Connect with us

அறிமுகம்

மானுடம் வென்றதம்மா!

பொதுவுடமை இயக்கத்தின் தமிழ் முகமாய்ப் பரிணமித்த இலக்கியப் பேராசான் ப. ஜீவானந்தம், 1961 மேத் திங்களில் கோவை மாநகரில் தோற்றுவித்த ஒரு பண்பாட்டு இயக்கம்தான் ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்’.

இந்தியப் பொதுவுடமை இயக்கத்தின் சிற்பி  தோழர் பி.சி. ஜோஷி,   1936இல்  தோற்றுவித்த ‘முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’, 1943 இல் தோற்றுவித்த ‘இந்திய மக்கள் நாடக மன்றம்’ ஆகிய இரு பண்பாட்டு அமைப்புகளின் ஒரு வழித்தோன்றலாக, ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்’ உதயமானது.

இது தமிழ் மண்ணின்- மக்களின் மரபுகளை இனங்கண்டு, கலைஞர்கள் மற்றும்  எழுத்தாளர்களின் அமைப்பாக மட்டுமின்றி ஆய்வாளர்களையும், கலை,  இலக்கிய ஆர்வலர்களையும் உள்ளடக்கிய ஒரு வெகுமக்கள் அமைப்பாகும்!       

சிந்துவெளி நாகரீகத்தின் சுவடுகளிலிருந்து இதழ் விரித்து, பாரம்பரியமாக இயற்கை மரபையும் மானுட மரபையும் தன் இரு கண்களாகக் கொண்ட தனித்தன்மையான தமிழ்ப் பண்பாட்டுச் சூழல்தான் பெருமன்றத்தின் செயல்தளம்.

சமூக மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட முற்போக்கு எண்ணம் கொண்ட கலைஞர்களும், எழுத்தாளர்களும் கலை, இலக்கியத்தைச்  சமூக அடிப்படையிலும், விஞ்ஞான அடிப்படையிலும் கண்டு,  புதிய பண்பாட்டு வெளிச்சத்தில் அணுகிய ஒரு திருப்புமுனைக் காலத்தில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தோன்றியது.  

இந்தத் திசைவழியில் விஜய பாஸ்கரனின் “சரஸ்வதி”யும் , தொ.மு.சி. ரகுநாதனின் “சாந்தி”யும்,  ஜீவாவின்  “தாமரை”யும்  முற்போக்கான படைப்பாளிகளை ஓரணியில் ஒருங்கிணைக்கத் தொடங்கின. ‘கலை இலக்கியம் மக்களுக்காக’ என்ற பதாகை தமிழகம் முழுவதும் பட்டொளி வீச, அதன் தொடர்ச்சியாக  நூற்றுக்கணக்கான கலை, இலக்கிய அமைப்புகள் தமிழ்ப் பரப்பில் தோன்றி வளர்ந்தன.  

1950களில் நிலவிய நசிவுக் கலை இலக்கியப் போக்குகளுக்கு எதிராகப் போராடவும், புதுமையான கலை இலக்கியங்களைப்  படைத்துப் பரப்பவும் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் ஆய்வாளர்களையும்,  கலை இலக்கிய ஆர்வலர்களையும் ஓரணியில் ஒன்று திரட்டியதன் நேரடி விளைவுதான் இந்தப் பெருமன்றம்.

தன் ஒவ்வோர் அங்கத்தையும் படைப்பாளியாக மட்டுமல்லாமல், பண்பாட்டுச் செயற்பாட்டாளராகவும் வளர்த்திடும் திசைவழியில் செயலாற்றி வருகிறது ஜீவாவின் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்..

இன்று, சமகால தத்துவ விசாரணைகள் எல்லாவற்றிலும் ஆர்வத்துடன் பெருமன்றம் ஈடுபட்டு வருவதால், கருத்தியல் தளமும் பெருமன்றத்தின் புதிய விளைநிலமாகிக் கொண்டிருக்கிறது.

பன்முகப் பரிமாணம் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தையே ஒற்றைப் பரிமாணத்தில் ஒதுக்கித் துண்டாடிக் கொண்டிருக்கும் மதவாத அரசியலின் மறைபொருளாக இருக்கும் மனுதர்மத்துக்கு எதிரான கருத்தியல் போராட்டத்திலும் முன்னணியில் நிற்கிறது; ஜனநாயகம், ஜாதிகள் ஒழிந்த சமூக நீதி, பாலின சமத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள் உள்ளிட்ட சமதர்மம் என்னும் பதாகையை நெஞ்சில் ஏந்திப் பயணிக்கிறது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். வள்ளுவன், கம்பன், பாரதி, பாரதிதாசன், தமிழ் ஒளி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வழியில், பொருளாதாரச் சுரண்டலை முற்றாக ஒழித்து, சமூக ஒடுக்குமுறைகளை வேரடி மண்ணோடு கெல்லி எறிந்து, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக வாழ்ந்து செழிக்கும் புதிய தமிழகம் படைக்கவும் கவிஞர்களையும், கலைஞர்களையும், எழுத்தாளர்களையும், சிந்தனையாளர்களையும், விமர்சகர்களையும், ஆய்வாளர்களையும், கலை இலக்கிய ஆர்வலர்களையும் ஓரணியில் ஒன்று சேர்ந்து பாடுபட அறைகூவி அழைக்கிறது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.

Copyright © 2021 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். Developed by : Marxist Info Systems, Coimbatore.