Connect with us

ஆளுமைகள்

நா. வானமாமலை

Published

on

அறிஞர் நா. வானமாமலை: நாட்டார் வழக்காற்றியலின் முன்னோடி

சாதாரண மக்களின் பண்பாட்டைப் பதிவுசெய்யும் நாட்டார் இயலை ஒரு கல்விசார் படிப்பாக மாற்றியதில் நா. வானமாமலையின் பங்கு முக்கியமானது. தமிழ் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரான இவர் 1917-ம் ஆண்டு டிசம்பர் 7 அன்று நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் பிறந்தவர். நாட்டார் பாடல்களையும் கதைகளையும் தேடிச் சேகரித்துப் பதிப்பித்தார். தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள், ஐவர் ராசாக்கள் கதை, கட்டபொம்மு கூத்து, கட்ட பொம்மன் கதைப்பாடல், காத்தவராயன் கதைப்பாடல், கான்சாகிபு சண்டை, முத்துப்பட்டன் கதை, வீணாதிவீணன் கதை போன்றவை அவற்றுள் முக்கியமானவை. இந்தப் புத்தகங்கள் மூலம் பதிவுசெய்யப்படாத வெகு மக்கள் பண்பாட்டை நா.வா. பிரதி நிதித்துவப்படுத்தினார்.

மானுடவியல், தொல்லியல், கல்வெட்டியல் ஆகியவற்றின் அடிப்படை யில் எழுதப்பட்ட பண்பாட்டு வரலாற்றுக்கு மாற்றாக இந்தப் பின்னணியில் நாட்டார் வழக்காற்றியலையும் இணைத்துத் தமிழ்நாட்டின் சமூகப் பண்பாட்டு வரலாற்றை உருவாக்க முதல் விதையைத் தூவியவர் நா.வா.தான். இது மட்டும் அல்லாமல் இன்றைக்குள்ள தமிழின் முக்கியமான ஆய்வாளர்கள் பலருக்கும் அவர் வழிகாட்டியாக விளங்கினார். ஆ.சிவசுப்பிரமணியன், அ.கா.பெருமாள் போன்ற அறிஞர்கள் பலருக்கும் ஊக்கமளித்துவந்தார்.

மேலும் கல்வித் துறை சார்ந்தவர்கள் மட்டுமே ஆய்வு மேற்கொள்ள முடியுமென்ற எண்ணத்தை மாற்றியமைக்கும் விதமாக ‘நெல்லை ஆய்வுக் குழு’ என்ற அமைப்பை 1967-ல் தொடங்கி நடத்தினார். தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.போத்தையா வாத்தியார் போன்றவர்கள் நாட்டார் பாடல்களைத் தொகுப்பதற்கு நா.வா. உற்சாகம் வழங்கியுள்ளார். இம்மாதிரியான நாட்டார் ஆய்வுகளுக்காக 1969-ல் ‘ஆராய்ச்சி’ என்ற சிற்றிதழையும் தொடங்கினார். இதில் ஆராய்ச்சி தொடர்பான கட்டுரைகளை வெளியிட்டு நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளைக் கவனப்படுத்தினார்.

இளம் வயதிலேயே தமிழ் இலக்கியங் களையும், மேலை இலக்கியங்களையும் வாசித்த அனுபவம் கொண்டவரான நா.வா., இயல்பிலேயே மனித நேய உணர்வைப் பெற்றிருந்தார். அதனால் கம்யூனிசச் சிந்தனைகள் அவருள் தாக்கத்தை ஏற்படுத்தியது. வேதியியலில் இளங்கலையும் தமிழில் முதுகலையும் முடித்துத் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்த அவர், தன் இயக்கச் செயல்பாடுகளுக்காக அப்பணியைத் துறந்தார்.

அவரது சொந்த ஊரான நாங்குனேரி வட்டார விவசாயிகள் இயக்கத்திலும், நெல்லை மாவட்டத் தொழிலாளர் இயக்கத்திலும் நேரடியாகச் செயலாற்றி வந்தார். 1948, 1970 இருமுறை தன் இயக்கச் செயல்பாடுகளுக்காகச் சிறை வாசத்தை அனுபவத்திருக்கிறார். 1950-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி மீளவிட்டானில் சரக்கு ரயில் கவிழ்க்கப்பட்டது. இந்தச் சம்பவம், ‘நெல்லைச் சதி வழக்கு’ என அழைக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாலதண்டாயுதம் போன்றவர்கள் இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டனர். இந்தச் சதிச் சம்பவத்தில் நா.வா. விசாரணைக்காகக் கைதுசெய்யப்பட்டார். நில மீட்சிப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஒரு மாதத்துக்கு மேல் சிறைத் தண்டனையில் இருந்த நா.வா. திவான் ஜர்மன்தாஸின் ‘மகாராஜ்’ என்ற இந்திய சமஸ்தான மன்னர்களைப் பற்றிய நூலை மொழிபெயர்த்தார். நா.வா.வின் பங்களிப்புக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழம் ‘இலக்கிய கலாநிதி’ பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. 1980-ம் ஆண்டு பிப்ரவரியில் இயற்கை எய்திய நா. வானமாமலை இன்றைக்கும் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுத் துறையில் ஒரு சிந்தனைப் பள்ளியாக இருக்கிறார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஆளுமைகள்

தா. பாண்டியன்

Published

on

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் பொதுச்செயலாளர்- நாடறிந்த அரசியல் இலக்கியப் பேச்சாளர் தோழர் தா. பாண்டியன்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளமலைப்பட்டி கிராமத்தில் தாவீது- நவமணி ஆகியோருக்கு 2ஆவது மகனாக 1932 மே18இல் பிறந்தார்.

உசிலம்பட்டி உயர்நிலைப் பள்ளியில் படித்து பின்பு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இளநிலை பொருளாதாரம் படித்தார் (1953-55) மாணவர் பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். காரைக்குடி கம்பன் விழாவில் உரையாற்ற வந்த பேராசான் ஜீவாவுடன் தொடர்பு ஏற்பட்டது. படிப்பு முடித்து அதே கல்லூரியில் ஆங்கிலத் துறை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
1961இல் கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தோழர் ஜீவாவின் ஆணையை ஏற்று ஆசிரியர் பதவியைத் துறந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தார். சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டே இயக்கப் பணிகளில் ஈடுபட்டார்.
1963இல் ஜீவாவின் மறைவுக்குப் பிறகு, தோழர் பாலனுடன் இணைந்து கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநாடுகளை (1963,1965) நடத்தினார்.தமிழ்நாடெங்கும் பாரதி விழாக்கள், கல்லூரி ஆண்டு விழாக்களில் தமிழ் முழக்கம் செய்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், தேசியக் குழு உறுப்பினர், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளை வகித்தவர். இரண்டு முறை வடசென்னை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றவர்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் இளைய ஜீவாவாக, 89 வயது இறுதிக் காலம் வரை இயங்கிய தா.பா. 2021 பிப்ரவரி 26இல் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.
தா.பா. எழுதிய நூல்கள்: பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, ரத்தப் பொட்டும் ரப்பர் அழிப்பும், காலச்சக்கரம் சுழல்கிறது, சோக வரலாற்றின் வீரகாவியம், கம்பனின் அரசியல் கூட்டணி, ராஜிவ் காந்தியின் கடைசி மணித்துளிகள், கொரொனாவா முதலாளித்துவமா, விழி திறந்தது வழி பிறந்தது, இயக்கத்தை இயக்கிய புலவன் பட்டுக்கோட்டை, படுகுழியில் பாரததேவி, வரலாறு நம்மை அடையாளம் காட்டும், தெய்வத்திற்கு என்ன வேலை, மேடைப் பேச்சு, நெல்சன் மண்டேலா, ஜீவாவும் நானும், திருவள்ளுவனின் அரசியல் பொருளாதாரம், கல்லும் கதை சொல்லும், சமுதாயமும் தனிநபரும், பொதுவுடைமையரின் வருங்காலம்.
மொழி பெயர்ப்புகள்: கன்னி நிலம், லாரி டிரைவரின் கதை, அரசியல் பொருளாதாரம்.


Continue Reading

ஆளுமைகள்

பேராசான் ப. ஜீவானந்தம்

Published

on

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நிறுவனர்- இலக்கியப் பேராசான் ப. ஜீவானந்தம். குமரி மாவட்டம் பூதப்பாண்டியில் பட்டத்தார்- உமையம்மை ஆகியோருக்கு 1907 ஆகஸ்ட் 21ஆம் நாள் பிறந்து, சொரிமுத்து என்ற இயற்பெயர் கொண்டு பின்னர் ஜீவா என அழைக்கப்பட்டார்.
சிறுவயதிலேயே பள்ளி மாணவர் தலைவனாகத் திகழ்ந்தார். சாதி வேற்றுமை பாராத சமத்துவப் பார்வையுடன் மாணிக்கம் என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த தனது நண்பனை சிவன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று ஊராரின் கண்டனத்திற்கு ஆளானார். கோட்டாறு உயர்நிலைப் பள்ளியில் படித்தபோதே காந்தி வாசக சாலை, விவேகானந்தர் கால்பந்தாட்டக் குழு ஆகிய சிறார் அமைப்புகளை உருவாக்கினார்.
தனது தீவிரச் செயல்பாடுகளுக்கு தந்தை தடை போட்டதால் வீட்டை விட்டு வெளியேறினார்.
1924இல் பெரியார் ஈ.வே.ரா. தலைமையில் நடந்த வைக்கம் போராட்டம், 1926இல் சுசீந்திரம் தாணுமலையான் கோவில் ஆலய நுழைவுப் போராட்டம் எனத் துவங்கி சேரன்மாதேவியில் வ.வே.சு. அய்யர் நடத்திய ஆசிரமத்தில் சாதிப் பாகுபாட்டுடன் உணவு வழங்கப்பட்டதை எதிர்த்துப் போராடி  வெளியேறினார்.
பிறகு காரைக்குடி அருகே சிராவயலில் 1927இல் காந்தி ஆசிரமம் நிறுவி ஏழை மாணவர்களுக்கு சாதி வேற்றுமை பாராமல் கல்வி புகட்டினார்.அங்குதான் புகழ்பெற்ற காந்தி-ஜீவா  சந்திப்பு நிகழ்ந்து.
1929இல் மதுவிலக்குக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இராமநாதபுரம் மாவட்டமெங்கும் தீவிர மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தார். 1930இல் ஈரோட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.

தொடந்து, தமிழ்நாடெங்கும் சுயமரியாதைக் கருத்துகளைப் பரப்புவதில் ஈடுபடுகிறார். கூடவே, தேசவிடுதலை பெண்விடுதலை லட்சியங்களை மேடைகளில் முழங்குகிறார். 
1932 சட்ட மறுப்பு இயக்கப் பிரச்சாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றார். சிறை மீண்ட ஜீவா, சிங்காரவேலர், பெரியாரோடு சேர்ந்து சமதர்மக் கருத்துகளை மக்களிடையே பரப்புகிறார். 1932இல் சிங்காரவேலர், ஜீவா இணைந்து தயாரித்த ஈரோட்டுத் திட்டத்தை பெரியார் ஏற்கிறார். பின்னர், நீதிக்கட்சித் தலைவர்களின் எதிர்ப்பால் பெரியார் அதைக் கைவிடுகிறார்.

1934இல்  “நான் ஏன் நாத்திகனானேன்” என்ற பகத்சிங் எழுதிய நூலை ஜீவா மொழியர்த்து குடியரசுப் பதிப்பகம் வெளியிட, ஜீவா கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாகிறார். நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைத் தொழிலாளர் போராட்டம், கோவை லட்சுமி மில் தொழிலாளர் போராட்டம், நெல்லை விக்ரமசிங்கபுரம் ஆலைத் தொழிலாளர் வேலைநிறுத்தம், பசுமலை மகாலட்சுமி மில் போராட்டம் என உழைக்கும் வர்க்கத்தின் உரிமைப் போர்களில் முன்னிற்கிறார். 
பெரியாரிடமிருந்து பிரிந்த ஜீவா, திருச்சியில் சுயமரியாதை சமதர்மக் கட்சியைத் தொடங்குகிறார். அதில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் தலைவர் டாங்கேயின் ஆலோசனையை ஏற்று, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைகிறார்.1936இல் சேலம் மாநாட்டில், அதன் பொதுச்செயலராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 

ஜமீன் ஒழிப்புத் தீர்மானத்தை ஆதரித்து ஆவேசமாகப் பேசி எழுச்சியூட்டுகிறார். 1939இல் யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காகக் கைதாகிறார். மாநிலத்தை விட்டே நாடு கடத்தப்பட்டு புதுவை, பம்பாய் என அலைக்கழிக்கப்படுகிறார். பம்பாயில் மீண்டும் கைதாகி வேலூர் சிறைக்கு கொண்டு வரப்படுகிறார்.

விடுதலைக்குப்பின் தமிழ்நாட்டில் பொதுவுடமை இயக்கத்தை முழுவீச்சுடன் கட்டியமைக்கும் பணியில் எஸ்.வி. காட்டே, பி. ராமமூர்த்தி, சுந்தரய்யா, ஏஎஸ்கே, பி. சீனிவாசராவ், வ. சுப்பையா  ஆகியோருடன் இணைந்து பாடுபடுகிறார். 1937இல் “ஜனசக்தி” இதழ் தொடங்கப்படுகிறது. ஜீவா அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்று, உணர்ச்சியூட்டும் கட்டுரைகளை எழுதுகிறார்.  மகாகவி பாரதியையும் கம்பனையும்  மானுடத்தைப் போற்றிய கவிகளாக மக்களிடையே கொண்டு செல்கிறார். 
காரைக்குடி கம்பன் விழா, எட்டயபுரம் பாரதி விழாக்களில் முழங்கி முத்திரை பதிக்கிறார். விடுதலைக்குப் பின் மொழிவாரி மாநிலங்களின் கோரிக்கையை வென்றெடுப்பதில் ஜீவாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

1952இல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தமிழுக்கும் தமிழருக்கும் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை.
1958இல் மக்களுக்கான படைப்புகளுக்கு இடமளிக்கும் “தாமரை” இதழை 1958இல் தொடங்குகிறார். இடையறாத பிரச்சாரப்  பயணங்களுக்கிடையே, ஜீவாவின் எழுத்துப் படைப்புகளும் வெளியாகின.
பாரதி பற்றி, மொழி பற்றி, புதுமைப்பெண், மதமும் மனித வாழ்வும், கலையும் இலக்கியமும், இலக்கியச் சுவை, சோசலிஸ்ட் தத்துவங்கள், கம்பன் கண்ட தமிழகம், இலக்கியத்தில் சோசலிஸ்ட் எதார்த்தவாதம், கம்பனும் பாரதியும், பாரதி பாடல்கள், ஜீவாவின் பாடல்கள் ஆகியன அவரது நூல்கள்.
ஜீவாவின் மகத்தான பங்களிப்பான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 1961இல் கோவையில் கால்கோளிடப்பட்டது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத தடம் பதித்த இலக்கியப் பேராசான் ஜீவா 1963 ஜனவரி 18இல் அவரது 56ஆவது வயதில் காலமாகி, வரலாறாய் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

Continue Reading

ஆளுமைகள்

கே. பாலதண்டாயுதம்

Published

on

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 1965 பொள்ளாச்சி மாநாட்டையும், 1968 திருச்சி மாநாட்டையும் முன்னின்று நடத்தி, பெருமன்றத்தின் துணைத்  தலைவர் பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றியவர் தோழர் கே.பாலதண்டாயுதம்.
பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி காளகஸ்தியார்- சுப்பாத்தாள் தம்பதியினருக்கு 4ஆவது குழந்தையாக 1918 ஏப்ரல் 2ஆம் நாளில் பிறந்தார். பொள்ளாச்சி அரசுப் பள்ளியில் படித்து பின்னர் திருச்சி புனித வளனார் கல்லூரியில் புகுமுக வகுப்பு முடித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டவகுப்பில் சேர்ந்தார். அங்கு மாணவர் போராட்டத்தில் தீவிரமாக இயங்கியதால் 1938இல் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். கல்லூரித் தோழி கிளாடிஸ் என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

1939இல் திருச்சியில் ரயில்வே தொழிலாளர் சங்கப் பணிகளில் ஈடுபட்டார். பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். யுத்த எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி ஓராண்டு  சிறையிலிருந்தார். அரசியலா, மண வாழ்க்கையா என்ற சிக்கல் எழுந்தபோது மணவாழ்க்கையைத் துறந்தார். 1940ஆம் ஆண்டிலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். 1942இல் சோவியத் நண்பர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளரானார்.

நெல்லை மாவட்டத்தில் கட்சி அமைப்புபப் பணிகளில்  தீவிரமாகச் செயல்பட்டார். பதுக்கலுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சிகளுக்குத் தலைமை தாங்கினார்.1948 ல் கட்சி எடுத்த  முடிவின்படி, தலைமறைவாக இருந்து கட்சி வேலைகளைத் தொடர்ந்தார். 1953ல் நெல்லை சதி வழக்கில் கைதானார்.

பிணையில் வெளிவந்த காலத்தில் கட்சிக் குடும்பத்தைச் சேர்ந்த துல்ஜாராணியை மணந்தார். ஆனால் சதிவழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 1953 முதல் 1962 வரை பத்தாண்டுகள் வேலூர், சேலம், கோவை சிறைகளில் கழித்தார்.  சிறைக் கைதிகளின் உரிமைகளுக்காகப் போராடியதுடன், அவர்களின் கலை, இலக்கியத் திறமைகளை வெளிக் கொணருவதில் ஊக்க சக்தியாக விளங்கினார்.
1962இல் விடுதலை பெற்றவுடன் தமிழ்நாடெங்கும் பயணித்து அரசியல் முழக்கம் செய்தார். 1971 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1973 மே 31இல் தலைநகர் அருகே நடந்த விமான விபத்தில் காலமானார்.
அவர் எழுதிய நூல்கள்- மார்க்சிய ஞானரதம், இலக்கியத்தில் மனிதநேயம்,உலகப்பன் – நாடகம்,தேனி – மொழிபெயர்ப்பு நூல், ஆயுள் தண்டனை அனுபவங்கள்,கலையும் வாழ்க்கையும்

Continue Reading

Trending

Copyright © 2021 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். Developed by : Marxist Info Systems, Coimbatore.