.

நேற்று மாலையே என் டிவிஎஸ் எக்ஸ்எல்லில் உட்காரவைத்து அம்மாவைத் தங்கை வீட்டுக்கு கொண்டு போய் விட்டுவிட்டேன். அவள் வீடு பழைய பேருந்து நிலையத்தில். எங்கள் வீடு புதிய பேருந்து நிலையத்தில். ஒரு கிலோ மீட்டர் தூரம் கூட வராது. மினி ஆட்டோவில் போவதாகச் சொல்லியிருந்ததால் விடிந்ததும் எங்கள் வீட்டிலிருந்து கிளம்பி ஆட்டோ புறப்படுவதற்கு சற்று முன் தங்கை வீட்டுக்கு போய்ச் சேர்ந்துவிட்டேன். எல்லா பூஜை பொருட்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு இப்போது போய்க் கொண்டிருக்கிறோம்.

ஒன்பது மணிக்கெல்லாம் கோயிலுக்குப் போய்விடலாம். பத்து மணிக்குள் மொட்டையடித்து, குளிக்க வைத்து, பதினொரு மணிக்குள் காது குத்தி, பொங்கல் வைத்து பன்னிரண்டு மணி உச்சிகால பூஜை முடித்து இரண்டு மணிக்குள் வீட்டுக்குத் திரும்பிவிடலாம்.

வண்டி குலுங்கிக் குலுங்கிப் போய்க்கொண்டிருக்கிறது. ஊதுபத்தியிலிருந்து அந்த வாசனை வருகிறதா? மிகவும் பிடித்த இந்த வாசனையை முன்பு எப்போதோ நுகர்ந்திருக்கிறேனே? வாசனையாக இருப்பதற்கு அங்காயிக்கு சார்த்த வாங்கிய ரோஜாப் பூ மாலையில் தெளித்திருப்பார்களோ? எழவு காரியத்துக்கு மாலை வாங்கும்போது வாசனையாக இருக்க எதையோ தெளித்துக் கொடுப்பார்களே? அந்த வாசனையா இது? இல்லையில்லை. இது வேறு வாசனை. ஞாபகத்தில் பரவிக்கிடக்கிற வாசனை.

ஞாபகம் வந்துவிட்டது. இது அத்தர் வாசனை. இது அத்தர் வாசனையே தான். இல்லையில்லை. அத்தர் வாசனை போல் தெரியவில்லை. குழப்பமாக இருக்கிறது. ஆனாலும், அத்தர் போல ஏதோவொன்றைத் தான் ஆட்டோவிலிருக்கும் யாரோ பூசியிருக்கிறார்கள். ஜவ்வாதாக இருக்குமோ? இந்தப் பெண் பிள்ளைகளே இத்தனை மேக்கப்போடு வந்திருக்கிறார்களே. இவர்களின் அம்மாக்களில் யாராவது ஒருத்தர் தான் பூசியிருப்பார்களாய் இருக்கும். அல்லது எல்லோருமே கூட பூசியிருப்பார்கள். ஏன் என்னோடு நின்று கொண்டு வருகிற இந்த ஆண்கள் கூட பூசியிருக்கலாம். நானோ முகத்துக்குக் கூட பவுடர் அடிக்காத ஆள். என்னைப் போலவே எல்லா ஆண்களும் இருப்பார்களா என்ன? அதோ ஆதனின் தாத்தா திட்டுத் திட்டாக முகமெல்லாம் பவுடர் பூசிக்கொண்டு ஜொலிக்கிறாரே. ஆஹா. என்னவொரு அற்புத வாசனை. இங்கு பரவிக்கிடக்கும் இந்த வாசனை அந்த அத்தர் பாட்டிலை மறுபடியும் நினைக்க வைத்துவிட்டது. நான் வாங்கி வந்த அந்த அத்தர் பாட்டில் எங்கே தவறவிட்டேனோ தெரியவில்லை.

மொட்டையடித்து, காதுகுத்தி, பூஜைகளெல்லாம் முடித்துக் கிளம்பும்போது மணி மதியம் ஒன்றை நெருங்கிவிட்டது. மர ஸ்டூல் போட்டு பெண்கள் ஒவ்வொருவராக வண்டியில் ஏறத்தொடங்கினார்கள். ஏறத் தடுமாறிய ஒவ்வொருவரையும் கையைப் பிடித்து பாதுகாப்பாக மேலே ஏற்றி உட்கார வைத்துக்கொண்டிருந்தேன். அம்மா கையிலிருந்த சின்ன பர்ஸையும், மூக்குக் கண்ணாடி வைக்கும் சின்னப் பெட்டியையும் என் கையில் கொடுத்துவிட்டு தட்டுத் தடுமாறி மேலே ஏறி முயல பர்ஸையும், கண்ணாடிப்பெட்டியையும் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கை கொடுத்து தூக்கிவிட்டேன். பொடுசுப் பெண் பிள்ளைகளையும் ஒவ்வொருத்திகளாக ஏற “பசிக்குது பசிக்குது சீக்கிரம் போலாம் மாமா” என என்னைப் பார்த்துக் குரல் கொடுத்தார்கள்.

வண்டி கிளம்பி ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தது. வழியெங்கும் இரு புறமும் பனை மரங்கள். தூரத்து பனை மரங்களில் சட்டி கட்டி வைத்திருக்கிறார்கள். கள் இறங்குகிறார்கள் போல.

“கண்ணு, அந்தக் கண்ணாடிப் பொட்டிய கொடு” என்று கால் நீட்டி உட்கார்ந்திருந்த அம்மா கேட்க வண்டியின் குலுங்கல்களுக்கு நடுவே பாக்கெட்டில் கைவிட்டு எடுத்துக்கொடுத்தேன். சட்டென பாக்கெட்டிலிருந்த அம்மாவின் பர்ஸ் ஞாபகம் வந்ததும் கைவிட்டு எடுத்துப் பார்த்தேன். அது ஒரு பழைய பர்ஸ். அழுக்கு படிந்து கிடந்தது. அநேகமாக தங்கை திருமணத்திற்கு தோடெடுத்தபோது நகை போட்டுக்கொடுத்த பர்ஸாக இருக்கலாம். அப்போது அப்பாவும் கூட வந்திருந்தார். இப்போது தான் அப்பா இல்லையே. கயல் பிறந்து அவளுக்கும் கூட ஐந்து வயசு ஆகிவிட்டது. கயலையும், ஆதனையும் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை அப்பாவுக்கு. நானும், அம்மாவும் அதன் பிறகு நகைக் கடைக்கு எங்கே போனோம்? ஏழெட்டு வருசமாச்சு.

அந்தப் பர்ஸின் ஜிப்பைத் திறந்து பார்த்தேன். பத்து, இருபது ரூபாய்த் தாள்கள் சில இருந்தன. அவற்றைக் களைந்து விட்டுப் பார்க்க விரல்களில் தட்டுப்பட்டது நான் தொலைத்துவிட்டதாக நம்பிக்கொண்டிருந்த அந்த அத்தர் பாட்டில்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இலக்கியம்

குறி…

சோலச்சி

Published

on

“ஏம்மா.. இத்தன பேரு வேல பாத்தும் ஒரு வேல கூட முழுசா நடக்கலயே. கையிலயா எழுதுறீங்க. ம்… ஒரு மிசினா ரெண்டு மிசினா, மொத்தம் பன்னெண்டு மிசினு இருக்கு. மிசின்ல என்ன நிகழ்வுனு கொடுத்தா அது செய்யப் போகுது. இல்ல…. எதும் புரியலனா என்கிட்ட கேட்டா நா சொல்ல மாட்டேனா. அது என்னாச்சு இது என்னாச்சுனு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் காலையிலிருந்து போன்ல கேட்டுக்கிட்டே இருக்காங்க. நா என்னத்த சொல்லி மழுப்புறது. எனக்குனு ஒரு மரியாதை இருக்கு அதக் கெடுத்துறாதீங்க.” ஆடிட்டர் கோவிந்தராஜின் சத்தத்தில் அந்த அறையே நிசப்தமானது.

அப்போது பக்கத்து அறையிலிருந்து இரண்டு கோப்புகளுடன் வந்தாள் நவநீதசுந்தரி.

“என்னம்மா…வந்த புதுசுல நீயும் ஒழுங்காதான் வேல பாத்த. இவங்களோட சேர்ந்து நீயும் வரவர சொதப்ப ஆரம்பிச்சுட்டீயே.”

அவள் எதுவும் பேசாமல் இரண்டு கோப்புகளையும் அவர் கைகளில் நீட்டினாள். வாங்கி ஒவ்வொரு பக்கமாக புரட்டி பார்த்துவிட்டு அவளின் முகத்தைப் பார்த்தார். சீதையம்மாள் டிரான்ஸ்போர்ட் ஆடிட்டிங் பேமஸ் ஜவுளிக்கடை ஆடிட்டிங்கும் பணிகள் நிறைவு பெற்றிருந்தன. வேற எதும் பாக்கனும்னா சொல்லுங்க சார் என்பது போல அவரை பார்த்துக் கொண்டிருந்தாள் நவநீதசுந்தரி.

“பரவாயில்லையே. வேலக்கி வந்த நாள்ல இருந்து இந்தப் பொண்ணுக்கிட்ட ஒரு குறையும் பாக்க முடியலயே. எனக்கும் வயசு எழுபது ஆகப் போவுது. இந்த மாதிரி துருதுருனு இருக்க பொண்ண ஒன்னு ரெண்டதான் பாக்க முடியுது.” ம்….. தலையாட்டி்கொண்டே கோப்புகளை கையில் வைத்துக்கொண்டு சீதையம்மாள் டிரான்ஸ்போர்ட் மேலாளர் ரெத்தினத்தை அலைபேசியில் தொடர்பு கொண்டபடி தனது அறைக்குள் நுழைந்தார் ஆடிட்டர் கோவிந்தராசு.

“இப்புடி எறிஞ்சு விழுறது தப்பு இல்லயா. எல்லாம் வயசுக்கு வந்த புள்ளைங்க. வெளியில போயி ஒன்ன திட்ட மாட்டாங்களா. வேல பாக்குறவுங்ககிட்ட அன்பா இருடா. வயசுக்கு ஏத்த பக்குவம் ரொம்ப முக்கியம்” நண்பர் செங்குட்டுவன் சொன்னதை நினைத்து தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டார்.

“நா சாமி கும்புடுறது இல்லனு உனக்கு தெரியும். எனக்கு எல்லாமே இந்த ஆபிஸ்தான். யாரா இருந்தாலும் கொடுத்த வேலயா சரியான நேரத்துல செஞ்சு முடிக்கனும். இல்லனா, பொம்பளப் புள்ளைகள வச்சுக்கிட்டு கெழவன் அரட்டை அடிக்கிறானு, இங்க வந்துட்டு போற நூறு பேருல எவனாவது ஒருத்தன் டவுனுக்குள்ள பொய்யும் பொரட்டுமா சொல்லிக்கிட்டு திரிவான். கோவிந்தராசு சிடுமூஞ்சிகாரனு சொல்லட்டுமே. அதுனால எனக்கு ஒரு நட்டமும் இல்ல. ஆனா இங்க வேல பாக்குற பொம்பளப் புள்ளைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு கெடைக்கும்ல”. நினைப்போடு இருக்கையில் அமர்ந்து அழைப்பு மணியை அழுத்தினார்.

அழைப்பு மணியோசை கேட்டு உள்ளே நுழைந்தாள் நவநீதசுந்தரி.

“சார்…” அவளின் ஒலியளவு மிக மெதுவாய் இருந்தது.

நீல நிறத்தில் கோப்பு ஒன்றை கொடுத்து ”இந்த கோப்புகள புரட்டி பாரும்மா. அரைமணி நேரத்துல கணேசன்னு ஒருத்தரு வருவாரு. அவருக்கிட்ட தேவையான வெவரத்த கேட்டுக்க. இந்த வேலை எப்ப முடியுமுனு சரியாச் சொல்லி அனுப்பிடு. பீஸ் எப்பவும்போல பாதி வாங்கிடும்மா”

கோவிந்தராஜின் பேச்சுக்கு ஆமோதிப்பது போல் தலையாட்டிக் கொண்டே சென்றாள் நவநீதசுந்தரி.

ஆடிட்டர் கோவிந்தராசின் அலுவலக நேரம் காலை பத்துமணி முதல் மாலை ஆறுமணி வரைதான். ஞாயிறு விடுமுறை. எல்லோரும் வீட்டுக்குச் சென்ற பிறகு இரவு பத்துப் பதினோரு மணிவரை அலுவலகத்தில் வேலை பார்ப்பார். பல நேரங்களில் அங்கேயே சாப்பிடாமல் கூட உறங்கி விடுவிடுவார்.

“ஏங்க இப்புடி ஒடம்ப கெடுத்துக்குறீங்க. பசங்கதான் நல்ல நிலையில் இருக்கானுக. நமக்கு என்ன குறை. வயசான காலத்துல ஒரு இடத்துல இருக்கக் கூடாதா. இதுவரைக்கும் ஒழச்சது போதாதா.” தினந்தோறும் இப்படி சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் உலகநாயகி.

“உலகம் தெரிஞ்சவனு நெனச்சுதான் என் மாமனாரு பொருத்தமா ஒனக்குப் பேரு வச்சுருக்காரு. ஒன்னோட ஒலகத்துக்குள்ள இந்தக் கோவிந்தராச அடச்சுப் போட்றனும்னு இந்தன வருசமா போராடுற. ம்….ஒன்னோட உலகத்த விட்டு நா எப்ப வெலகுனேன். எங்க இருந்தாலும் ஒனக்குள்ளதான் அடஞ்சு கெடக்குறேன்.” அவரின் பேச்சுக்கு வலுசேர்ப்பதைப்போல “எதையாவது சொல்லி மயக்கிப்புடுங்க. பேசாம நீங்க வக்கீலுக்கு படிச்சு வக்கீல் ஆயிருக்கலாம்” என்றார்.

“பேசுனாதானே வக்கீல் ஆக முடியும்…” மொட்டு மலர ஆரம்பிப்பதைப் போல் சொற்களை மெல்ல தூவினா். அந்தச் சொற்களில் நனைந்து மலர்ந்து கொண்டிருந்தார் உலகநாயகி. வயது கடந்தும் அவர்களின் சொற்களில் காதல் குடிகொண்டு நடனமாடியது.

காரு , பங்களா என்று வசதிக்கு குறைவில்லை. பணம் வாழ்க்கை நடத்துறதுக்கு ஒரு துணை அவ்ளோதான் என்று உணர்ந்ததால் பணத்தின் மீது அவ்வளவு ஆசை அவருக்கு கிடையாது. மகன் முகிலன் திரைத்துறையில் இசையமைப்பாளர். மேலும் இசைக் கல்லூரி ஒன்றையும் நடத்துகிறார். மகள் தமிழினி மகப்பேரு மருத்துவராக இருக்கிறார். ஆபிஸ அடுத்த ஆளுகிட்ட விட்டா நம்ம பேர காப்பாத்த மாட்டாங்க. நம்ம இருக்குறதால இத்தன பொம்பளப் புள்ளைங்களுக்கும் வேல கெடக்குது. ஆபிஸ இழுத்து மூடிட்டா நமக்கு ஒன்னும் நட்டம் இல்லனாலும் இத்தன புள்ளைங்களோட குடும்பம் என்னாகும். ஏதோ உசுரு இருக்க வரைக்கும் ஆபிஸ் இயங்கட்டும் என்று எண்ணியே ஆடிட்டர் கோவிந்தராசு அலுவலகத்தை நடத்தி வந்தார்.

வேலை முடிந்து பேருந்து நிலையத்திற்கு சின்னப்பா பூங்கா வழியாகத்தான் நவநீதசுந்தரியும் யாமினியும் நடந்து செல்வார்கள். அந்த வழியில்தான் தனம் பேங்கர்ஸ் என்ற வட்டிக்கடை இருக்கிறது. அந்தக் கடையின் அருகில் செல்லும்போதெல்லாம் எதையோ முனுமுனுத்துக் கொண்டே செல்வாள் நவநீதசுந்தரி.

எத்தனையோ நாய்ங்க தெருவுல திரியுது. சில நாய்க கத்துது, சில நாய்க மூடிக்கிட்டு கெடக்குது, கத்துறது…. லோலோனு அலையுறது நாயோட கொணம்டி. அதுக்காக அதுககூட சண்ட போட முடியுமா. நம்ம வேலய பாத்துக்கிட்டு போக வேண்டியதுதான். நாம கிராமத்துல இருந்து டவுனுக்கு வேலக்கி வர்றோம். வந்தம்மா வேலய பாத்தமானு ஊரு போயி சேரனும்டி. டவுன்லயே பெரிய வட்டிக்கடை இதுதான். அதுமட்டுமா தனம் லாட்ஜ்ம் அவனுகோட்டுதான். ஒரே புள்ள அதான் போற வர்ற பொம்பளப் புள்ளைகள ரூட்டுவிட்டுக்கிட்டு திரியுறான். நமக்கென்ன….. எத்தனையோ முறை யாமினியும் சொல்லிவிட்டாள். ஆனாலும் புவியரசை பார்க்கும் போதெல்லாம் மனதுக்குள் திட்டுவதை நவநீதசுந்தரி நிறுத்துவதே இல்லை.

கிழக்கு சூரியன் மேற்கே மறைகிறதோ இல்லையோ புவியரசு மறக்காமல் மாலை நேரம் தனது கடை வாசலுக்கு வந்துவிடுவான். ராயல் என்பீல்டு வண்டியில் செல்போன் பேசியபடி பின் தொடர்வதை தலையாய பணியாக கொண்டிருந்தான்.

“மாப்ள ஒரு கவிதை சொல்றேன் கேளு…

காற்றில் ஆடும் செவ்வந்தி பூ
உன்
மாராப்பில் ஒளிந்துகொண்டு
என் மனதை திருடும் வித்தை
கேளடி….
அருகே தோழி
அன்ன நடையே
அலையும் என் மூச்சு
அமுதம் தர
எடுத்துச் சொல்வாயோ…
என் பீல்டு வண்டியும்
நொண்டியாய் ஒண்டியாய்
நாள்தோறும் நலியுதே
என் மேனி மெலியுதே
கிராமத்து தேன் ஊற்றே
என்னைக் கிரங்கடிக்கும்
தென்றல் காற்றே….
வாரேன் வாரேன்
வாயேன் வாயேன்
உனது
வலது கரத்தை தாயேன்…..!

மாப்ள எப்படிடா இருக்கு என்னோட கவிதை”. அலைபேசியில் பேசியபடி வண்டியை இயக்கினான்.

மெல்லியதாய் சிரித்தவள், பேருந்தின் சன்னலோரமாய் உட்கார்ந்தாள். நகரத்து காற்றில் நவநீதசுந்தரியின் மூச்சுக்காற்று கலந்து புவியரசின் முகத்தில் பளிச்சென பட சிலிர்த்துப் போனான்.

“டவுனு பசங்ககிட்ட கவனமா இருக்கனும்டி. அவன் நம்ம பின்னாடி சுத்துறது தெரிஞ்சுச்சுனா சாரு நம்மல வேலயவிட்டு தூக்கிருவாரு.” யாமினியின் பேச்சை காதில் வாங்காதவளாய் பேருந்தில் ஒலித்த செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா…. பாடலில் மூழ்கிப் போனாள்.

தனது திருமணம் அடுத்தவாரம் ஞாயிற்றுக்கிழமை தபசுமலை முருகன் கோவிலில் நடப்பதாகச் சொல்லி அழைப்பிதழை எல்லோரிடமும் கொடுத்திருந்தாள் யாமினி. அவளை திருமணம் முடியும்வரை வீட்டில் ஓய்வு எடு திருமணத்திற்கு பிறகு உன் கணவனிடம் சொல்லிவிட்டு பணிக்கு வரலாம் என்று சொல்லி மூன்றரை பவுன் நெக்லஸும் வாங்கிக் கொடுத்தார் ஆடிட்டர் கோவிந்தராசு. ஆனால் அவளோ வீட்டில் எனக்கொன்றும் வேலையில்லை. அதனால் வேலைக்கு வருகிறேன் என்று பிடிவாதமாக வந்தாள்.

தமது அலுவலகத்தில் இரண்டாண்டுக்கு மேல் பணியாற்றுபவர்களின் திருமணத்திற்கு மூன்றரைபவுன் நெக்லஸ் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பது உலகநாயகியின் உத்தரவு.

“லீவே கொடுக்காம சாரு வேல வாங்குறாருனு யாரும் தப்பா நெனைக்க மாட்டாங்களா” நவநீதசுந்தரி சொன்னதை காதில் வாங்கிக் கொண்டவள்…

“பெத்த தகப்பனோடு எத்தன நாள்டி வாழப்போறோம். நம்ம சாரு எனக்கும் தகப்பன் மாதிரிதான். சிடுசிடுனு சத்தம் போட்டாலும் தங்கமான மனசுடி சாருக்கு. நா வேணுங்கிற நெனப்புல என்னக் கட்டிக்கப் போறவன் எல்லாத்துக்கும் மண்டய ஆட்டுறான். கல்யாணத்துக்குபிறகு அப்புடியே இருக்க முடியுமா. போற எடத்துல என்ன நெலமையோ அதப் பாத்த பிறகுதான்டி வேலக்கிப் போறதா இல்லையானே முடிவு எடுக்க முடியும். அதுவரைக்கும் ஒங்க கூட இருக்கேனே…”யாமினியின் பேச்சில் கண்கலங்கிப் போனாள் நவநீதசுந்தரி.

யாமினியின் திருமணத்திற்குப் பிறகு நவநீதசுந்தரி கண்ணனூரிலிருந்து தனியாகத்தான் வேலைக்கு வந்து சென்றாள். புவியரசு அவளை பின்தொடர்ந்து செல்வதில் முன்னேற்றம் கண்டான். மெல்லியதாய் சிரிக்க ஆரம்பித்தவள் மணிக்கணக்கில் அலைபேசியில் அவனோடு சிரித்து சிரித்து பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டாள்.

யாருக்கும் சந்தேகம் வந்துவிடாதவாறும் நடந்து கொண்டாள். எப்போதாவது யாமினி அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினால் புவியரசைப் பற்றிக் கேட்பாள். அப்போதெல்லாம் நீதான் சொல்லியிருக்கியே நாம உண்டு நம்ம வேல உண்டுனு இருக்கனும்னு. நா எதயும் கண்டுக்கிறது இல்லடி. பூமி தன்னையும் சுத்திக்கிட்டு சூரியனையும் சுத்துது. என்னைக்காச்சும் சூரியன பூமி தொட முடியுமா. தொட்டா மொத்தமா எரிஞ்சு போயிரும்… நவநீதசுந்தரியின் சொல்லாடலில் உண்மை இருப்பதை உணர்ந்து பெருமைபட்டுக் கொண்டாள் யாமினி.

ஒட்டுமொத்த அழகையும் உதடுகளுக்குள் பூட்டிவச்சு உசுர எடுக்குறாளே. அதை உறிஞ்சி குடிக்கும் நாள் எந்நாளோ. அந்த நாள் எந்த உலகில் இருக்கோ தெரியலயே. ஓராயிரம் கவிதைகளை ஒவ்வொரு கண்களுக்குள்ளும் குவித்து வைத்து என் இதயத்தை குடைபவளின் மேனியை என் கரங்களால் கடைந்தெடுக்க நேரம் சீக்கிரம் வாய்க்காதா. நம்ம வச்ச குறி தப்பவில்லை. இருந்தாலும் சுவைத்துவிட முடியவில்லையே என்று ஏங்கினான் புவியரசு.

காதலின் உச்சத்திற்கு சென்றான் புவியரசு. அதனைக் கொண்டாடும் விதமாக சத்யம் லாட்ஜில் அறை எடுத்து தன் நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்து மகிழ்ந்தான்.

மாப்ள ஒனக்கு மச்சம்டா. இல்லனா பேரழகின் பிறப்பிடமாய் திகழும் அவள் கிடைப்பாளா. இன்னும் அவள எங்கயும் கூட்டிப் போகலயா. என்னடா இப்புடி சொதப்புற. வாழ்க்கையின் ரகசியத்தை நாங்கள் சொல்லித் தரனுமா என்னா… மதுவுக்குள் மூழ்கிய நண்பர்கள் சொற்களை வழிந்தோடச் செய்தார்கள். மதுவுக்குள் மூழ்கியவாறே அந்தச் சொற்களை மாலையாக்கி அணிந்து மகிழ்ந்தான்.

ஆடிட்டர் கோவிந்தராஜின் எழுபதாவது பிறந்த நாள் விழாவினை அலுவலகத்தில் எல்லோரும் கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள். இரவு விருந்துடன் விழா நிறைவு பெற ஏழு மணியானது.

நவநீதசுந்தரியின் அலைபேசி சினுங்குவதும் அமைதியாவதுமாக இருந்தது. ஒருகட்டத்தில் அதன் ஒலியளவைக் குறைத்து வைத்தாள். கவனித்துக் கொண்டிருந்த ஆடிட்டர் கோவிந்தராசு மாடியிலிருந்து வெளியில் வாசலைப் பார்த்தார். புவியரசு வீதியில் அலைபேசியை நோண்டிக்கொண்டு நின்றான். உள்ளே வந்தவர் நவநீதசுந்தரியை பார்த்தார். அவள் அலைபேசியில் குறுந்தகவல் ஒன்றை பதிவு செய்துகொண்டு இருப்பதை அவளின் பின்புறம் இருந்த நிலைக் கண்ணாடி காட்டிக் கொடுத்தது. குறுஞ்செய்தியை அனுப்பியவள் தனது கைப்பைக்குள் அலைபேசியை வைத்தாள்.

வேகமாய் மாடியிலிருந்து வீதியை பார்த்தார். புவியரசு அலைபேசியை சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு மாடியை திரும்பி பார்த்தபடி சென்றுகொண்டிருந்தான்.

நவநீதசுந்தரியின் நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாமல் வழக்கத்தைவிட சுறுசுறுப்பாக காணப்பட்டாள். யாமினி வராத நாட்களில் புவியரசோடு காரில் அவளது ஊர் எல்லைவரை செல்வதை ஆடிட்டர் கோவிந்தராசுவிடம் நண்பர் செங்குட்டுவன் பலமுறை நேரில் பார்த்ததாக சொல்லியிருக்கிறார்.

விழா முடிந்ததும் நவநீதசுந்தரியை தனது காரில் ஏற்றிக் கொண்டு பேருந்து நிலையம் வந்தார். புவியரசு பின்தொடர்ந்து கொண்டே இருந்தான். வீட்டுக்குப் போயிட்டு எனக்கு போன் பண்ணும்மா. நாளைக்கி மதியம் வந்தால் போதும். உனக்கும் சீக்கிரம் மூன்றரை பவுன்ல நெக்லஸ் வாங்கனும். உங்க அப்பாகிட்ட சொல்லி ஒனக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளை பாக்கச் சொல்லனும் என்று சொல்லிக்கொண்டே தனது காரை ஓரமாக நிறுத்தினார். அவள், வர்றேங்க சார் என்றவாறு பேருந்தில் ஏறினாள். பேருந்து புறப்பட்டது. புவியரசின் அழைப்பு வந்துகொண்டே இருந்தது. ஆடிட்டர் பார்த்துக்கொண்டே இருந்ததால் பேருந்து மறையும் வரை அலைபேசியின் ஒலியளவை குறைத்தே வைத்திருந்தாள்.

“ஏங்க இப்புடி பறக்குறீங்க. நான்தான் வர்றேனு சொல்லிட்டேன்ல. ராத்திரி பூரா தூங்கவிடல. கல்யாணம் வரைக்கும் பொறுத்திருக்க முடியாதா. அவ்ளோ அவசரமா. சார் மத்தியானம் ஆபிஸ்க்கு வரச்சொன்னார். நா ஒடம்பு சரியில்லைனு லீவு சொல்லிட்டேன். ஒங்களுக்காக நான், எங்க சார்கிட்ட சொன்ன முதல் பொய். இன்னும் எத்தன பொய் சொல்ல வைக்கப் போறீகளோ” சொல்லிக்கொண்டே கட்டிலில் அமர்ந்தாள். சாய்ந்தரம் கொண்டு போய் டவுன்ல விட்ருங்க. அப்பதான் ஆபிஸ் முடிஞ்சு போறமாதிரி எங்க ஊர் பஸ்ல வீட்டுக்கு கெளம்ப முடியும்.” முந்தானையை வலது கை விரல்களால் பின்னிக்கொண்டிருந்தாள்.

“இப்பவே மணி பன்னண்டாச்சு. நாலு மணிக்கு கார்ல கெளம்புனா ஆறுமணிக்கெல்லாம் போய்டலாம். இந்த லாட்ஜ்க்கு ஒருநாள் வாடகை பதினஞ்சாயிரம். எல்லாம் ஒனக்காகத்தான். வா…. அடங்கா பசியோடு இருக்கேன் என்னை அப்படியே அடக்கிவிடு” மேல்சட்டை பணியனை கழட்டி கட்டிலில் போட்டவன் அவளை நெருங்கி தோள்களில் கை போட்டான். தொட்டால் சினுங்கியாய் வெட்கத்தில் குறுகிப் போனாள்.

அவளை மார்போடு அணைத்தான். தூண்டில் மீனாய் துடித்தாள். என்னங்க… நான் சொன்னேனே வாங்கி வந்தீங்களா… முனுமுனுத்தாள். ம்…. வாங்கி வந்திருக்கேன். கொஞ்சம் குடிச்சாலே போதை இமயமலை உச்சிக்கு கொண்டு போய்டும். அதோடு உன்னோட போதையும் சேர்ந்தால் எனக்கு கண்ணே தெரியாது. அதாங்க எனக்கு வேணும்… சொல்லிக்கொண்டே மதுப்பாட்டிலை திறந்து கண்ணாடி குவளையில் ஊற்றினாள். அவன் ஒட்டுமொத்தமாக தனது ஆடைகளை களைந்து மெல்லிய துண்டு ஒன்றை கட்டியிருந்தான்.

சன்னல் கதவினை திறந்தாள். வெளிக்காற்று உள்ளே நுழைந்து வேடிக்கைப் பார்த்தது. எதற்கு சன்னலை திறந்தாய் என்பது போல் கண்களை உயர்த்தினான். நாம் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து அந்தச் சூரியன் கொஞ்ச நேரம் வெட்கத்தில் குளிரட்டுமே என்றாள்.

என்னங்க கல்யாணத்துக்குப் பிறகு உங்கப் பசியை அடக்க முடியாமல் திணறப் போறேன். அவன் மதுவை குடித்துக்கொண்டே அவளை இறுக அணைத்தான். என்னங்க எதையும் நீங்க முழுசா சாப்டுவீங்களா இல்ல அறைகுறைதானா.

நான் முழுசா உன்ன சாப்பிடப் போறத பாக்கத்தானே போற. எப்புடி நம்புறது. அப்புடினா இந்தப்‌ பாட்டில் முழுவதுமாய் குடிங்க பாக்கலாம்.

ம்….அப்படியா.

ம்… அப்படித்தான்.

இத முழுசா குடிச்சா என் கண்ணே எனக்குத் தெரியாது. அப்படினா இன்னக்கி ராத்திரி இங்கயே தங்கிருவோமா… எத்தன ராத்திரி வேணாலும் ஒங்க கூட தங்குறேன்ங்க. அவளின் சொற்களில் சொக்கிப் போனவன் ஆனந்தத்தில் அப்படியே குடித்தான்.

வாய் அவனுக்கு உளர ஆரம்பித்தது. அவளின் மார்பில் சாய்ந்தான். முந்தானையின் வாசத்தை நுகர்ந்தபடி அவளையும் நுகர கட்டிலில் அவளோடு சாய்ந்தான். அவனால் அவளை இப்போது நுகர முடியாது என்பதை உணர்ந்தாள்.

தனது பையை திறந்தாள். அவனைப் பார்த்தாள். மேற்கு சுவரையும் பார்த்தாள். கண் இமைக்கும் நேரத்தில் அவனது குறியை அறுத்து சன்னலில் எறிந்தாள். அது தார்ச்சாலையில் விழ, வேகமாக வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. . நவ….நவ…. என்று அலறினான். அலறல் சத்தம் கேட்டு லாட்ஜில் இருந்தவர்கள் அறையை நோக்கி ஓடிவந்தனர்.

“எத்தனப் பொண்ணுகள நாசம் பண்ணியிருப்ப. அப்பாவி புள்ளைகள மயக்கி கெடுத்து அத வீடியோ எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்புறியா. பாருடா….. பாரு…..” என்று கத்திக்கொண்டே தனது பைக்குள்ளிருந்து செய்தித்தாள்களை எடுத்து அவன் மேல் போட்டாள். “இந்த கவிதாளும் நானும் ஆறாங்கிளாசுலருந்து ஒன்னாப் படிச்சோம்டா. என் உசுருடா அவ. அவளை மயக்கி கெடுத்து கொன்னுட்டியேடா. பணம் இருக்க திமிருல ஜெயிலுக்குப் போறதும் வாரதும் ஒனக்குப் பழகிப் போச்சுல. நா என்ன கூறுகெட்ட சிறுக்கியா. ஒன்ன நேரா எதிர்க்க என்னால முடியாதுடா. ஆனா எனக்கு இதவிட்டா வேற வழி தெரியல. ஒனக்காகவேதான்ட அங்க வேலக்கி சேந்தேன். இப்ப கூட என்னைய படம்பிடிக்க கேமராவ செட்பண்ணி வச்சுருக்கே. நீ செட் பண்ணுன வீடியோ உலகம்பூரா போகட்டும். நாசம் பண்றவனுகளுக்கு பயம் வரட்டும்”

அவள் சொல்வது எதுவுமே அவன் காதில் விழவில்லை. கைகளை இடுப்பில் பொத்திக்கொண்டு கத்தினான். இரத்தம் பீறிட்டு வழிந்தோடியது. கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவள் திறக்கவில்லை. நான்கைந்து பேர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தனர்.

செய்தித்தாள்கள் கட்டிலில் சிதறிக் கிடக்க கைகளில் இரத்தம் வழிய பெருமூச்சுவிட்டபடி கத்தியுடன் நின்றாள் நவநீதசுந்தரி. இரத்த வெள்ளத்தில் கட்டிலில் செத்துக் கிடந்தான் புவியரசு.

சோலச்சி

Continue Reading

Trending

Copyright © 2021 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். Developed by : Marxist Info Systems, Coimbatore.